
நாடார்கள் தமிழர்கள் இல்லை என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link 1 | Archived Link 2 |
9 வினாடிகள் மட்டும் ஓடக்கூடிய எச்.ராஜா பேசிய வீடியோவை வெளியிட்டுள்ளனர். அதில், “நாடார்கள் தமிழர்கள் இல்லை. இவர்கள் இலங்கையிலிருந்து வந்தவர்கள்” என்று எச்.ராஜா கூறுகிறார்.
நிலைத் தகவலில், “நாடார்கள் தமிழர்கள் இல்லை என்று பீகாரி இருந்து வந்த மென்டல் சொல்கிறது” என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த வீடியோ பதிவை, வீரத்தமிழன் திண்டுக்கல் தமீம் என்பவர் 2020 ஜனவரி 16 அன்று வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
வெறும் 9 விநாடி வீடியோ மட்டுமே உள்ளது. அவர் பேசியதை முழுமையாக குறிப்பிடாமல் குறிப்பிட்ட பகுதியை மட்டும் வெளியிட்டுள்ளார்கள். இதனால், இந்த தகவல் உண்மையா என்ற சந்தேகம் எழுந்தது.
இந்த வீடியோவை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அது தொடர்பாக எந்த ஒரு தகவலும் நமக்கு கிடைக்கவில்லை. நாடார்கள் தமிழர்கள் இல்லை என்று எச்.ராஜா கூறினாரா என்று கூகுளில் தேடினோம். அப்போது தினமலர் வெளியிட்ட செய்தி கிடைத்தது. விழா ஒன்றில் பேசிய எச்.ராஜா, “கால்டுவெல், நாடார் சமூகத்தை பற்றி குறிப்பிட்டதை சமீபத்தில், ஒரு மேடையில் பேசினேன். அது, என் கருத்து என்பது போல, சமூக ஊடகங்களில் பரப்பி, என்னை சர்ச்சைக்குள்ளாக்கினர். நான், எதைப் பேசினாலும், சர்ச்சைக்குரியதாய் மாற்ற, பலர் ஆர்வம் காட்டுகின்றனர்” என்று குறிப்பிட்டிருந்தார்.

dinamalar.com | Archived Link |
வீடியோ ஆதாரம் கிடைக்கிறதா என்று தேடிப் பார்த்தோம். யூடியூப்பில் “நாடார்கள் தமிழர்கள் இல்லை” என்று டைப் செய்து தேடினோம். அப்போது எச்.ராஜா பேசிய வீடியோ கிடைத்தது. அது 28 விநாடிகள் ஓடக்கூடியதாக இருந்தது. அந்த வீடியோவைப் பார்த்தோம். அதில் எச்.ராஜா, “நான் எது பேசினாலும் ஆதாரம் இல்லாமல் பேசுவது இல்லை. அதனால்தான் சிலருக்கு எரிச்சலே வருகிறது. அதன் தமிழாக்கம் இருக்கிறது. திருநெல்வேலி சாணார்கள். அதில் என்ன சொல்றான் கால்டுவெல், இந்த நாடார் சமுதாயத்தினர் தமிழர்கள் இல்லை. இவர்கள் இலங்கையிலிருந்து வந்தவர்கள்” என்று எச்.ராஜா குறிப்பிட்டார்.
Youtube Link | Archived Link |
முழு வீடியோவும் கிடைக்கிறதா என்று தேடியபோது மற்றொரு வீடியோ நமக்கு கிடைத்தது. கலாட்டா தமிழ் என்ற யூடியூப் சேனல் 2018 ஜனவரி 18 அன்று வெளியிட்ட வீடியோ கிடைத்தது. அதில் எச்.ராஜா பேச்சு என்று 31.59 நிமிட வீடியோவை வெளியிட்டிருந்தனர்.
அதன் பின்னணி, பின்னால் நிற்கும் நபர் எல்லாம் ஒன்றாக இருக்கவே அதைப் பார்த்தோம். அதில் நான்காவது நிமிடத்தில் அந்த வீடியோ வருகிறது. முழுமையான வீடியோவாக அது இருந்தது.
நம்முடைய ஆய்வில்,
நாடார் சமுதாயம் பற்றி கால்டுவெல் குறிப்பிட்டதை என் கருத்து போல சமூக ஊடகங்களில் பரப்பி வருகிறார்கள் என்று எச்.ராஜா கூறிய செய்தி கிடைத்துள்ளது.
கால்டுவெல் நாடார் சமுதாயத்தை தமிழர்கள் இல்லை என்று கூறியதாக எச்.ராஜா பேசிய வீடியோ கிடைத்துள்ளது.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், நாடார்கள் தமிழர்கள் இல்லை என்று எச்.ராஜா கூறியதாக பரவும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் நம்பகத்தன்மை இல்லை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:நாடார்கள் தமிழர்கள் இல்லை என்று எச் ராஜா கூறினாரா?
Fact Check By: Chendur PandianResult: Partly False
