ராமதாஸ் மற்றும் அன்புமணியை தவறாக சித்தரிக்கும் ஃபோட்டோஷாப் பதிவு!

அரசியல் சமூக ஊடகம்

ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி புகைப்படத்தை வைத்து, ‘’பூத் – Son of Agni’’ என்ற தலைப்பில் பகிரப்பட்ட ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதுபற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Link I Archived Link

Troll Mafia என்ற ஃபேஸ்புக் ஐடி, ஜூன் 22, 2019 அன்று இந்த பதிவை பகிர்ந்துள்ளது. இதில், ராமதாஸ் அமர்ந்தபடியும், அன்புமணி நிற்பது போலவும் ஃபோட்டோஷாப் செய்துள்ளனர். இது வேடிக்கையாக இருந்தாலும், அரசியல் உள்நோக்கத்துடன் பகிரப்பட்ட பதிவு என பார்க்கும்போதே தெரிகிறது.

உண்மை அறிவோம்:
பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி பற்றி சமீபகாலமாக, சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக, மக்களவைத் தேர்தலுக்கு பிறகுதான், இந்த விமர்சனங்கள் மிக வெறுப்பூட்டும் வகையில், தனிநபரை குறிவைக்கக்கூடியவையாக மாற தொடங்கியுள்ளன.

பாமக தேர்தல் தோல்வி பற்றி தி இந்து வெளியிட்ட செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும். இந்நிலையில்தான், சமூக ஊடகங்களில், மரவெட்டி என்றும், குடிசை கொளுத்தி என்றும், பாமக.,வினரை சில குறிப்பிட்ட சமூகத்தினர் தொடர்ச்சியாக விமர்சித்து வருகின்றனர். இதற்கு மிகவும் காட்டமாக ராமதாஸ் பதில் அளித்துள்ளது, தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் மேலும் சர்ச்சையை அதிகப்படுத்தியுள்ளது.

இந்நிலையில்தான், ராமதாஸை தனிப்பட்ட முறையில் சீண்டும் நோக்கில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு வெளியாகியுள்ளது. இது விளையாட்டுத்தனமாக தோன்றினாலும், son of agni என்ற தலைப்பிட்டதன் மூலமாக, இது விஷமத்தனமான சிந்தனை என தெளிவாகிறது.

உண்மையில், இது விஜய் நடித்து சமீபத்தில் வெளியிடப்பட்ட பிகில் படத்தின் ஃபர்ஸ்டலுக் போஸ்டராகும். அதனை எடுத்து, தங்களது பிரசாரத்திற்காக, இப்படி தவறான முறையில் சித்தரித்து இங்கே பகிர்ந்துள்ளனர்.

Archived Link

பிகில் பட ஃபர்ஸ்ட் லுக்கை பலரும் மார்ஃபிங் செய்து பதிவிடுகிறார்கள். அஜித் ரசிகர்கள் கூட, அதனை நட்புறவு முறையில் மார்ஃபிங் செய்து பதிவிட்டிருந்தனர்.

ஆனால், நாம் ஆய்வு செய்யும் ஃபேஸ்புக் பதிவு விஷமத்தனமான வகையில் இதனை பயன்படுத்தியுள்ளது. அந்த பதிவு வெளியிடப்பட்ட தேதியை கவனித்தால்தான் இந்த உண்மை புரியும். அதாவது, பிகில் பட ஃபர்ஸ்ட்லுக் ஜூன் 21ம் தேதி வெளியிடப்பட்டது. ராமதாஸ் தமிழக அரசியல் நிலவரத்தை விமர்சித்து பேசியது, ஜூன் 22ம் தேதி. அதன்பிறகுதான், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதாவது நகைச்சுவை உணர்வாக இருப்பவர்கள், பிகில் படத்தின் அறிவிப்பு வெளிவந்தபோதே, அதை வைத்து மற்றவர்கள் ஃபோட்டோஷாப் செய்தது போல, தானும் செய்திருப்பார்கள். ஆனால், திடீரென ஜூன் 22ம் தேதி ராமதாஸை பலரும் விமர்சிக்கும் நேரத்தில், இப்படி தவறான புகைப்பட பதிவை வெளியிட்டிருக்கிறார்கள். இப்படி ஒரு அரசியல் கட்சித் தலைவரையோ அல்லது தனிப்பட்ட நபரையோ தவறாக சித்தரிப்பது, சம்பந்தப்பட்டவருக்கு தெரிய நேரிட்டால் போலீஸ் வழக்கு தொடர்வதில் கொண்டுபோய் விடும் என்பது, இந்த பதிவை வெளியிட்ட நபருக்கு தெரியாது போலும்…  

எனவே, இது ஃபோட்டோஷாப் செய்யப்பட்ட , அரசியல் காரணங்களுக்காக தவறான முறையில் சித்தரிக்கப்பட்ட தகவல் என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறான ஒன்று என முடிவு செய்யப்படுகிறது. நமது வாசகர்கள் யாரும் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:ராமதாஸ் மற்றும் அன்புமணியை தவறாக சித்தரிக்கும் ஃபோட்டோஷாப் பதிவு!

Fact Check By: Parthiban S 

Result: False