FACT CHECK: அதானி ரயில் என்று பகிரப்படும் தகவல் உண்மையா?
இந்தியாவில் அதானிக்கு என்று தனி ரயில் வந்துவிட்டது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மை தொடர்பாக ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:
அசல் பதிவைக் காண: Facebook 1 I Archive 1 I Facebook 2 I Archive 2 I Facebook 3 I Archive 3
அதானி நிறுவனத்தின் சமையல் எண்ணெய் ஒன்றின் விளம்பரம் ஒட்டப்பட்ட ரயில் இன்ஜின் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "ஐயா எங்க ஊருக்கு அதானி ரயில் வந்துருச்சு இனி சொகுசாக ஊரை சுத்தும், ஏழைகள் எல்லாம் பசியால் சுடுகாடு போகும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வீடியோ பதிவை Palani Gunasekaran என்பவர் 2020 டிசம்பர் 13ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
பயணிகள் ரயில் பாதை தனியார் மயமாகி பல நாட்கள் ஆகிவிட்டது. எனவே, அதானி ரயிலை இயக்கினாலும் அதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. இருப்பினும் இன்ஜின் முழுக்க எண்ணெய் நிறுவனம் ஒன்றின் விளம்பரம் இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியது. ரயிலின் முன் பகுதியில் WR அதாவது மேற்கு ரயில்வே என்று உள்ளது. இந்தியன் ரயில்வே என்று மிகப்பெரிய அளவில் எழுதப்பட்டுள்ளது. எனவே இது வெறும் விளம்பரமா அல்லது ஃபேஸ்புக் பதிவர்கள் கூறுவது போல ரயிலையே அதானி குழுமம் வாங்கிவிட்டதா என்று ஆய்வு செய்தோம்.
பயணிகள் ரயில் சேவையை தனியார் மயமாக்கும் முடிவை மத்திய அரசு எப்போதோ எடுத்துவிட்டது. பரிசோதனை அடிப்படையில் சில ரயில்களும் தனியாரிடம் வழங்கப்பட்டதாக செய்தி வெளியானது. தமிழகத்திலும் பல பயணிகள் ரயிலை தனியாருக்கு அளிக்க அரசு முடிவெடுத்ததாகவும் அதற்குள்ளாக கொரோனா பாதிப்பு வந்ததால் அந்த திட்டம் சற்று ஒத்தி வைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இது தொடர்பான ஆதாரங்களைத் தேடினோம். அப்போது டாடா, அதானி உள்ளிட்ட முன்னணி குழுமங்கள் ரயிலை குத்தகைக்கு எடுத்து இயக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக, இந்து பிசினஸ் லைன் வெளியிட்ட செய்தி கிடைத்தது.
அசல் பதிவைக் காண: thehindubusinessline.com I Archive
தொடர்ந்து தேடியபோது 2020 மார்ச் 4ம் தேதி ஃபைனான்ஷியல் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட செய்தி ஒன்று கிடைத்தது. அதில் ரயில் இன்ஜினில் அதானி குழுமத்தின் எண்ணெய் நிறுவன விளம்பரம் இருப்பதை புகைப்படம் எடுத்து வெளியிட்டிருந்தனர். ரயில் இன்ஜின்களில் தனியார் நிறுவனங்களின் விளம்பரங்களை வெளியிடுவதன் மூலம் வருவாய் ஈட்டிய இந்தியன் ரயில்வே என்று குறிப்பிட்டிருந்தனர். அதானி குழுமம் மட்டுமல்ல; வேறு பல நிறுவனங்களும் தங்கள் விளம்பரங்களை வெளியிட்டிருப்பதையும் படத்துடன் வெளியிட்டிருந்தனர்.
அசல் பதிவைக் காண: financialexpress.com I Archive
அதிலும் குறிப்பாக குஜராத் மாநிலம் வடோதரா ரயில்வே டிவிஷனில் இப்படி விளம்பரம் செய்யப்படுவதாகவும் இதன் மூலம் ஆண்டுக்கு 73.26 லட்சம் வருவாய் ஈட்டியதாகவும் ஐந்து ஆண்டு ஒப்பந்தம் அடிப்படையில் ரயில்வேக்கு 4.4 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என்றும் குறிப்பிட்டிருந்தனர்.
இது தொடர்பாக ரயில்வே ஏதும் விளக்கம் அளித்துள்ளதா என்று தேடினோம். அப்போது மத்திய அரசின் பி.ஐ.பி இந்தியில் வெளியிட்டிருந்த ட்வீட் கிடைத்தது. அதில், ‘’பிரியங்கா காந்தி இந்த வீடியோவை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்ததின் புகைப்படத்தை பகிர்ந்து, தவறான தகவல் என்று குறிப்பிட்டிருந்தனர்.
மேலும், இந்தியில் குறிப்பிடப்பட்ட தகவலை மொழிமாற்றம் செய்து பார்த்தோம். இந்திய ரயில்வேயை தனியாரிடம் வழங்கிவிட்டதாக சமூக ஊடகங்களில் தகவல் பகிரப்படுகிறது. உண்மையில் இது தனியார் மயம் இல்லை, வெறும் விளம்பரம் மட்டுமே" என்று குறிப்பிட்டிருந்தனர்.
இதன் மூலம், அதானி குழுமம் ரயில்களில் செய்துள்ள விளம்பரத்தை வீடியோ எடுத்து அதானி ரயிலையே வாங்கிவிட்டார் என்று தவறான தகவல் பகிர்ந்திருப்பதாக, உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
ரயில் இன்ஜினில் செய்யப்பட்ட விளம்பரத்தை வைத்து ரயிலையே அதானி குழுமம் வாங்கிவிட்டது போல பதிவிடப்பட்டு இருப்பதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் தகுந்த ஆதாரங்களுடன் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.