வெறும் 10 நிமிடத்தில் டோக்கியோ சென்ற புல்லட் ரயில்?- டிஜிட்டல் வதந்தி

சமூக ஊடகம் | Social

‘’வெறும் 10 நிமிடத்தில் 502 கிலோ மீட்டர் கடந்து டோக்கியோ சென்றடைந்த அதிவேக புல்லட் ரயில்,’’ எனக் கூறி பகிரப்படும் வீடியோ பதிவு ஒன்றை சமூக வலைதளங்களில் கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்: 

இதனை நமது வாசகர் ஒருவர், நமது வாட்ஸ்ஆப் எண்ணிற்கு அனுப்பி வைத்து, உண்மை கண்டறிந்து சொல்லும்படி கேட்டார். இதன்பேரில், நாம் ஆய்வு மேற்கொள்ள தொடங்கினோம்.

முதலில், இதனை ஃபேஸ்புக்கில் யாரேனும் பகிர்ந்துள்ளனரா என தேடியபோது, பலர் பகிர்ந்து வருவதாகக் கண்டோம். 

Facebook Claim LinkArchived Link

உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட வீடியோவில் காட்சிகள் வேகமாக நகருகின்றன. அத்துடன், அதனை ‘’The New Japanese Bullet Train reaches unimaginable speed of 4800+ kmph (Almost March 4) completing the route from Shin Osaka Station to Tokyo (502.3km) in just 10 mins,’’ எனக் குறிப்பிடுகின்றனர்.

எனவே, இதன் பேரில், ஷின் ஒசாகா (Shinkansen) மற்றும் டோக்கியோ (Tokyo) இடையே இயக்கப்படும் புல்லட் ரயில் சேவை எத்தனை கிலோ மீட்டர் வேகம் செல்லக்கூடியது என விவரம் தேடினோம்.

அப்போது, அதிகபட்சமாக மணிக்கு 300 கிமீ மற்றும் 285 கிமீ வேகத்தில் அப்பகுதியில் புல்லட் ரயில் இயக்கப்பட்டு வருவதாக விவரம் கிடைத்தது. ஆனால், எங்கேயும் 4800 கிமீ வேகத்தில் புல்லட் ரயில் இயக்கப்படுவதாக தகவல் கிடைக்கவில்லை. 

jrailpass Link

இதுதவிர, ஜப்பான் நாட்டில் இயக்கப்படும் புல்லட் ரயில்களின் அதிகபட்ச வேகமே மணிக்கு 360 கிமீ மட்டும்தான். அதுவும் கூட இன்னமும் முழு வீச்சில் சேவைக்கு வரவில்லை. ஆனால், நாம் ஆய்வு செய்யும் வீடியோவில் மணிக்கு 4800 கிமீ வேகம் எனக் கூறுகின்றனர். 

CNN Link

இதுதவிர, ஷின் ஒசாகா மற்றும் டோக்கியோ இடையே உள்ள தொலைவு கிட்டத்தட்ட 502 கிலோ மீட்டர் ஆகும். 

எந்த வகையிலும் சாத்தியம் இல்லாத இப்படி ஒரு ரயில் சேவை பற்றி குறிப்பிடுவதால், இது உண்மையாக இருக்க வாய்ப்பில்லை என்றே நமக்கு தோன்றியது. இதையடுத்து, குறிப்பிட்ட புல்லட் ரயில் வீடியோ காட்சியை மீண்டும் பார்வையிட்டோம். அப்போது, அதன் தொடக்கத்தில் ஒரு ஸ்டுடியோ தயாரிப்பு எனக் குறிப்பிடக்கூடியோ லோகோ விவரம் கண்டோம். 

இதன்பேரில், கீவேர்ட் பயன்படுத்தி தகவல் தேடியபோது, இதுபற்றிய வீடியோ லிங்க் ஒன்று கிடைத்தது. அது Fermato Studio என்ற யூடியுப் பக்கத்தினர் வெளியிட்ட ஒரு கற்பனைத்தனமான வீடியோ ஆகும்.

இதன்படி, ஜன்னல் வழியேயான காட்சிகளை மட்டும் படம்பிடித்து, அதனை Time-Lapse/Hyper-lapse என்ற முறையில் வேகப்படுத்தி காட்டியுள்ளனர். சராசரியாக, புல்லட் ரயிலில் ஷின் ஒசாகாவில் இருந்து, டோக்கியோ செல்ல 2.5 மணி நேரம் வரை பிடிக்கும் என்றும், அதனை சற்று குறைத்து காட்டுவதற்காக இந்த வீடியோவை கற்பனை கலந்து தயாரித்தோம் என்றும், வீடியோவை தயாரித்தவர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

முழு வீடியோவையும் கீழே இணைத்துள்ளோம்.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், கற்பனை கலந்து தயாரிக்கப்பட்ட வீடியோவை உண்மை என நம்பி பலரும் ஷேர் செய்து வருகின்றனர் என்று தெளிவாகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு மேற்கொண்ட வீடியோ பற்றிய தகவல் தவறானது என நிரூபித்துள்ளோம். இதுபோன்ற தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால் நமது வாசகர்கள் +91 9049044263 என்ற வாட்ஸ்ஆப் எண்ணில் தகவல் தெரிவியுங்கள்.

Avatar

Title:வெறும் 10 நிமிடத்தில் டோக்கியோ சென்ற புல்லட் ரயில்?- டிஜிட்டல் வதந்தி

Fact Check By: Pankaj Iyer 

Result: False