
‘’உத்தரப் பிரதேசத்தில் 30 லட்சம் டன் தங்கச் சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டது,’’ என்ற தலைப்பில் வைரலாக பகிரப்படும் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொள்ள தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:
Facebook Claim Link | Archived Link |
இதேபோல, பலரும் 3 ஆயிரம் டன் தங்கம் கண்டுபிடிப்பு, இந்தியாவுக்கு அடித்தது அதிர்ஷ்டம், மோடிக்கு கடவுளின் பரிசு போன்ற தலைப்புகளில் இதே தகவலை வித விதமான தலைப்புகளில் பகிர்வதையும் காண முடிந்தது.
Facebook Claim Link 1 | Archived Link 1 |
Facebook Claim Link 2 | Archived Link 2 |
KathirNews Link | Archived Link |
Asianet Tamil Link | Archived Link |
உண்மை அறிவோம்:
பிப்ரவரி 21, 2020 அன்று உத்தரப் பிரதேசத்தில் உள்ள சோன்பத்ரா மாவட்டத்தில் 3500 டன் தங்கம் கொண்ட 2 சுரங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக, முன்னணி ஊடகங்களில் செய்தி வெளியானது.
TimesOfIndia News Link | Archived Link |
NDTV News Link | Archived Link |
இந்த செய்தியை, ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பாஜக ஆதரவாளர்கள் பலரும் ‘இந்தியா சாதித்துவிட்டது, மோடிக்கு கடவுளின் ஆசி’ என்ற தலைப்பில் பகிர, அதனை உண்மை என நம்பி சாதாரண ஃபேஸ்புக் பயனாளர்களும் ஷேர் செய்துவருகின்றனர்.
Gurumurthy Twitter Link | Archived Link |
இந்த தகவல்கள் வைரலாக பரவியதை தொடர்ந்து, பிப்ரவரி 22ம் தேதியே இந்திய புவியியல் அளவை நிறுவனம் (GSI) மறுப்பு தெரிவித்து ஒரு செய்தியறிக்கையை வெளியிட்டது.
அந்த அறிக்கையில், ‘’குறிப்பிட்ட சோன்பத்ரா பகுதியில் இவ்வளவு தங்கம் உள்ளதாக ஊடகங்களுக்கு நாங்கள் தகவல் தெரிவிக்கவில்லை. இதைச் சொன்னது உத்தரப் பிரதேச மாநில புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலகமாகும். சோன்பத்ரா மாவட்டத்தில் ஏற்கனவே பல முறை விரிவான ஆய்வுகள் நடத்தியுள்ளோம். அவற்றின் மூலமாக, அங்கே சுமார் 160 கிலோ தங்கம் இருக்கும் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஊடகங்கள் சொல்வது போல அப்பகுதியில் 3350 டன் தங்கம் எதுவும் இல்லை,’’ என்று கூறப்பட்டுள்ளது.
இந்த உண்மையை புரிந்துகொண்டு, துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தியே தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
Gurumurthy Twitter Link | Archived Link |
இந்த செய்தியை மற்ற ஊடகங்களும் வெளியிட்டுள்ளன. அவற்றின் விவரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
Scroll Link | IndianExpress Link | TOI Link |
இதன்படி, பிப்ரவரி 21, 2020 அன்றைய நிலவரப்படி இந்த தகவல்களின் உண்மைத்தன்மை தெரியாமல் பகிர்ந்தது தவறில்லை. ஆனால், இந்திய புவியியல் அளவை நிறுவனம் பிப்ரவரி 22, 2020 அன்று மறுப்பு தெரிவித்த பிறகும், பலர் இதனை உண்மை என நம்பி ஷேர் செய்வது தவறாகும்.
அது மட்டுமின்றி இந்திய புவியியல் அளவை நிறுவனத்திற்கு தெரியாமல், 20 ஆண்டுகளுக்கு முந்தைய தகவலை எடுத்து, உத்தரப் பிரதேச மாநில அரசு தன்னிச்சையாக ஊடகங்களுக்கு தெரிவித்ததே இந்த வதந்தி பரவ முக்கிய காரணமாகும். அங்கு, 30 லட்சம் டன் தங்கமும் இல்லை; 3000 டன் தங்கமும் இல்லை; இருப்பது 160 கிலோ வரை மட்டுமே என்று உறுதியாகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு மேற்கொண்ட தகவலில் தவறான தகவல் உள்ளதாக நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:உத்தரப் பிரதேசத்தில் 30 லட்சம் டன் தங்கச் சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டதா?
Fact Check By: Pankaj IyerResult: False
