
அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நிலையில் தற்போது அதிபர் டிரம்ப் முன்னிலையில் குர்ஆன் ஓதப்படுவது போன்ற வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோவின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்திருக்கிறார். நிகழ்ச்சி நடைபெறும் இடத்தின் மையப்பகுதியில் கிறிஸ்தவ மத குருக்கள் போல சிலர் அமர்ந்திருக்கின்றனர். குர்ஆன் ஓதப்படுகிறது. 57 விநாடிகளுக்குப் பிறகு குர்ஆன் ஓதுபவரை காட்டுகின்றனர். நிலைத் தகவலில் “தற்போது அமெரிக்காவில் தர்ஜுமா குர்ஆன் ஓதிவருகிறார்கள் … இறுதியாக இறை வேதத்தை புரிந்து கொள்ள” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை Muscat Sultan என்பவர் 2020 மார்ச் 27ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
இந்தியாவில் மார்ச் 24ம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதே போல் அமெரிக்காவிலும் மருத்துவ அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது. உலகம் முழுக்க உள்ள நாடுகளில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அமெரிக்காவில் கடைசியில் இறை வேதத்தைப் புரிந்துகொண்டு குர்ஆன் ஓதப்படுவதாக வீடியோவை பகிர்ந்துள்ளனர்.
இந்த வீடியோ கொரோனா காலத்தில் எடுக்கப்பட்டது போல இல்லை. யாரும் மாஸ்க் அணியவில்லை. எனவே, உண்மையில் இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்று ஆய்வு செய்தோம். வீடியோ காட்சிகளை புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, பலரும் அமெரிக்காவில் கடைசியில் குர்ஆன் ஓதப்படுகிறது என்று சமூக ஊடகங்களில் இந்த வீடியோவை பகிர்ந்து வருவதைக் காண முடிந்தது.

இவற்றுக்கு நடுவே 2017ம் ஆண்டு ஜனவரி 21ம் தேதி பதிவேற்றம் செய்யப்பட்ட சில செய்திகள் மற்றும் வீடியோக்கள் நமக்கு கிடைத்தன. வாஷிங்டன் போஸ்ட் இதழில், டிரம்ப் அமெரிக்க அதிபராக 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் பதவியேற்பைத் தொடர்ந்து நடந்த சர்வ மத வழிபாட்டு நிகழ்ச்சியில் டிரம்ப் பங்கேற்றார் என்று அதில் குறிப்பிட்டிருந்தனர். சர்வமத பிரார்த்தனை, டிரம்ப், தேசிய கதீட்ரல் உள்ளிட்ட கலைச் சொற்களை வைத்து கூகுளில் தேடினோம். அப்போது அந்த நிகழ்ச்சியின் முழு வீடியோக்கள் நமக்கு கிடைத்தன.
ஃபாக்ஸ் 10 என்ற ஊடகம் வெளியிட்டிருந்த முழு வீடியோ நமக்கு கிடைத்தது. அதில், தொடக்கத்தில் டிரம்ப் வருகிறார். அதைத் தொடர்ந்து சர்வ மத தலைவர்கள் வருகிறார்கள். கிறிஸ்தவ மத குருக்களுடன், இந்து, சீக்கிய, இஸ்லாமிய மத குருக்களும் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருப்பது தெரிந்தது. வீடியோவின் 35வது நிமிடத்தில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட குர்ஆன் ஓதப்படும் பகுதி வருகிறது. இந்த வீடியோவை ஏபி, ராய்டர்ஸ் என பல முன்னணி ஊடக நிறுவனங்கள், ஊடகங்கள் வெளியிட்டிருப்பதைக் காண முடிந்தது.

இந்த நிகழ்ச்சியில் இந்து மத தலைவர் பங்கேற்று பிரார்த்தனை செய்தது தொடர்பாக 2017ல் செய்தி வெளியாகி இருப்பது நமக்கு தெரிந்தது. இந்து மத ஆன்மிக தலைவர் ஒருவர் அமெரிக்க அதிபர் பதவியேற்புக்குப் பிறகு நடைபெறும் சர்வமத வழிபாட்டில் பங்கேற்பது இதுவே முதன்முறை என்றும் அதில் குறிப்பிட்டிருந்தனர்.
இதன் மூலம் 2017ம் ஆண்டு எடுக்கப்பட்ட வீடியோவை தற்போது கொரோனா பாதிப்பு உள்ள சூழலில் எடுக்கப்பட்டது போல பகிர்ந்திருப்பது உறுதி செய்யப்பட்டுகிறது. வீடியோ, டிரம்ப் முன்னிலையில் குர்ஆன் ஓதப்படுவது உண்மைதான். ஆனால் இது இப்போது இல்லை என்பதால் உண்மையுடன் தவறான தகவலும் சேர்த்து பகிரப்பட்டுள்ளது என்பது உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் 2017ம் ஆண்டு எடுக்கப்பட்ட வீடியோவை தற்போது எடுக்கப்பட்டது என்று தவறான தகவல் சேர்த்து வெளியிட்டிருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:அமெரிக்காவில் குர்ஆன் ஓதப்படும் வீடியோ- எப்போது எடுத்தது தெரியுமா?
Fact Check By: Chendur PandianResult: Partly False

இதே போல முஸ்லிம்கள் மீது செய்யப்படும் அநியாய அக்கிரமங்களையும் அதன் உண்மை அறிந்து வெளியிட்டால் …..