
ஈழத் தமிழர்கள், முஸ்லிம்களுக்கு எதிரான குடியுரிமை மசோதாவை எதிர்த்து மேற்கு வங்க எம்பி குரல் கொடுத்த போது அ.தி.மு.க எம்.பி நவநீத கிருஷ்ணன் தூங்கினார் என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link |
மேற்கு வங்க திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி டெரீக் ஒ.பிரெய்ன் நாடாளுமன்றத்தில் பேசும் போது, அ.தி.மு.க எம்.பி நவநீத கிருஷ்ணன் தூங்குவது போன்ற படத்தைப் பகிர்ந்துள்ளனர். படத்தின் மேலும் கீழும், “ஈழ தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான குடியுரிமை மசோதாவை எதிர்த்து மேற்கு வங்க எம்.பி குரல் கொடுத்த போது, அதிமுக அடிமைகள் மாநிலங்களவையில்” என்று போட்டோஷாப் முறையில் டைப் செய்துள்ளனர்.
இந்த பதிவை, MKS For CM என்ற ஃபேஸ்புக் பக்கம் 2019 டிசம்பர் 12ம் தேி வெளியிட்டுள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
குடியுரிமை திருத்த மசோதாவுக்கு நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க ஆதரவு அளித்தது. தி.மு.க எதிர்த்தது. இந்த நிலையில், அது தொடர்பான பல்வேறு வதந்திகள் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன. இந்த படத்தில், மேற்கு வங்கத்தின் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி டெரீக் ஓ.பிரெய்ன் பேசும்போது, அ.தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் நவநீத கிருஷ்ணன் தூங்குவது போல உள்ளது. அருகில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி உள்ளார்.

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி மக்களவை உறுப்பினராக உள்ளார். பொதுவாக மாநிலங்களவையில் தங்கள் துறை தொடர்பான கேள்வி பதில், விவாதங்களில் மாநிலங்களவை உறுப்பினராக இல்லாத அமைச்சர்கள் பங்கேற்பார்கள். மற்ற நேரங்களில் அவர்கள் மக்களவையில் இருப்பார்கள். குடியுரிமை திருத்த மசோதா என்பது உள்துறை அமைச்சர் அமித்ஷா துறை தொடர்பானது. எனவே, இந்த நேரத்தில் மாநிலங்களவையில் ஸ்மிருதி இரானி இருந்திருப்பாரா என்பது சந்தேகத்தை ஏற்படுத்தியது.
டெரீக் ஓ.பிரெய்ன் மாநிலங்களவையில் பேசிய வீடியோவை மாநிலங்களவை டி.வி அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் தேடி எடுத்தோம். அதில், டெரீக் ஓ.பிரெய்ன் அருகில் நவநீத கிருஷ்ணன் இருப்பது போன்று எந்த ஒரு காட்சியும் இல்லை. மேலும், அன்றைய விவாதத்தில் டெரீக் ஓ.பிரெய்ன் சட்டைக்கு மேல் கோட் ஏதும் அணிந்திருக்கவில்லை.மேலும், அந்த வீடியோவில் டெரீக் ஓ. பிரெய்ன் அருகே நவநீத கிருஷ்ணனும் இல்லை ஸ்மிருதி இரானியும் இல்லை.
Archived Link |
ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள படம் எப்போது எடுக்கப்பட்டது என்று ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, நியூஸ் 18 தொலைக்காட்சி இணையதளத்தில் அந்த புகைப்படம் பயன்படுத்தப்பட்டிருந்தது தெரிந்தது. இந்த படத்தை அவர்கள் 2017ம் ஆண்டு பிப்ரவரி 3ம் தேதி வெளியான செய்தியில் பயன்படுத்தியிருந்தனர். அது திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி-க்கள் கைது செய்வது தொடர்பான விவாதம் என்று குறிப்பிட்டு இருந்தனர். அந்த படத்திலேயே பிப்ரவரி 3 நேரம் காலை 11.08 என்று இருந்தது.

Search Link | News 18 Link | Archived Link |
இதன் மூலம், நவநீத கிருஷ்ணன் மாநிலங்களவையில் தூங்குவது போன்ற 2017ம் ஆண்டின் படத்தை எடுத்து, குடியுரிமை திருத்த மசோதா தொடர்பான விவாதத்தின்போது அவர் தூங்கினார் என்று தவறான கருத்தைச் சேர்த்து பகிர்ந்துள்ளது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் இந்த பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:ஈழத் தமிழர்களுக்காக மேற்கு வங்க எம்பி குரல் கொடுத்தபோது தூங்கினாரா நவநீதிகிருஷ்ணன்?
Fact Check By: Chendur PandianResult: False
