வன்னியர்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்தாரா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழகம்

“ஒடுக்கப்பட்ட அப்பாவி மக்கள் மீது வன்னிய சமூகத்தினர் நடத்தும் தாக்குதல் கண்டனத்துக்குரியது. வன்னியர்களை இரும்புக் கரம் கொண்டு அரசு ஒடுக்க வேண்டும்”, என்று மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்ததாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் படத்துடன் கூடிய புதிய தலைமுறை நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “ஒடுக்கப்பட்ட அப்பாவி மக்கள் மீது வன்னிய சமூகத்தினர் நடத்தும் தாக்குதல் கண்டனத்திற்குரியது. கலவரத்தில் ஈடுபடும் வன்னியர்களை இரும்புக் கரம் கொண்டு அரசு ஒடுக்க வேண்டும். – ஸ்டாலின் ட்வீட்” என்று உள்ளது. இந்த நியூஸ் கார்டு 2019 ஏப்ரல் 19ம் தேதி வெளியானதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதிவை மஞ்சள் ஸ்கிரின்ஸ் என்ற ஃபேஸ்புக் பக்கம் 2020 பிப்ரவரி 17 அன்று வெளியிட்டுள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

என்ன சம்பவத்துக்காக இப்படி மு.க.ஸ்டாலின் கூறினார் என்று எதுவும் இல்லை. மொட்டையாக வன்னியர் மீது இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியதாக குறிப்பிட்டுள்ளனர். புதிய தலைமுறை நியூஸ் கார்டில் 2019 ஏப்ரல் 19 என்று குறிப்பிட்டுள்ளதால் அந்த காலகட்டத்தில் அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் நடந்த சாதி மோதல் காரணமாக இப்படி அறிக்கை வெளியிட்டிருக்கலாம் என்று தோன்றியது.

tamil.news18.comArchived Link

இந்த பதிவில், ‘சமூகத்தினர்’ என்பதற்கு பதில் ‘சமுகத்தினர்’ என்று உள்ளது. ‘கண்டனத்திற்குரியது’ என்பது கண்டனத்திற்குரியது என்று உள்ளது. மேலும் தமிழ் ஃபாண்ட் ஸ்டைல் வழக்கமாக புதிய தலைமுறை வெளியிடும் ஃபாண்ட் போல இல்லை. ஸ்டாலின் ட்வீட் தகவல் உள்ள பகுதி மட்டும் தனியா சேர்த்தது தெளிவாகத் தெரிகிறது. பின்னணியில் உள்ள புதிய தலைமுறை டிசைன் இல்லாதது இதை உறுதி செய்கிறது.

இது போலியானது என்று உறுதி செய்ய, புதிய தலைமுறை வெளியிட்ட அசல் நியூஸ் கார்டு கிடைக்கிறதா என்று கூகுளில் தேடிப் பார்த்தோம். 2019 ஏப்ரல் 19ம் தேதி மு.க.ஸ்டாலின் அறிக்கை தொடர்பாக புதிய தலைமுறை வெளியிட்ட அசல் நியூஸ் கார்டை கண்டுபிடிக்க முடியவில்லை.

எனவே, இதை புதிய தலைமுறை ஆன்லைன் பிரிவு நிர்வாகிக்கு அனுப்பி இதன் நம்பகத்தன்மை பற்றி கேட்டோம். அதற்கு அவர்கள், “இது போலியானது. புதிய தலைமுறை வெளியிட்டதை எடிட் செய்துள்ளனர்” என்று உறுதி செய்தனர்.

குறிப்பிட்ட அந்த தினத்தில் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட ட்வீட், அறிக்கை கிடைக்கிறதா என்று தேடினோம். மு.க.ஸ்டாலினின் ட்விட்டர் பக்கத்தில் தேடியபோது பொன்பரப்பி சம்பவம் தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை ட்வீட் கிடைத்தது. அதில் எந்த இடத்திலாவது அப்பாவி மக்கள் மீது வன்னியர் சமூகத்தினர் நடத்தும் தாக்குதல் கண்டனத்திற்குரியது என்று கூறினாரா என்று பார்த்தோம்.

அதில், “சமூக நல்லிணக்கத்திற்குச் சிறிதும் பங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபடும் சுயநல சக்திகள் யாராக இருந்தாலும் இரும்புக் கரம் கொண்டு அடக்கி – பொது அமைதியை நிலைநாட்டிட வேண்டும்” என்று மட்டுமே கூறியிருந்தார். குறிப்பிட்ட பிரிவினரை குற்றம்சாட்டி எந்த ஒரு இடத்திலும் அவர் பதிவிடவில்லை என்பது தெரியவந்தது.

Archived Link

நம்முடைய ஆய்வில்,

புதிய தலைமுறை பெயரில் வெளியான நியூஸ் கார்டு போலியாக உருவாக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நியூஸ் கார்டை நாங்கள் வெளியிடவில்லை என்று புதிய தலைமுறை உறுதி செய்துள்ளது.

மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் எந்த இடத்திலும் வன்னியர் என்ற பெயரைப் பயன்படுத்தவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், “வன்னியர்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்” என்று மு.க.ஸ்டாலின் கூறியதாக பகிரப்படும் இந்த நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:வன்னியர்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்தாரா?

Fact Check By: Chendur Pandian 

Result: False