
அலிகாரில் 2 வயது சிறுமி பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு, கண்கள் தோண்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டதாகவும் இதைப் பற்றிய செய்தியை ஊடகங்கள் வெளியிடவில்லை என்றும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத் தன்மையை அறிவோம்…
தகவலின் விவரம்:
ஆசிபாவை பற்றி செய்தி வெளியிட்ட தமிழக ஊடகங்கள் ஏன் இதை பற்றி எந்த செய்தியும் வெளியிடவில்லை..? #ஊடகங்களே_ஏன்_இந்த_பாரபட்சம். #please_maximum_share

படத்தில் உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரில் படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். அதனுடன் இந்தியில் வெளியான செய்தியையும் வெளியிட்டுள்ளனர். அதன் அருகில் தமிழில், “3 வயதான அந்த சிறுமியின் பெயர் ட்விங்கிள். உத்தரப்பிரதேச அலிகாரில், ஜாகித் என்பவனால் கற்பழித்து கண்களில் ஆசிட் ஊற்றி, கை கால்களை சிதைத்து கொலை செய்யப்பட்டாள். எந்த ஒரு ஊடகங்களும் போலி போராளிகளும் வாய் திறக்க மாட்டார்கள்” என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த பதிவை, இந்து மதத்தை பற்றி அறிவோம். என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் Murali Krishnan என்பவர் பகிர்ந்துள்ளார். ஆசிபாவை பற்றி செய்தி வெளியிட்ட தமிழக ஊடகங்கள் இதைப் பற்றி எந்த செய்தியும் வெளியிடவில்லை என்று குறிப்பிட்டுள்ள முரளி கிருஷ்ணா, இதை அதிக அளவில் ஷேர் செய்யுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். அதனால், இதை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
உத்தரப்பிரதேச மாநிலத்தில் சிறுமி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட செய்தி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த குழந்தைக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று பாலிவுட் பிரபலங்கள் பலரும் தங்கள் சமூக ஊடக பக்கங்களில் குரல் எழுப்பி வருகின்றனர்.
இந்த கொலை பற்றிய செய்தி, காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியின் ட்வீட்டுக்குப் பிறகே அரசியல் சாயம் பூசப்பட்டுள்ளது என்று இந்தியா டுடே வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கொலை சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும் ராகுல் காந்தி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “உ.பி அலிகாரில் மிகக் கொடூரமான முறையில் சிறுமி கொலை செய்யப்பட்டுள்ளது மிகப்பெரிய அதிர்ச்சியையும் தாக்கத்தையும் எனக்கு ஏற்படுத்தியது. எப்படித்தான் ஒரு மனிதனுக்கு ஒரு குழந்தையை இப்படி செய்ய மனது வந்ததோ? இந்த மிக மோசமான கொடூரமான குற்றத்தை செய்தவர்கள் தண்டனையில் இருந்து தப்பிவிடவே கூடாது. உ.பி காவல் துறை மிக விரைவாக செயல்பட்டு குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தர வேண்டும்” என்று சொல்லியிருந்தார்.
ராகுல் காந்தியைத் தொடர்ந்து பிரியங்கா காந்தி, உ.பி முன்னாள் முதல்வர் மாயாவதி, பாலிவுட் நடிகர் அக்ஷய் என்று பலரும் இந்த விவகாரம் தொடர்பாக தங்கள் கோபத்தை சமூக ஊடகங்களில் பதிவு செய்தனர். தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையமும் இது தொடர்பாக முழு அறிக்கை தாக்கல் செய்யும்படி அலிகார் போலிசுக்கு உத்தரவிட்டது.
ஆனால், சமூக ஊடகங்களில் இந்த கொலை சம்பவத்துக்கு கண், காது, மூக்கு வைத்து பல பொய்யான தகவல்களை பரப்ப ஆரம்பித்துவிட்டனர். அதிலும், காஷ்மீரில் சிறுமி ஆசிபா கொலைக்கு பொங்கிய சமூக ஆர்வலர்கள் சிறுமி ட்விங்கிள் விவகாரத்தில் குரல் எழுப்பாதது ஏன் என்று கேள்வி எழுப்பினார்கள்.
மேலும், சிறுமியின் கண்கள் தோண்டப்பட்டதாகவும், சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், சிறுமியின் பிறப்புறுப்பில் அமிலம் ஊற்றப்பட்டது என்றும் பல வதந்திகள் பரவின.
ஆனால், இவை அனைத்தையும் அலிகார் போலீசார் மறுத்துள்ளனர். இது தொடர்பாக அலிகார் போலீஸ் எஸ்.எஸ்.பி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து ஆல்ட் நியூஸ் அலிகார் போலீஸ் எஸ்.எஸ்.பி-யை தொடர்புகொண்டு விசாரித்துள்ளது. அப்போது அவர், “சிறுமியின் உடல் புழுக்கள் வைக்கப்பட்ட நிலையிலேயே கிடைத்தது. உடல்கூறு ஆய்வில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உட்படவில்லை என்பது தெரிந்தது. இதை உறுதி செய்ய சிறுமியின் பிறப்புறுப்பு பகுதி வேறு ஒரு ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. மேலும், சிறுமியின் கண்கள் தோண்டப்படவில்லை, அவர் உடலில் ஆசிட் வீச்சு எதுவும் இல்லை. மூச்சுத் திணறல் காரணமாகவே சிறுமி உயிரிழந்தார் என்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இந்த உடல்கூறு ஆய்வு முடிவு சிறுமியின் பெற்றோருக்கும் வழங்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.
மேலும், குழந்தை காணாமல் போனபோது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் துரிதமாக செயல்படவில்லை என்று கூறி 5 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக ஆல்ட் நியூஸ் வெளியிட்ட செய்தியை முழுமையாகப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள். தவறான தகவலை பரப்ப வேண்டாம் என்று அலிகார் போலீசார் வெளியிட்ட எச்சரிக்கை தொடர்பாக இன் இந்தியா தமிழ் மற்றும் மாலை மலரிலும் செய்தி வெளியாகி உள்ளன.
இதன் மூலம், சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நிகழ்த்தப்பட்டது, உடலில் ஆசிட் ஊற்றப்பட்டது, கண்கள் தோண்டப்பட்டன என்ற தகவல் வெறும் விஷமத்தனமான வதந்தி என்பது நிரூபிக்கப்படுகிறது.
அடுத்ததாக, இந்த செய்தியை தமிழ் ஊடகங்கள் எதுவும் வெளியிடவில்லை என்று குறிப்பிட்டுள்ளனர். தினத்தந்தி, புதிய தலைமுறை, தினமலர், தினமணி, மாலைமலர் என்று எல்லா ஊடகங்களிலும் இது தொடர்பான செய்திகள் வந்துள்ளதை காண முடிந்தது.

ஊடகங்களில் செய்தி வெளியானதற்கான ஆதாரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
ஒரு சிறுமி படுகொலை செய்யப்பட்டுள்ளார். அது தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்பதுதான் எல்லோரின் விருப்பமும். ஆனால், சிறுமி கொலையில் மதத்தைப் புகுத்தி, இந்த செய்தியைத் தமிழ் ஊடகங்கள் மறைத்துவிட்டது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முயன்றுள்ளனர்.
இதற்காக, எந்த ஒரு ஆதாரமும் இன்றி இறந்த சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நடந்தது, கண்கள் தோண்டப்பட்டது, பிறப்புறுப்பில் அமிலம் ஊற்றப்பட்டது என்று எல்லாம் நடைபெறாத சம்பவங்களை எல்லாம் எப்படித்தான் நடந்ததாக இவர்களால் எழுதத் தோன்றியதோ… இந்த கொலை தொடர்பாக போலீசார் இரண்டு பேரை கைது செய்துள்ளனர். அவர்களுக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்பதே எல்லோருடைய எதிர்பார்ப்பும். இதற்கு மேல் என்ன செய்ய வேண்டும் என்று இவர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை.
நாம் மேற்கொண்ட ஆய்வில் நமக்கு கிடைத்த தகவல்…
அலிகாரில் சிறுமி படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஆனால் மேற்கண்ட பதிவில் கூறப்பட்டுள்ளது போன்று பாலியல் வன்கொடுமை எல்லாம் நடைபெறவில்லை.
சிறுமி மூச்சுத் திணறியே இறந்தார். வீண் வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று அலிகார் போலீசார் வெளியட்டுள்ள ட்விட் நமக்கு கிடைத்துள்ளது.
சிறுமியின் படுகொலை தொடர்பான செய்தியை தமிழ் ஊடகங்கள் வெளியிட்டுள்ளதற்கான ஆதாரமும் கிடைத்துள்ளது.
இந்த ஆதரங்கள் அடிப்படையில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்படவில்லை, கண் பிடுங்குதல், ஆசிட் வீச்சு என வதந்தியில் சொல்லப்படும் எந்த ஒரு நிகழ்வும் நடக்கவில்லை என்றும் இந்த செய்தியை தமிழ் ஊடகங்கள் வெளியிட்டுள்ளன என்றும் உறுதி செய்யப்படுகிறது. இதன் மூலம், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:அலிகார் 2 வயது சிறுமி கொலையை மறைத்த ஊடகங்கள்! – எல்லை மீறும் சமூக ஊடக வதந்தி!
Fact Check By: Praveen KumarResult: False
