சுஜித் என் திருச்சபையை சேர்ந்தவர் இல்லை: மோகன் சி லாசரஸ் கூறியதாகப் பரவும் வதந்தி!

அரசியல் சமூகம்

மணப்பாறை ஆழ்துளைக் கிணற்றில் சிக்கி உயிரிழந்த சிறுவன் சுஜித் என்னுடைய திருச்சபையை சேர்ந்தவர் இல்லை என்று மோகன் சி லாசரஸ் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Mohan C Lazarus 2.png
Facebook LinkArchived Link

பிரபல கிறிஸ்தவ மத போதகர் மோகன் சி லாசரஸ் மற்றும் மணப்பாறை அருகே ஆழ்துளைக் கிணற்றில் சிக்கி உயிரிழந்த சிறுவன் சுஜித் படங்களை இணைத்து பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “அந்த குழந்தை என் திருச்சபை சேர்ந்தது இல்லை – லாசரஸ்!” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் கீழே, “ஏரியா பார்த்து காப்பாற்ற உங்க ஏசு என்ன வார்டு கவுன்சிலரா?” என்று போட்டோஷாப்பில் டைப் செய்யப்பட்டுள்ளது.

இந்த பதிவை குமுதம் – Kumudam ஃபேஸ்புக் பக்கம் 2019 நவம்பர் 4ம் தேதி வெளியிட்டுள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றுக்குள் குழந்தை சிக்கிக்கொண்டதிலிருந்து சமூக ஊடகங்களில் தொடர்ந்து பல வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. பலரும் சுஜித்தை குழந்தையாக பார்த்து வரும் வேளையில், சிலர் அவனது சாதி, மதத்தைப் பார்த்துப் பதிவிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அந்த வகையில் பிரபல கிறிஸ்தவ மத போதகர் மோகன் சி லாசரஸ் கூட குழந்தை சுஜித்துக்கு எதிராக பேசியதாக ஒரு பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் உண்மையா என்று ஆய்வு மேற்கொண்டோம்.

Mohan C Lazarus 3.png
Search Link

சுஜித் என் திருச்சபையை சேர்ந்தவர் இல்லை என்று மோகன் சி லாசரஸ் பேட்டி, பதிவு ஏதும் வெளியிட்டுள்ளாரா என்று தேடினோம். கூகுளில் தேடியபோது அது தொடர்பாக எந்த ஒரு செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை. மோகன் சி லாசரஸ் ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கங்கள் மற்றும் அவருடைய இயேசு விடுவிக்கிறார் ஊழியங்களின் சமூக ஊடக பக்கங்களில் ஏதும் பதிவு வெளியாகி உள்ளதா என்று தேடினோம். அப்படி எந்த ஒரு பதிவும் நமக்கு கிடைக்கவில்லை. 

மோகன் சி லாசரஸ் பற்றி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் இந்த தகவல் குறித்து விவரம் அறிய, இயேசு விடுவிக்கிறார் ஊழியங்களைத் தொடர்புகொண்டு பேசினோம். நம்மிடம் அதன் ஊடகப் பிரிவுத் தலைவர் ரெக்ஸ் கிளமெண்ட் பேசினார். “சமூக ஊடகங்களில் பகிரப்படுவது போன்ற கருத்தை மோகன் சி லாசரஸ் அவர்கள் கூறவில்லை. முதலில் மோகன் சி லாசரஸ் அவர்களுக்கு தனியாக ஒரு திருச்சபையோ சர்ச்சோ இல்லை. இரண்டாவதாக, குறிப்பிட்ட சபையினருக்கு மட்டுமே ஜெபிப்பேன் என்று அவர் எப்போதும் கூறியது இல்லை. இந்திய தேசத்தின் முன்னேற்றத்துக்காக, மக்களின் வாழ்வு சிறக்க அவர் எப்போதும் ஜெபம் செய்துகொண்டே இருக்கிறார். குழந்தை சுஜித் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த செய்தி கிடைத்தபோது ‘திறப்பின் வாசல்’ என்ற ஜெப கூட்டத்தில் மோகன் சி லாசரஸ் ஜெபித்துக்கொண்டிருந்தார். அவருக்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டதும் அந்த மேடையிலேயே சிறுவன் சுஜித்துக்காக அவர் ஜெபித்தார். இது தொடர்பான வீடியோ விரைவில் எங்கள் சமூக ஊடக பக்கங்களில் வெளியிட உள்ளோம்” என்றார். (அவருடைய விளக்கம் ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளது.)

யாரோ ஒருவர் உருவாக்கிய விஷமத்தனமான மீமை தமிழகத்தின் பாரம்பரியமிக்க குமுதம் இதழ் தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது. 

நம்முடைய ஆய்வில்,

சுஜித் எங்கள் திருச்சபையை சார்ந்தவர் இல்லை என்று மோகன் சி லாசரஸ் கூறியதற்கான எந்த ஒரு ஆதாரமும் கிடைக்கவில்லை.

சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல் தவறானது என்று மோகன் சி லாசரஸின் இயேசு விடுவிக்கிறார் ஊழியங்கள் ஊடகப் பிரிவு தலைவர் மறுத்துள்ளார்.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், சுஜித் எங்கள் திருச்சபையை சார்ந்தவர் இல்லை என்று மோகன் சி லாசரஸ் கூறியதாக பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:சுஜித் என் திருச்சபையை சேர்ந்தவர் இல்லை: மோகன் சி லாசரஸ் கூறியதாகப் பரவும் வதந்தி!

Fact Check By: Chendur Pandian 

Result: False