
டெல்லியில் மோடி அரசு கொண்டு வந்த விவசாய சட்டத்தை எதிர்த்து 2வது நாளாக விவசாயிகள் பேரணி நடத்தியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

பிரம்மாண்ட பேரணி வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்தின் லோகோ உள்ளது. நிலைத் தகவலில், “மோடியின் விவசாய சட்டங்களை எதிர்த்து டெல்லியில் 2வது நாளாக விவசாயிகள் பேரணி. பல்வேறு மாநிலங்களின் விவசாயிகள் பங்கேற்றனர்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வீடியோ பதிவை Panneer Perumal என்பவர் 2020 செப்டம்பர் 24ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
விவசாயிகள் போராட்டம் தொடர்பான செய்திகளுடன் பழைய படங்கள், வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன. டெல்லியில் மிகப்பிரம்மாண்ட பேரணியை விவசாயிகள் நடத்தியதாக வீடியோ பதிவில் கூறப்பட்டுள்ளது. எனவே, இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.
வீடியோ காட்சிகளை புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த வீடியோவை தற்போது பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருவதைக் காண முடிந்தது. இவற்றுக்கு நடுவே ஏ.என்.ஐ செய்தி ஊடகம் வெளியிட்ட ட்வீட் பதிவு நமக்குக் கிடைத்தது. 2018ம் ஆண்டு நவம்பர் 30ம் தேதி அந்த ட்வீட் வெளியிடப்பட்டு இருந்தது. நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட வீடியோ காட்சிகள் அப்படியே அதிலும் இருந்தன.
அந்த ட்வீட் பதிவில், நாடு முழுவதும் இருந்து வந்த விவசாயிகள் இரண்டாவது நாளாக வறட்சி நிவாரணம், விளைபொருளுக்கு நியாயமான விலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி சென்றனர் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020, விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம் 2020, விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020 ஆகியன கடும் அமளிக்கு இடையே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன. அதற்கு 2020 செப்டம்பர் 27ம் தேதிதான் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.

2018ம் ஆண்டு நடந்த போராட்டம் என்பது விளை பொருளுக்கு நியாயமான விலை, கடன் தள்ளுபடி, விவசாயிகளைக் காக்க விவசாயிகளின் பிரச்னைகளை விவாதிக்க நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி வேளாண் கடன் சுமையில் இருந்து விவசாயிகளை விடுவிப்பதற்கான சட்டம் (THE FARMERS’ FREEDOM FROM INDEBTEDNESS BILL, 2018) மற்றும் உற்பத்திச் செலவைவிட அதிகமான, குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு உத்தரவாதம் அளிக்கும் சட்டம் (THE FARMERS’ RIGHT TO GUARANTEED REMUNERATIVE MINIMUM SUPPORT PRICES FOR AGRICULTURAL COMMODITIES BILL, 2018) ஆகியவற்றை நிறைவேற்ற வேண்டும் என்பது இந்தப் பேரணியின் முக்கியக் கோரிக்கைகளாக இருந்தன.
இதன் மூலம் 2018ல் நடந்த பேரணிக்கும் தற்போது நடந்து வரும் போராட்டத்துக்கும் தொடர்பில்லை என்பதைத் தெரிந்துகொள்ள முடிகிறது.

இதன் அடிப்படையில் விவசாய சட்டத்தை எதிர்த்து தற்போது டெல்லியில் விவசாயிகள் பேரணி சென்றார்கள் என்று பகிரப்படும் வீடியோ தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஃபேஸ்புக் பதிவில் இடம் பெற்ற தகவல் தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:விவசாய சட்டத்தைக் கண்டித்து விவசாயிகள் டெல்லியில் நடத்திய பேரணியா? இது பழைய வீடியோ!
Fact Check By: Chendur PandianResult: False
