போராட்டக்காரர்களிடமிருந்து தப்பிய அஸ்ஸாம் முதல்வர் – படம் உண்மையா?

அரசியல் இந்தியா சமூக ஊடகம்

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராடியவர்களின் தாக்குதலில் இருந்து அஸ்ஸாம் முதல்வர் தப்பி ஓடும் படம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Assam CM 2.png
Facebook LinkArchived Link

இரும்பு குழாயால் அமைக்கப்பட்ட படியில் அஸ்ஸாம் முதல்வர் இறங்கும் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “தப்பித்து ஓடும் அசாம் முதல்வர். அஸ்ஸாமில் வெடித்தது மக்கள் புரட்சி” என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்த பதிவை, Satheesh Kumar என்பவர் 2019 டிசம்பர் 13ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

படத்தைப் பார்க்கும்போது இது வீட்டிலிருந்து தப்பி ஓடும் காட்சி போல இல்லை. ஒரு கட்டுமானத்தில் அமைக்கப்பட்டுள்ள இரும்பு குழாய் போலவே அது உள்ளது. மேலும், படத்தில் ஒருவர் மிகப்பெரிய கட்டுமான இடங்களில் அணிவது போன்ற பாதுகாப்பு ஹெல்மெட், உடை உடுத்தியிருப்பதை காண முடிகிறது. தப்பி ஓடும் பரபரப்பு யாருடைய முகத்திலும் தெரியவில்லை.

Assam CM 3.png

எனவே, இந்த படம் பற்றிய உண்மைத் தகவலை கண்டறிய ஆய்வு செய்தோம். முதலில், அஸ்ஸாமில் முதல்வர் சர்பானந்தா சோனோவால் இல்லத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதா, அங்கிருந்து முதல்வர் தப்பிச் சென்றாரா என்று கூகுளில் தேடினோம். அப்போது, திப்ருகார் மாவட்டத்தில் லக்கிநபர் பகுதியில் உள்ள முதல்வரின் இல்லத்தில் கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது என்ற செய்தி நமக்கு கிடைத்தது.  

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள படத்தில் Prag News என்ற லோகோ தெளிவாகத் தெரிந்தது. குறிப்பிட்ட அந்த ஊடகத்தில் அஸ்ஸாம் முதல்வர் தாக்குதலில் இருந்து தப்பினார் என்று செய்தி வெளியாகி உள்ளதா என்று தேடினோம். அப்போது, “கோபம்கொண்ட போராட்டக் காரர்கள் முதல்வர் இல்லத்தை நெருங்கினர். வலுக்கட்டாயமாக ஹெலிகாப்டரில் அனுப்பப்பட்ட முதல்வர்” என்று செய்தி வெளியாகி இருந்தது. ஆனால், ஃபேஸ்புக் பதிவில் உள்ள படம் அதில் இல்லை.  இந்த சம்பவம் டிசம்பர் 2ம் தேதி நடந்தது என்றும் குறிப்பிட்டிருந்தனர். 

insidene.comArchived Link 1
pragnews.comArchived Link 2

நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு ஏதேனும் அசம்பாவிதம் நடந்ததா என்று தேடினோம். அப்போது, திப்ருகார் மாவட்டத்தில் லக்கிநபர் பகுதியில் உள்ள முதல்வரின் இல்லத்தில் கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது என்ற செய்தி நமக்கு கிடைத்தது. 

ஆனால், முதல்வர் திஸ்பூரில் உள்ள இல்லத்தில் வசிப்பதாக அவருடைய அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும், தாக்குதலில் இருந்து தப்பித்து சென்றது தொடர்பாக எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. தாக்குதல் நடந்த அன்று திஸ்பூர் சென்றுவிட்டு ஹெலிகாப்டரில் குவாஹத்தி திரும்பியதாகவும் மாணவர்கள், பொது மக்கள் போராட்டம் காரணமாக நீண்ட நேரம் விமானநிலையத்திலேயே இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதாகவும் செய்திகள் கிடைத்தன.

livemint.comArchived Link

எனவே, படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, கடந்த சில நாட்களாக பலரும் இந்த படத்தை சமூக ஊடகங்களில் பதிவேற்றி வருவது தெரிந்தது. ஆனால், அசல் பதிவு, செய்தியைக் கண்டறிய முடியவில்லை.

Assam CM 4.png

அந்த படத்தில், தொலைக்காட்சியின் லோகோ தெளிவாகத் தெரிந்தது. எனவே, Prag News-ன் யூடியூப் பக்கத்தில் வீடியோ கிடைக்கிறதா என்று தேடினோம். முதல்வர் சர்பானந்தா சோனோவால் என்று டைப் செய்து தேடியபோது எந்த வீடியோவும் கிடைக்கவில்லை. அஸ்ஸாம் சி.எம் என்று டைப் செய்தபோது முதல் வீடியோவாக மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள படத்தின் வீடியோ கிடைத்தது. அதில், “அஸ்ஸாம் இதுபோன்ற ஒரு முதல்வரை கண்டதில்லை – சித்தார்த்தா பட்டாச்சார்யா” என்று தலைப்பிட்டிருந்தனர். 2019 மே 1ம் தேதி அந்த செய்தியை வெளியிட்டிருந்தனர். கட்டுமானப் பணியை பார்வையிட இரும்பு குழாய் ஏணியில் அவர் ஏறிச் சென்ற, இறங்கிய காட்சிகள் இருந்தன. இதன் மூலம், 2019 மே மாதம் எடுக்கப்பட்ட படத்தைப் பயன்படுத்தி அஸ்ஸாம் முதல்வர் தப்பி ஓடினார் என்று பகிர்ந்திருப்பது உறுதியானது.

Archived Link

நம்முடைய ஆய்வில், ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ள வீடியோ 2019 மே 1ம் தேதி பதிவிடப்பட்ட வீடியோவில் இருந்து எடுக்கப்பட்டது என்பது உறுதி செய்யப்படுகிறது. இதன் மூலம், குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டத்தின்போது அஸ்ஸாம் முதல்வர் தப்பி ஓடியபோது எடுத்த படம் என்ற தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:போராட்டக்காரர்களிடமிருந்து தப்பிய அஸ்ஸாம் முதல்வர் – படம் உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False