FACT CHECK: எஸ்.பி. வேலுமணி வீட்டில் சிக்கிய தங்கம், பணம் என்று பரவும் பழைய படங்கள்!
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் சிக்கிய பணம், நகைகள் என்று சில படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன. அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
அசல் பதிவைக் காண: Facebook I Archive
கட்டுக்கட்டாக தங்க நகைகள் அடுக்கி வைக்கப்பட்ட படங்கள், ரூபாய் நோட்டுக் கட்டுகள் படங்களை பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், "சோதனையில் ஒரு முக்கிய சம்பவம் இடம். SP.வேலுமணி இல்லம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவை Baskaran Baskaran என்பவர் 2021 ஆகஸ்ட் 10 அன்று பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
அ.தி.மு.க-வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர். இதைத் தொடர்ந்து அவருடைய வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட பணம், நகை என்று பல்வேறு படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன. இவைகள் அனைத்தும் முந்தைய காலங்களில் நாட்டில் பல்வேறு இடங்களில் நடந்த பல்வேறு சோதனைகளின் போது எடுக்கப்பட்ட படங்கள் ஆகும். ஏற்கனவே ஒரு படம் தொடர்பாக நாம் ஆய்வு கட்டுரை வெளியிட்டிருந்தோம். அந்த கட்டுரையைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.
இந்த நிலையில் அறை முழுக்க தங்க பிஸ்கட் மற்றும் ரூபாய் நோட்டுக்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் படங்கள் வேலுமணி வீட்டில் என்று குறிப்பிட்டு பகிரப்பட்டு வருகின்றன. இது பற்றி ஆய்வு செய்தோம். இந்த புகைப்படங்கள் எங்கு எடுக்கப்பட்டவை என்பதை அறிய ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம்.
அசல் பதிவைக் காண: newyorkfed.org I Archive 1 I businessinsider.com I Archive 2
தங்கக் கட்டிகள் குவியலாக இருக்கும் படங்கள் இரண்டும் அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் பேங்க் ஆஃப் நியூயார்க்கில் எடுக்கப்பட்டது என்று செய்திகள் நமக்குக் கிடைத்தன.
படுக்கை மீது ரூபாய் நோட்டுக்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அந்த புகைப்படங்கள் 2016ம் ஆண்டு கர்நாடகாவில் எடுக்கப்பட்டதாக செய்திகள் கிடைத்தன. இந்த படத்தை ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டிருந்ததாக இந்துஸ்தான் டைம்ஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அசல் பதிவைக் காண: hindustantimes.com I Archive
மூன்றாவதாக கட்டுக்கட்டாக புதிய இரண்டாயிரம் மற்றும் 500 ரூபாய் நோட்டுக்கள் இருக்கும் படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அந்த புகைப்படம் பல ஆண்டுகளாக மாதிரி படமாக (Representational) செய்தி ஊடகங்களில் பயன்படுத்தப்பட்டு வந்திருப்பது தெரிந்தது. எங்கு எடுக்கப்பட்டது என்பது கண்டறிய முடியவில்லை.
அசல் பதிவைக் காண: ndtv.com I Archive
அதே நேரத்தில் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்துவதற்கு முன்பு இருந்தே இந்த படம் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இதன் மூலம் எஸ்.பி.வேலுமணியின் வீட்டில் எடுக்கப்பட்ட படம் என்பது தவறான தகவல் என்பதைத் தெரிந்துகொள்ள முடியும்.
இது மட்டுமின்றி பல்வேறு படங்களும் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. எஸ்.பி.வேலுமணி வீட்டில் அமைக்கப்பட்டுள்ள தங்க கழிப்பறை என்று சில படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன.
அசல் பதிவைக் காண: Facebook I Archive I standard.co.uk I Archive 1
அந்த படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடிய போது பிரிட்டனைச் சார்ந்தது என்பது தெரியவந்தது. பிரிட்டனில் உள்ள பிளென்ஹெய்ம் அரண்மனையிலிருந்து திருடப்பட்ட தங்கக் கழிப்பறை என்று பல செய்திகள் நமக்கு கிடைத்தன.
அசல் பதிவைக் காண: Facebook I Archive
அதே போன்று எஸ்.பி.வேலுமணி வீட்டில் நோட்டு எண்ணும் மெஷினோடு மூட்டை மூட்டையாக சிக்கிய பணம் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதே புகைப்படத்தை சில மாதங்களுக்கு முன்பு மு.க.ஸ்டாலின் மகள் வீட்டில் வருமான வரி சோதனை நடத்த போதும் பலர் சமூக ஊடகங்களில் பரப்பினர்.
அசல் பதிவைக் காண: Facebook I Archive
உண்மையில் அது 2019ம் ஆண்டு கல்கி பகவான் ஆசிரமத்தில் நடத்தப்பட்ட சோதனையின் போது எடுக்கப்பட்ட படம் என்பது கண்டறியப்பட்டிருந்தது, இதே போன்று ஏற்கனவே நாம் ஆய்வு செய்த பல படங்கள் தற்போது வேலுமணி வீட்டில் சிக்கியது என்று தலைப்பிட்டு பகிரப்பட்டு வருவதை காண முடிந்தது.
அசல் பதிவைக் காண: Facebook I Archive
அதே போன்று அட்டை பெட்டிகளில் பணம் கட்டுக்கட்டாக இருக்கும் படத்தை பகிர்ந்துள்ளனர். அது 2016ம் ஆண்டு சேகர் ரெட்டி வீட்டில் நடந்த சோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்டது என்று அப்போது செய்தி வெளியாகி இருந்தது தெரியவந்தது. இதன் மூலம் இதுவும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் கைப்பற்றப்பட்ட பணம் என்று கூறுவது தவறானது என்பது உறுதியானது.
அசல் பதிவைக் காண: livemint.com I Archive
ஃபேக்ட் கிரஸண்டோ தமிழில் வெளியான கட்டுரைகள்:
FACT CHECK: சீமான் வீட்டில் கைப்பற்றப்பட்ட பணம் என்று பரவும் பழைய புகைப்படங்கள்!
FACT CHECK: பால் தினகரன் வீட்டில் கைப்பற்றப்பட்ட பணம் என்று பகிரப்படும் பழைய படம்!
FactCheck: எடப்பாடி பழனிசாமி பினாமி செய்யாதுரை வீட்டில் எடுத்த புகைப்படங்களா?- உண்மை இதோ!
FactCheck: மு.க.ஸ்டாலின் மகள் வீட்டில் கைப்பற்றப்பட்ட பணம்?- தவறான புகைப்படங்களால் குழப்பம்!
இதன் மூலம் எஸ்.பி.வேலுமணி வீட்டில் கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் தங்கம் என்று பகிரப்படும் படங்கள் பல ஆண்டுகளாக சமூக ஊடகங்களில் பகிரப்படும் படங்கள் என்பதும், இதற்கும் வேலுமணிக்கும் தொடர்பில்லை என்பதும் உறுதி செய்யப்படுகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவுகள் தவறானவை என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
எஸ்.பி.வேலுமணி வீட்டில் கைப்பற்றப்பட்ட பணம் என்று பகிரப்படும் புகைப்படங்கள் பல ஆண்டுகளாக செய்தி மற்றும் சமூக ஊடகங்களில் பயன்படுத்தப்பட்டு வருபவை என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel
Title:எஸ்.பி. வேலுமணி வீட்டில் சிக்கிய தங்கம், பணம் என்று பரவும் பழைய படங்கள்!
Fact Check By: Chendur PandianResult: False