
‘’நீரஜ் சோப்ராவின் முன்னாள் பயிற்சியாளர் உவ் ஹான் மோடி அரசை விமர்சித்தார்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் செய்தி ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+91 9049044263) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டிருந்தார்.
இதே செய்தியை ஃபேஸ்புக்கிலும் பலர் உண்மை என நம்பி ஷேர் செய்வதைக் கண்டோம்.
உண்மை அறிவோம்:
சமீபத்தில் நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா சார்பாக, ஈட்டி எறிதல் பிரிவில் பங்கேற்ற நீரஜ் சோப்ரா, சிறப்பான முறையில் விளையாடி, தங்கப் பதக்கம் வென்றார். அவருக்குப் பல்வேறு தரப்பிலும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
நீரஜ் சோப்ராவின் சாதனையை பாராட்டி பிரதமர் மோடி வாழ்த்துகளையும் தெரிவித்திருந்தார்.
பிரதமர் மோடி மற்றும் இந்திய விளையாட்டுத் துறை சார்பாக தரப்பட்ட ஒத்துழைப்பிற்கு நீரஜ் சோப்ரா நன்றி தெரிவித்துள்ளார்.
அடிப்படையில் ராணுவ வீரரான நீரஜ் சோப்ரா ஒலிம்பிக் போட்டிக்குத் தயாரான முறை, அவரது அரசியல் நிலைப்பாடு உள்ளிட்டவை பற்றி சமூக வலைதளங்களில் நாள்தோறும் புதுப்புது தகவல்கள் பகிர்வதை சிலர் வாடிக்கையாகச் செய்து வருகின்றனர்.
அந்த வரிசையில் பகிரப்படும் ஒரு தகவல்தான், நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட தகவலும்…
முதலில், ஒரு விசயம், உவ் ஹான் தற்போது நீரஜ் சோப்ராவின் பயிற்சியாளர் இல்லை. அவர் மட்டுமே நீரஜ் சோப்ராவை தயார்படுத்திய பயிற்சியாளர் என்றும் சொல்லிவிட முடியாது. நீரஜ் சோப்ராவுக்கு, கிளாஸ் பர்டோனியட்ஸ், கேரி கால்வெர்ட், வெர்னர் டேனியல்ஸ், காசிநாத் நாயக், நசீம் அகமது, ஜெய்வீர் சிங் உள்ளிட்டோர் பயிற்சி அளித்துள்ளனர்.
இதில், ஜெர்மனியை சேர்ந்த உவ் ஹான் 2018-19 காலகட்டத்தில் நீரஜ் சோப்ராவுக்கு பயிற்சி அளித்திருக்கிறார். அதன்பிறகு, நீரஜ் அவரிடம் இருந்து வெளியேறிவிட்டார். காரணம், 2019ல் தோஹாவில் நடைபெற்ற IAAF உலக தடகள சாம்பியன்ஷிப் தொடருக்கு நீரஜ் தகுதிபெறாமல் போகவே, ஹானிடம் இருந்து அவர் விலகிவிட்டார்.
அதன்பிறகு, 2019 முதல் தற்போது வரை நீரஜ்க்கு பயிற்சி அளித்து வருபவர் Klaus Bartonietz ஆவார். நீரஜ் ஒலிம்பிக்கில் சாதித்ததும், கிளாஸ்க்கு நன்றி தெரிவித்து, இந்திய தடகள சம்மேளனம் ட்வீட் வெளியிட்டதை, இங்கே குறிப்பிட விரும்புகிறோம்.
இது தவிர, தனது தற்போதைய பயிற்சியாளர் கிளாஸ்தான் என்று கூறி, நீரஜ் கூட சில நேர்காணலில் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

Sportstar Link I The Quint Link I Timesnow Link
எனவே, தனிப்பட்ட முறையில், டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு நீரஜ் சோப்ரா தயாரானதற்கும், உவ் ஹானுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றே சொல்லலாம். ஏனெனில், 2019ல் நீரஜ் சோப்ரா உவ் ஹானிடம் இருந்து விலகிவிட்டார். இதனை உவ் ஹானும், ஊடகங்களில் கூறியிருக்கிறார்.
அதேசமயம், இந்திய அளவில் ஈட்டி எறியும் வீரர்களுக்கான தலைமை பயிற்சியாளராக, அவர் 2017-18 காலக்கட்டத்தில் இந்திய தடகள சம்மேளனத்தால் நியமிக்கப்பட்டிருக்கிறார். அந்த ஒப்பந்தம் ஓராண்டில் முடிவடைந்த நிலையில், அவருக்கு உரிய ஊதியம் வழங்கவில்லை என்றும், அதனை புதுப்பிக்க விரும்பவில்லை என்றும் கூறி, கடந்த 2 ஆண்டுகளாகவே உவ் ஹான் குற்றம்சாட்டி வருகிறார். அதுதான், உவ் ஹான் மற்றும் நீரஜ் சோப்ரா இடையிலான தொடர்பும்…
உவ் ஹான், இந்தியாவில் நிலவும் அதிக வெப்பநிலை மற்றும் பயிற்சிக்கு தரப்படும் உணவு முறை பற்றி விமர்சிப்பதை வழக்கமாகச் செய்து வருகிறார். கடந்த ஜூன், 2021ல் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில், இந்த குற்றச்சாட்டை அவர் வெளிப்படையாகக் கூறியதால், விளையாட்டு வீரர்கள் மற்றும் மத்திய அரசு வட்டாரத்தில் அதிருப்தியடைந்துள்ளனர்.

இதுதவிர, இந்தியாவில் விளையாட்டுத் துறையை மாற்ற முடியவில்லை என்றோ, இந்திய விளையாட்டுத் துறையை விமர்சித்தோ அவர் கூறியிருக்கிறாரா என்று பார்த்தால், உண்மைதான். இந்தியாவில் விளையாட்டு வீரர்களுக்கு தகுந்த பயிற்சி உதவிகள், உணவு முறைகள் வழங்கப்படுவதில்லை எனக் கூறியிருக்கிறார்.

ஆனால், டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்பப்பட்ட வீரர்களுக்கு தகுந்த உணவு தரப்படவில்லை என அவர் எங்கேயும் கூறவில்லை. அதிலும் குறிப்பாக, நீரஜ் சோப்ராவுக்கு வேண்டுமென்றே சரியான உணவு தராமல் கஷ்டப்படுத்தினர், அதை மீறித்தான் அவர் பதக்கம் வென்றார், என்று அவர் கூறவே இல்லை.

மேலும், இந்த தகவலை உவ் ஹான், ஒலிம்பிக் போட்டி தொடங்கும் முன்பாக, ஜூன் 2021ல் கூறியிருக்கிறார். போட்டி முடிவடைந்த பின் கூறவில்லை. எனவே, பழைய பேட்டியை எடுத்து, அதில் அரசியல் சாயம் பூசி, சிலர் பகிர்கின்றனர். குறிப்பாக, உவ் ஹானுக்கும், நீரஜ் சோப்ரா ஒலிம்பிக் போட்டிக்கு தயாரானதற்கும் தொடர்பில்லை என்பதால், இந்த தகவலில் நீரஜ் சோப்ராவை தொடர்புபடுத்தி பேசுவது ஏற்புடையதல்ல என முடிவு செய்யப்படுகிறது.
இறுதியாக, நாம் ஆய்வு செய்யும் நியூஸ் கார்டில் நீரஜ் சோப்ராவுடன், உவ் ஹான் நிற்பது போன்ற புகைப்படம், டோக்கியோ ஒலிம்பிக்கில் எடுக்கப்பட்டதில்லை. இது கடந்த 2018ம் ஆண்டு Asian Games விளையாட்டில், நீரஜ் தங்கம் வென்றபோது எடுக்கப்பட்டதாகும்.

நீரஜ் சோப்ராவின் தலைமுடி, பயிற்சியாளர் உவ் ஹான் அணிந்துள்ள டிஷர்ட்டின் நிறம், லோகா, அவரது அடையாள அட்டை உள்ளிட்டவற்றை வைத்தே எளிதில் இந்த வேறுபாட்டை அடையாளம் காண முடிகிறது.

The Quint Link I The Hindu Link I FirstPost Link
இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் தெரியவரும் விவரம்,
1) நீரஜ் சோப்ராவின் தற்போதைய பயிற்சியாளர் உவ் ஹான் இல்லை. அவரிடம் இருந்து 2019 காலகட்டத்திலேயே நீரஜ் விலகி, கிளாஸிடம் சேர்ந்துவிட்டார்.
2) இந்திய தடகள வீரர்கள் (ஈட்டி எறிதல்) தொடர்பான பயிற்சிக்கு உவ் ஹானை கடந்த 2017-18 காலக்கட்டத்தில் இந்திய தடகள சம்மேளனம் பணிக்கு அமர்த்தியுள்ளது. அந்த ஒப்பந்தம் காலாவதியான நிலையில், அதனை புதுப்பிப்பது தொடர்பாக, கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், அவர் தொடர்ச்சியாக இந்திய விளையாட்டுத் துறையை விமர்சித்து வருகிறார்.
3) உவ் ஹான் 2021, ஜூன் மாதம், குறிப்பாக, ஒலிம்பிக் போட்டி தொடங்கும் முன் அளித்த பேட்டி இதுவாகும். இதனை ஒலிம்பிக் போட்டி முடிவுகளுடன் தொடர்புபடுத்தி தற்போது எடுத்து புதிய தகவல்போல பகிர்வது ஏற்புடையதல்ல.
4) நீரஜ் சோப்ராவை மட்டும் ஒலிம்பிக் போட்டியின்போது, இந்திய அரசு சரியான உணவு வழங்காமல் அலைக்கழித்தது என்று கூறுவது முற்றிலும் தவறான தகவல்.
5) 2018 ஆசிய விளையாட்டுத் தொடரில் எடுக்கப்பட்ட நீரஜ் – உவ் ஹான் புகைப்படத்தை இணைத்து, இந்த நியூஸ் கார்டை தயாரித்து பகிர்ந்துள்ளனர்.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…
Facebook Page I Twitter Page I Google News Channel

Title:நீரஜ் சோப்ராவின் பயிற்சியாளர் யார்? மோடி அரசை விமர்சித்த உவ் ஹான்- முழு விவரம் இதோ!
Fact Check By: Pankaj IyerResult: Missing Context

இந்த பதிவு தான் மிகவும் தவறானது. உண்மையை கூறுவதாக நினைத்து விட்டு பொய்யை பரப்புகிறார்கள். அந்த பதிவில் ஹான் சொல்லியது ஒலிம்பிக்கில் நீரஜ் பற்றியது அல்ல மாறாக பொதுவாகவே இந்தியாவில் நடக்கின்ற அவலம். ஆனால் ஒலிம்பிக் காலகட்டத்தில் தான் அந்த செய்தி பேர் பற்றது.
Modi pathi vimarsitha ivlo menakettu intha thagavala kandupudichi soldringa, Delhi la poradra vivasayigalai kalisthan theeviravathigal nu modi government solli atha share pandranga, athan unmayai yen velikkondu varla