தி.மு.க-வின் அடுத்த பொதுச் செயலாளராக ஆ.ராசா ஒரு மனதாகத் தேர்ந்தெடுத்துள்ளோம் என்று மு.க.ஸ்டாலின் கூறியதாக தந்தி டி.வி நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

மு.க.ஸ்டாலின் படத்துடன் கூடிய தந்தி டிவி நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், "திமுகவின் அடுத்த பொதுச் செயலாளராக ஆ.ராசாவை ஒருமனதாக தேர்ந்தெடுத்துள்ளோம். ஏப்ரல் 1ஆம் தேதி அண்ணா அறிவாலயத்தில் பதவியேற்பு விழா நடைபெறும் - ஸ்டாலின்" என்று உள்ளது.

இந்த பதிவை, Maha Devan என்பவர் 2020 மார்ச் 11ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தி.மு.க பொதுச் செயலாளராக இருந்த அன்பழகன் காலமானதைத் தொடர்ந்து தி.மு.க நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. ஒரு வாரத்துக்கு துக்கம் அனுசரிக்கப்படுவதாக தி.மு.க தலைமை அறிவித்திருந்தது. இந்த நிலையில் அடுத்து யார் தி.மு.க பொதுச் செயலாளராக வருவார்கள் என்ற பேச்சு காட்சி, அச்சு, சமூக ஊடகங்களில் மிக முக்கியமாக நடந்து வருகிறது. தி.மு.க பொருளாளராக உள்ள துரைமுருகன் தி.மு.க பொதுச் செயலாளராக வருவார் என்று பலரும் ஆருடம் கூறி வருகின்றனர். இந்த நிலையில், தி.மு.க பொதுச் செயலாளராக ஆ.ராசா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக தந்தி டி.வி நியூஸ் கார்டு வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

இந்த நியூஸ் கார்டு அசல் போல இல்லை. வழக்கமாக தந்தி டிவி வெளியிடும் முக்கியச் செய்தி நியூஸ் கார்டு எல்லாம் சற்று அலசலாகவே இருக்கும். வீடியோவில் இருந்து ஸ்கிரீன்ஷாட் செய்து வெளியிட்டது போலவே இருக்கும். ஆனால், இந்த நியூஸ் கார்டு அப்படி இல்லை. முக்கியச் செய்தி, தந்தி டிவி லோகோ, 7 மணி செய்தி என வழக்கமான எல்லாம் அலசலாக இருக்க, ஸ்டாலின் படம் மற்றும் அறிவிப்பு மட்டும் பளீச் என தெளிவாக இருந்தது. மேலும், தந்தி டி.வி வெளியிடும் தமிழ் ஃபாண்டுடன் இந்த தமிழ் ஃபாண்ட் ஒத்துப் போகவில்லை. இவை எல்லாம் இந்த நியூஸ் கார்டு போலியானதாக இருக்கும் என்று உணர்த்தின.

இதன் நம்பகத்தன்மையை அறிய, தந்தி டி.வி ஆன்லைன் பிரிவுக்கு இந்த நியூஸ் கார்டை அனுப்பி நம்பத்தன்மை குறித்து கேட்டோம். அவர்கள் பதில் அளிப்பதற்கு முன்னதாக தந்தி டி.வி-யில் இது தொடர்பாக ஏதேனும் நியூஸ் கார்டு வெளியாகி உள்ளதா என்றும் தேடினோம். தந்தி டிவி ஃபேஸ்புக் பக்கத்தை ஆய்வு செய்தபோது, ஸ்டாலின் கூறியது தொடர்பான நியூஸ் கார்டு அதில் இல்லை. ஸ்டாலின் பெயரில் பரவும் நியூஸ்கார்டு போலியானது என்று தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருந்தது நமக்கு கிடைத்தது. தந்தி டி.வி தரப்பில் இருந்து இது போலியானது என்றும் தெரிவித்தனர்.

Facebook LinkArchived Link

தி.மு.க பொதுச் செயலாளராக யாரை அறிவித்திருந்தாலும் அது மிகப்பெரிய செய்தியாக இருந்திருக்கும். ஆனால், ஒரு சிறு செய்தி கூட நமக்கு கிடைக்கவில்லை. இதுவே இந்த தகவல் தவறானது என்பதை உறுதி செய்தது. இருப்பினும் மேலும் உறுதி செய்ய, மு.க.ஸ்டாலின், தி.மு.க அதிகாரப்பூர்வ சமூக ஊடக பக்கங்களில் செய்தி ஏதும் வெளியாகி உள்ளதா என்று தேடினோம்.

க.அன்பழகன் மறைவையொட்டி தி.மு.க-வின் அனைத்து நிகழ்ச்சிகளும் 7ம் தேதி முதல் ஒரு வாரத்துக்கு ஒத்தி வைக்கப்படுவதாகவும், ஊர்கிளை, உட்கிளை தேர்தல்கள் ஒரு வாரத்துக்கு ஒத்தி வைக்கப்படுவதாகவும் வெளியான அறிக்கை மட்டுமே கிடைத்தது.

Archived Link

நம்முடைய ஆய்வில்,

தி.மு.க பொதுச் செயலாளராக ஆ.ராசா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று பகிரப்படும் இந்த நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தந்தி டி.வி-யும் இந்த நியூஸ் கார்டு போலியானது என்று தெரிவித்துள்ளது.

பொதுச் செயலாளர் நியமனம், தேர்தல் தொடர்பாக எந்த ஒரு அறிவிப்பையும் தி.மு.க வெளியிடவில்லை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில் தி.மு.க பொதுச் செயலாளராக ஆ.ராசா தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று ஸ்டாலின் அறிவித்ததாகப் பகிரப்படும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:தி.மு.க பொதுச் செயலாளராக ஆ.ராசா நியமிக்கப்பட்டாரா?- போலி செய்தியால் பரபரப்பு

Fact Check By: Chendur Pandian

Result: False