3000 ஆண்டுகளுக்கு முன் திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் அண்டார்டிகாவில் கண்டுபிடிக்கப்பட்டதா?

தமிழ்

‘’3000 ஆண்டுகளுக்கு முன் திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் பிரதி அண்டார்டிகாவில் கிடைத்துள்ளது,’’ எனும் தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவு வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். 

தகவலின் விவரம்:

Facebook Claim Link Archived Link

Ganesan K என்பவர் இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தமிழின் தொன்மை ஏற்கனவே பலர் அறிந்த ஒன்றுதான். இருந்தாலும், சிலர் அதனை ஆர்வக்கோளாறில் சற்று மிகைப்படுத்திச் சொல்வதும், சிலர் அதனை பகடி செய்கிறேன் என்ற பெயரில் எதிர்மறையான தகவல்களை உண்மைபோல பரப்புவதும் வழக்கம்தான்.

அதிலும் குறிப்பாக, உண்மைத்தமிழனா இருந்தா ஷேர் செய் என்ற வாக்கியம் உணர்ச்சிப்பூர்வமாக பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது தமிழ் மீது காழ்ப்புணர்வு உள்ளவர்களும் அதனை பயன்படுத்தி, தவறான தகவல்களை தமிழ் மொழி என்ற பெயரில் பரப்புவதை வாடிக்கையாகச் செய்கிறார்கள்.

அதுபோலத்தான், மேலே நாம் கண்ட ஃபேஸ்புக் பதிவும் உள்ளது. இதனை பகிர்ந்தவர் தமிழ் பெருமையை மிகைப்படுத்த இப்படிச் சொன்னாரோ அல்லது பகடி செய்வதற்காக இப்படி தகவல் பகிர்ந்தாரோ என்பது அவருக்கே வெளிச்சம். ஆனால், இதனை பலர் உண்மை என நம்பி ஏமாறுவதை, மேற்கண்ட பதிவில் உள்ள கமெண்ட்களை படித்தாலே தெரிகிறது.

முதலில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தொடர்பான சிந்தனை மிகத் தவறாகும். ஏனெனில், நாசா என்பது விண்வெளி ஆய்வுக்காக, அமெரிக்க அரசால் நிறுவப்பட்டதாகும். அதற்கும், அண்டார்டிகா ஆராய்ச்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை.

இதற்கடுத்தப்படியாக, அண்டார்டிகா கண்டம் எப்படி உருவானது என்பதை வைத்து யோசித்தாலே, இப்படியெல்லாம் கட்டுக்கதை பரப்ப தோன்றியிருக்காது.

தவிர, அண்டார்டிகா கண்டம் பல ஆயிரம் ஆண்டுகளாகவே, தனித்த பனி பிரதேசமாக உள்ளதென்று பல முறை அறிவியல் ஆய்வாளர்கள் நிரூபித்திருக்கிறார்கள்.

இதுதவிர, தமிழ் மொழியின் சிறப்பாக உள்ள திருக்குறள் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட ஒன்று, என ஏற்கனவே நிரூபிக்கப்பட்டு, அதன் அடிப்படையில், திருவள்ளுவர் ஆண்டு முறையை தமிழக அரசு பின்பற்றி வருகிறது.

மேலும், காகிதத்தில் அதுவும் அச்சு கோர்த்தது போல எழுதும் முறை எல்லாம் தமிழகத்தில் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கிடையாது. பனை ஓலையில்தான், எழுத்தாணி கொண்டுதான் எழுதுவார்கள். 0 முதல் 9 வரையான எழுத்துகள் அரபியர்களால் கண்டறியப்பட்டதாகும். தமிழுக்கு என பிரத்யேக எண் எழுத்துரு உள்ளது.

உண்மை இப்படியிருக்க, சிவப்பு மையில் அச்சடித்தது போல திருக்குறளை திருவள்ளுவர் எழுதினார் என்றும், அதன் காலம் 3 முதல் 4 ஆயிரம் ஆண்டுகள் வரை இருக்கலாம் என நாசா விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர் என்றும் வீணாக, நம்பிக்கைக்கு புறம்பான வதந்தியை மேற்கண்ட பதிவில் பகிர்ந்துள்ளனர்.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவில் தவறான தகவல் பகிரப்பட்டுள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். 

Avatar

Title:3000 ஆண்டுகளுக்கு முன் திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் அண்டார்டிகாவில் கண்டுபிடிக்கப்பட்டதா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •