FACT CHECK: சத்தியமங்கலம் வனப் பகுதியில் ராமாயண கால ஜடாயு பறவை கண்டுபிடிக்கப்பட்டதா?

இந்தியா சமூக ஊடகம் சமூகம்

சத்தியமங்கலம் வனப் பகுதியில் புனிதத் தன்மை வாய்ந்த ஜடாயு பறவை கண்டறியப்பட்டுள்ளது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link 1Archived Link 2

கழுகு ஒன்று பல முயற்சிகளுக்குப் பிறகு சிறகை விரித்து பறக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இராமாயணத்தின் கதைக்கு புகழ் பெற்ற ஜடாயு ஆபூர்வ −தெய்வீக புனிதத்தன்மை வாய்ந்த ஜடாயு பறவை வகை இனத்தினை பெரும்பாலும் யாரும் பார்க்கவே முடியாது. அபூர்வமான−அரிதான பறவை சத்தியமங்கலம் மலைப் பகுதியில் மேற்படி பறவை பறப்பதாக பறவை ஆராய்ச்சி வல்லுநர்களுக்கு வந்த தகவலின்படி காண்பதற்கு அரிதான ஜடாயு பறவையினை வீடியோ பதிவு செய்துள்ளனர். நாமும் பார்த்து −மற்ற ஆன்மீக பக்தர்களுக்கும் அனுப்ப வேண்டுகிறேன்!!! ஜெய் ஶ்ரீராம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வீடியோ பதிவை, ஆன்மீகச் சிந்தனைகள் என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் Valasai G Elumalai என்பவர் 2020 ஆகஸ்ட் 4ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

ராமாயணத்தில் ஜடாயு என்ற பருந்து இனத்தைச் சேர்ந்த பறவை பற்றி சொல்லப்பட்டுள்ளது. ஆனால், நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஃபேஸ்புக் பதிவில் இருப்பது கழுகு இனத்தைச் சேர்ந்த பறவை போல உள்ளது. இது மதம் சார்ந்த விஷயம் என்பதால் இந்த விவகாரத்துக்குள் நாம் செல்லவில்லை. இந்த வீடியோ சத்தியமங்கலத்தில் எடுக்கப்பட்டதா என்று ஆய்வு செய்தோம்.

வீடியோ காட்சிகளை புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ இந்தி முதல் பல்வேறு ஃபேக்ட் செக் ஊடகங்களும் இந்த வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டு கட்டுரை வெளியிட்டிருப்பதைக் காண முடிந்தது.

தொடர்ந்து தேடிய போது கேரளாவில், கர்நாடகாவில், மத்தியப் பிரதேசத்தில்  ஜடாயு பறவை கண்டுபிடிக்கப்பட்டது என்று பலரும் இந்த வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வந்திருப்பதைக் காண முடிந்தது. அவற்றைத் தாண்டி தேடிய போது, ஸ்பானிஷ், போர்த்துக்கீசிய மொழிகளில் இந்த வீடியோவுடன் கூடிய பல செய்திகள், பதிவுகள் நமக்குக் கிடைத்தன.

thedodo.comArchived Link

2018ம் ஆண்டு வெளியான செய்தியில் பிரம்மாண்ட காண்டோர் பறவை பறக்கவிடப்பட்டது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அந்த செய்தியில் அர்ஜென்டினா நாட்டில் விஷம் வைத்த உணவை உட்கொண்ட இந்த கழுகு உயிருக்கு ஆபத்தான நிலையில் கண்டறியப்பட்டது. மிகவும் அரிய வகை பறவை என்பதால் அதை மீட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. 16 மாத சிகிச்சைக்குப் பிறகு 2014ம் ஆண்டு மார்ச் 28ம் தேதி கட்டமர்காவில் உள்ள மலை உச்சியில் இருந்து பறக்கவிட்டனர்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. 

இதன் அடிப்படையில் கூகுளில் வேறு கீ வார்த்தைகளைப் பயன்படுத்தித் தேடிய போது, 2014ம் ஆண்டு வெளியிடப்பட்ட வீடியோ கிடைத்தது. ஸ்பானிஷ் மொழியில் இருந்த அந்த வீடியோவை மொழிமாற்றம் செய்து பார்த்தபோது பறவை பறக்கவிடப்பட்ட தகவலைத் தெரிவித்திருந்தனர். மேலும் அந்த வீடியோவை பார்க்கும் போது கூண்டிலிருந்து அது திறக்கப்பட்டதும் வெளிவரும் காட்சிகள் தெளிவாக இருந்தன. இதன் மூலம் இந்த வீடியோ தமிழ்நாட்டின் சத்தியமங்கலம் வனப் பகுதியில் எடுக்கப்பட்டது இல்லை என்பது உறுதியானது.

nationalgeographic.comArchived Link

ஆண்டியன் காண்டோர் என்ற கழுகு பற்றி ஆய்வு மேற்கொண்டோம். அது தென் அமெரிக்க கண்டத்தில் மேற்கு கடற்கரை பகுதிகளில் காணப்படும் கழுகு இனம் என்றும் உலகின் மிகப்பெரிய பறக்கும் பறவை என்றும் குறிப்பிட்டிருந்தனர்.

பலரும் இந்த வீடியோ கேரள மாநிலத்தில் ஜடாயு பறவை நினைவாக உருவாக்கப்பட்ட அருங்காட்சியகம் உள்ள சடயமங்கலம் என்று பகிர்ந்து வருவதை அடிப்படையாகக் கொண்டு நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ இந்திப் பிரிவு ஆய்வு நடத்தியுள்ளது. இது தொடர்பாக கேரள வனத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, இந்த பறவை இந்தியாவைச் சேர்ந்தது இல்லை என்று குறிப்பிட்டதாக கட்டுரையில் கூறியுள்ளனர். 

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், இந்தியாவில் ராமாயண கால ஜடாயு பறவை கண்டறியப்பட்டுள்ளது என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஃபேஸ்புக் பதிவில் இடம் பெற்ற தகவல் தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:சத்தியமங்கலம் வனப் பகுதியில் ராமாயண கால ஜடாயு பறவை கண்டுபிடிக்கப்பட்டதாக பரவும் வதந்தி!

Fact Check By: Chendur Pandian 

Result: False