FACT CHECK: பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணின் படம் இது இல்லை!

இந்தியா சமூக ஊடகம் சமூகம்

உத்தரப் பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணின் படம் என்று சமூக ஊடகங்களில் பலரும் ஒரு இளம் பெண்ணின் படத்தை பகிர்ந்து வருகின்றனர். அது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

இளம் பெண் ஒருவரின் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவில், “வன்புணர்வு செய்து ஐந்து கிலோமீட்டர் தூரம் துப்பட்டாவால் கழுத்தில் கட்டி இழுத்து செல்லப்பட்டு, கால்கள் முறிக்கப்பட்டு, கழுத்து திருகப்பட்டு, முதுகெலும்பும் நொறுக்கப்பட்டு, நாக்கு குதறப்பட்டு ஒரு தலித் சிறுமி சிதைக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறாள் . குற்றவாளிகளை காப்பாற்ற முயற்சி நடக்கிறது என்றால், பேய் ஆளும் நாடா இது? என்கவுண்டர் செய். அல்லது என்கவுண்டர் செய்து கொள். நாடு நலம் பெறும். JUSTICE FOR” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த படத்தை T M Puratchi Mani என்பவர் 2020 செப்டம்பர் 29ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயதான இளம் பெண் கடந்த செப்டம்பர் 14ம் தேதி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சாலையில் வீசப்பட்டார். டெல்லி மருத்துவமனையில் 14 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்தது நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

bbc.comArchived Link 1
tamil.news18.comArchived Link 2

நாக்கு வெட்டப்பட்டு, முதுகெலும்பு உடைக்கப்பட்டு, மிகக் கொடூரமாக அந்த பெண் தாக்கப்பட்டுள்ளார். எனவே, அந்த தகவலில் தவறு இல்லை. ஆனால், கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட பெண் இவர்தான் என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது அந்த பெண்தானா என்று மட்டும் ஆய்வு செய்தோம்.

நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட பதிவில் உள்ள படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். சமூக ஊடகங்களில் பலரும் இந்த புகைப்படத்தை வைத்து நீதி வேண்டும் என்று கேட்டுப் பகிர்ந்து வந்திருப்பதைக் காண முடிந்தது.

அவற்றுக்கு நடுவே வேறு ஒரு புகைப்பட பதிவு நமக்குக் கிடைத்தது. Ajay Jeetu Yadav என்பவர் வெளியிட்டிருந்த அந்த பதிவை, மொழிமாற்றம் செய்து பார்த்தோம்.

அதில், “ஹாத்ரஸ் சம்பவம் தொடர்பாக பலரும் இந்த புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர். இந்த பெண் 2018ம் ஆண்டு சண்டிகர் மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் இறந்த என் தங்கை மனிஷா. தவறான சிகிச்சை காரணமாக அவர் மரணம் அடைந்தது தொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்ட போது அவர்கள் முதல் தகவல் அறிக்கை பதிய மறுத்தனர். எனவே, மனிஷாவுக்கு நீதி வேண்டும் என்று இந்த படங்களை பதிவிட்டோம். இந்த வழக்கு தற்போது சண்டிகர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. தயவு செய்து ஹாத்ரஸ் சம்பவத்துடன் இந்த படத்தைப் பகிராதீர்கள்” என்று குறிப்பிட்டிருந்தார்.

Facebook LinkArchived Link

அவருடைய ஃபேஸ்புக் பக்கத்தை மேலும் ஆய்வு செய்த போது, அதில் ஆஜ்தக் உள்ளிட்ட ஊடகங்களுக்கு இது தொடர்பாக அவர் விளக்கம் அளித்ததாக கூறி, அந்த செய்தியின் இணைப்பையும் வழங்கியிருந்தார். 

Archived Link

அவருடைய சகோதரி 2018ம் ஆண்டு ஜூலை மாதம் இறந்ததாக குறிப்பிட்டிருந்ததால் அவருடைய பதிவுகளை பின்னோக்கி சென்று பார்த்தோம். அப்போது மருத்துவமனைக்கு முன்பு போராட்டம், அந்த பெண்ணின் இறுதிச் சடங்கு உள்ளிட்ட படங்களை அவர் பதிவிட்டிருந்ததைக் காண முடிந்தது.

Facebook LinkArchived Link

இதன் மூலம் உத்தரப் பிரதேசத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமையால் இறந்த பெண் என்று பகிரப்படும் படம் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது. 

நம்முடைய ஆய்வில் உத்தரப் பிரதேசத்தில் உயிரிழந்த பெண் பற்றிய தகவலுடன் சண்டிகரில் 2018ம் ஆண்டு உயிரிழந்த பெண்ணின் படத்தை சேர்த்து பகிர்ந்து வந்திருப்பது உறுதியாகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் இடம் பெற்ற படம் தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணின் படம் இது இல்லை!

Fact Check By: Chendur Pandian 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •