
கோ பேக் மோடி என்று ட்வீட் செய்த 256 பேர் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
Facebook Link | Archived Link |
தமிழ்நாடு சைபர் கிரைம் அவேர்னஸ் ஆர்கனைசேஷன் (Tamilnadu Cyber Crime Awareness Organisation) என்ற லோகோவோடு பிரேக்கிங் நியூஸ் கார்டு ஒன்று வெளியாகி உள்ளது. அதில், “கோ பேக் மோடி ட்வீட் போட்ட 256 மீது சைபர் கிரைம் வழக்கு. அவசர அவசரமாக ட்வீட்டை டெலீட் செய்யும் பிரிவினைவாதிகள்” என்று உள்ளது.
இந்த பதிவை நம் டி.வி என்ற ஃபேஸ்புக் பக்கம் 2019 அக்டோபர் 11ம் தேதி வெளியிட்டுள்ளது. இதை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தமிழகத்துக்கு பிரதமர் மோடி வரும்போது எல்லாம் எதிர்க்கட்சிகளால் கோ பேக் மோடி (Go Back Modi) என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் செய்யப்படுகிறது. இதை செய்வது இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் இல்லை. பாகிஸ்தானில் இருந்து டிரெண்ட் செய்யப்படுகிறது என்று சமாதானம் சொல்லப்படுகிறது. அதே நேரத்தில், எதிர்க்கட்சியினர்தான் இப்படி செய்கின்றனர் என்று பா.ஜ.க-வினர் கூறுகின்றனர்.
dailythanthi.com | Archived Link |
இந்த நிலையில், கோ பேக் மோடி ட்விட்டரில் பதிவிட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். நம் டி.வி செய்திகள் என்ற பெயரில் தொலைக்காட்சி உள்ளதா என்று தெரியவில்லை. இவர்கள் பிரேக்கிங் நியூஸ் கார்டு வெளியிட்டுள்ளனர். அதில், தமிழ்நாடு சைபர் கிரைம் அவேர்னஸ் ஆர்கனைசேஷன் என்ற லோகோவோடு செய்தி வெளியிட்டுள்ளனர். ஆனால், சைபர் கிரைம் வழக்கு என்று குறிப்பிட்டுள்ளனர். சென்னை மாநகர சைபர் கிரைமா, வேறு மாநகர, மாநில சைபர் கிரைமா என்று குறிப்பிடவில்லை. எனவே, இது தொடர்பாக வேறு ஏதும் செய்தி உள்ளதா என்று http://numtvnews.com/இணையளத்துக்கு சென்றோம். ஆனால், அப்படி ஒரு இணையதளமே இல்லை என்று தெரிந்தது.
நியூஸ் கார்டில் குறிப்பிடப்பட்டுள்ள தமிழ்நாடு சைபர் கிரைம் அவேர்னஸ் ஆர்கனைசேஷன் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். கூகுளில் தேடியபோது, அதற்கு இணையதளம் தனியாக இல்லை, பிளாக் பக்கம் இருப்பதை கண்டறிந்தோம். அதில், தமிழகத்தில் இணைய பாதுகாப்பான முறையில் பயன்படுத்தவும், ஐ.டி சட்டம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஏற்படுத்தப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர். இவர்கள் தமிழக சைபர் கிரைம் காவல்துறை பிரிவுக்கு உதவும் தன்னார்வலர்கள் என்பது தெரியவந்தது. அந்த பிளாக்கில், தொடர்பு எண் ஒன்றை 99412-11122 கொடுத்திருந்தனர். அதுவும் தொடர்புகொள்ள முடியாத நிலையிலிருந்தது.
tanccaorg.blogspot.com | Archived Link |
Search Link 1 | Search Link 2 |
ஒருவேளை, இந்த அமைப்பு அல்லது வேறு யாராவது புகார் அளித்து அதன் அடிப்படையில் 256 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதா, அது தொடர்பாக செய்தி உள்ளதா என்று தேடினோம். நம்முடைய தேடலில் அது தொடர்பாக எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை.
சென்னை சைபர் கிரைம் அலுவலகத்தின் 044-23452350 என்ற எண்ணை தொடர்புகொண்டு பேசினோம். நம்மிடம் பேசியவர்கள், “இது போல் எந்த ஒரு வழக்கையும் நாங்கள் பதிவு செய்யவில்லை. இது தவறான தகவல்” என்றனர்.
நம்முடைய ஆய்வில்,
தமிழ்நாடு சைபர் கிரைம் அவேர்னஸ் ஆர்கனைசேஷன் என்பது ஆன்லைன் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் அமைப்பு என்பது தெரியவந்துள்ளது,
257 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது என்பதற்கு ஆதாரமாக எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை.
257 பேர் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் தவறானது என்று சென்னை சைபர் கிரைம் போலீசார் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், கோ பேக் மோடி என்று ட்வீட் செய்த 256 பேர் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் என்ற தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.
