கபினி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்ட வீடியோ உண்மையா?

சமூக ஊடகம் சமூகம்

கபினி அணையில் இருந்து 90 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

KABINI 2.png

Facebook Link I Archived Link 1 I Archived Link 2

28 விநாடிகள் ஓடக்கூடிய வீடியோ பகிரப்பட்டுள்ளது. அதில் அணையில் இருந்து தண்ணீர் வேகமாக வெளியேறும் காட்சிகள் உள்ளன. நிலைத் தகவலில், “வரலாற்றில் முதல் முறையாக கபினி அணையிலிருந்து விநாடிக்கு 90,000 கனஅடி நீர் வெளியேற்றும் காட்சி” என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்த வீடியோவை, Error 404 Tamil என்ற ஃபேஸ்புக் பக்கம் 2019 ஆகஸ்ட் 9ம் தேதி வெளியிட்டுள்ளது. இதை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிராவில் பருவமழை பொழிந்து வருகிறது. இதனால், அந்தப் பகுதிகளில் உள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. கர்நாடகாவில் உள்ள கபினி அணையில் இருந்து ஒரு லட்சத்துக்கும் அதிகமான கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கபினி அணையில் இருந்து 90 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட வீடியோ என்று ஒன்றைப் பகிர்ந்துள்ளனர். 

28 விநாடிகள் மட்டுமே ஓடும் அந்த வீடியோவை ஆய்வு செய்தோம். இரண்டு வீடியோக்களை ஒன்று சேர்த்து ஒரே வீடியோவாக வெளியிட்டது போல் உள்ளது. முதல் 14 விநாடிகள் ஓடும் வீடியோவில், அணையில் இருந்து வெளியேறும் தண்ணீர் மிகப்பெரிய பள்ளத்தில் பீய்ச்சி அடிப்பது போல் விழுகிறது. 14வது விநாடியில் இருந்து தடுப்பணையிலிருந்து சமதளத்துக்குச் சற்று தாழ்வான பகுதியில் தண்ணீர் பாய்வது போல உள்ளது. இந்த வீடியோ பதிவுக்கு கமெண்ட் செய்திருந்த பலரும் இது தவறான தகவல் என்று குறிப்பிட்டு இருந்தனர்.

எனவே, இது கபினி அணைதானா என்று ஆய்வு மேற்கொண்டோம். முதலில் வீடியோவின் சில காட்சிகளை மட்டும் புகைப்படமாக மாற்றி, ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது அது கர்நாடக மாநிலத்தில் உள்ள கர்வார் சுபா அணை என்று குறிப்பிட்டது தெரிந்தது.

KABINI 3.png

Google Image Search Link

காட்ரா ஆற்றில் கட்டப்பட்ட சுபா அணையில் இருந்து தண்ணீர் வெளியேறும் காட்சி என்று சில வீடியோக்கள் யூடியூபில் பகிரப்பட்டு இருந்தது தெரிந்தது. இந்த வீடியோ 2019 ஆகஸ்ட் 7ம் தேதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.  அதேபோல் கோவா, கேரளா, கர்நாடக மாநிலம் பெல்காம் பகுதியில் வெள்ள பாதிப்பு என்று கூறி இதே வீடியோ பகிரப்பட்டு இருந்ததும் தெரிந்தது. 

Archived Link

தண்ணீர் வெளியேறும் அமைப்பை வைத்துப் பார்க்கும்போது இது சுபா அணையாக இருக்கலாம் என்று தெரிகிறது. இந்த வீடியோவில் அணையின் முகப்புப் பகுதியும் ஓரளவுக்குத் தெரிந்தது. அதை வைத்து நாம் ஆய்வு மேற்கொண்டோம். 

கபினி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் வீடியோ, புகைப்படத்தைக் கொண்டு ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஃபேஸ்புக் வீடியோவின் அணையில் இருந்து தண்ணீர் வெளியேறும் காட்சியை ஒப்பிட்டுப் பார்த்தோம். கபினியில் இருந்து 1.25 லட்சம் கன அடி தண்ணீர் வெளியேறும் வீடியோ கிடைத்தது. அதற்கும் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட அணைக்கும் சம்பந்தமே இல்லை என்பது அதைப் பார்த்தபிறகு தெரிந்தது. இதனால், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட அந்த வீடியோ கபினி அணை இல்லை, சுபா அணையாக இருக்கலாம் என்று முடிவு செய்தோம்.

Archived Link

அதுவும் கபினி அணையில் இருந்து வெளியேறும் தண்ணீர் போல தெரியவில்லை. கபினி அணையின் தண்ணீர் வெளியேறும் பகுதியில் வலது பக்கத்தில் மிகப்பெரிய கட்டிடம் ஒன்று உள்ளது. பக்கவாட்டில் சாலைகள் போல உள்ளன. இந்து நாளிதழ் வெளியிட்ட படத்தைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள். ஆனால், இந்த வீடியோவின் வலது பக்கத்தில் அப்படி எதுவும் காண முடியவில்லை. இதனால், இந்த வீடியோ கபினி அணை இல்லை என்று உறுதி செய்யப்படுகிறது.

இதன் அடிப்படையில், வேறு ஒரு அணையில் இருந்து தண்ணீர் வெளியேறும் வீடியோவை எடுத்து கபினி அணையில் இருந்து தண்ணீர் வெளியேறும் காட்சி என்று தவறான நிலைத்தகவலுடன் பகிர்ந்திருப்பது உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:கபினி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்ட வீடியோ உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False