
காஷ்மீரில் ராணுவத்தினர் மீது கல்வீசி தாக்குதல் நடத்துவோரை கண்டதும் சுட உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டுள்ளதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை, பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் படங்கள் வைக்கப்பட்டுள்ளன. அந்த பதிவில், “காஷ்மீரில் பொது மக்கள் மீதும் இராணுவத்தினர் மீதும் கல்லெறியும் கயவர்களை யார் அனுமதியின்றியும் சுட்டுத்தள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒப்புதல். விரைவில் சென்னை விஜயம் நம் தேசத் தலைவர். வளமான தமிழகம் அமைக்க தமிழகம் வருகிறர் திரு.அமித்ஷா” என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த பதிவை, முத்து கிருஷ்ணன் என்பவர் 2019 ஜூன் 30ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதைப் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
அமித்ஷா மத்திய உள்துறை அமைச்சராகவும் பா.ஜ.க அகில இந்திய தலைவராகவும் உள்ளார். அவரை தேசத் தலைவர் என்று குறிப்பிட்டுள்ளனர். தேசத் தலைவர் என்றால் அது குடியரசுத் தலைவரையே குறிக்கும். எனவே, அமித்ஷாவை கட்சியின் தேசியத் தலைவர் என்று அழைப்பதே சரியாக இருக்கும். அவர்கள் கட்சியின் அறிவிப்பாக இருப்பதால் தேசியத் தலைவர் என்று குறிப்பிட்டிருக்கலாம்.
நம்முடைய ஆய்வு அதைப் பற்றியது இல்லை. காஷ்மீரில் பிரிவினை கேட்டு போராடுபவர்கள் இந்திய ராணுவ வீரர்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவர்களை யாருடைய அனுமதியுமின்றி சுட்டுத்தள்ள மத்திய உள்துறை அமைச்சராக உள்ள அமித்ஷா ஒப்புதல் அளித்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளனர். இது உண்மையா என்று நம்முடைய ஆய்வை தொடங்கினோம்.
சமீபத்தில், காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை 6 மாதங்கள் நீட்டிப்பதற்கான தீர்மானம் சில தினங்களுக்கு முன்பு நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை உள்துறை அமைச்சரான அமித்ஷா கொண்டுவந்து பேசினார்.
அப்போது, “கடந்த தேர்தல்களில் காஷ்மீரில் ரத்த ஆறு ஓடியது. ஆனால், நடந்து முடிந்த தேர்தலில் அப்படி எதுவும் நடைபெறவில்லை. காஷ்மீரில் சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. மக்களுக்கு அவர்களுக்கான உரிமையை அளிக்க வேலை செய்து வருகிறோம். பெரும்பாலான பிரச்னைகள் ஓராண்டுக்குள்ளாகவே சரி செய்யப்பட்டுள்ளன. ரம்ஜான் நோன்பு, அமர்நாத் யாத்திரை மற்றும் பாதுகாப்பு காரணங்களால் தற்போது தேர்தல் நடத்த முடியவில்லை. இவ்வாண்டு இறுதிக்குள் தேர்தல் நடத்தப்படும்” என்றார்.
எந்த இடத்திலும் அவர் கல்வீசி தாக்குதல் நடத்துபவர்கள் மீது துப்பாக்கியால் சுட அனுமதி அளித்தார் என்று எந்த ஒரு செய்தியிலும் குறிப்பிடவில்லை.
ஆட்சிக்கு வந்த பிறகு அனுமதி அளித்துள்ளாரா, இது தொடர்பாக செய்தி வெளியாகி உள்ளதா என்று கூகுளில் தேடினோம். ஆனால் அப்படி எந்த ஒரு செய்தியும் நமக்குக் கிடைக்கவில்லை. அதே நேரத்தில், பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த அதிகாரி ஒருவரின் குடும்பத்தினரை அமித்ஷா சந்தித்தது தொடர்பான செய்திகள் நமக்கு கிடைத்தன. அதில் கூட கல் எறிந்து தாக்குதல் நடத்துபவர்களை சுட உத்தரவிட்டதாக குறிப்பிடவில்லை.

உள்துறை அமைச்சகத்தில் இது தொடர்பாக அறிவிப்பு, பத்திரிகை செய்தி ஏதேனும் வெளியிட்டுள்ளார்களா என்று ஆய்வு மேற்கொண்டோம். உள்துறை அமைச்சகத்தில் உள்ள மீடியா தகவல் பிரிவை கிளிக் செய்து பார்த்தோம். அதில், அவர் 2019 ஜூன் 2ம் தேதி உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றது மேல் அனைத்து தகவலும் இருந்தது. அதில், ஜம்மு காஷ்மீர் தொடர்பாக ஏதேனும் அறிவிப்பு வெளியாகி உள்ளதா என்று ஆய்வு செய்தோம்.

ஜம்மு காஷ்மீருக்கு பயணம் மேற்கொண்டது, அங்கு நடந்து வரும் வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்தது, அமர்நாத் யாத்திரை பயண பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தது என்று மூன்று செய்திகள் நமக்குக் கிடைத்தன. அந்த செய்திகளைப் படித்துப் பார்த்தோம். போராட்டத்தில் ஈடுபடுபவர்களைச் சுட அனுமதி அளித்துள்ளதாக அமித்ஷா கூறியதாக எந்த ஒரு தகவலும் நமக்குக் கிடைக்கவில்லை.
காஷ்மீரில் கல் எறிந்து தாக்குதல் நடத்துபவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி பதில் அளித்துள்ளார். அப்போது அவர், கல் வீசி தாக்குதல் நடத்துபவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர் என்று குறிப்பிட்டார். துப்பாக்கியால் கூட அனுமதி அளிக்கப்பட்டது என்று அவர் கூறவில்லை. அந்த செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
அதே நேரத்தில், பாதுகாப்புப் படையினர் மீது கல்வீசி தாக்குதல் நடத்துவோர் மீது துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டும் என்பது பா.ஜ.க-வினர் கோரிக்கையாக இருந்து வருகிறது.
நாம் மேற்கொண்ட ஆய்வில்,
1) காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை நீட்டிக்கும் தீர்மானத்தை உள்துறை அமைச்சர் அமித்ஷா கொண்டு வந்து பேசியதற்கான ஆதாரம் கிடைத்துள்ளது. அதில் போராட்டக்காரர்களை துப்பாக்கியால் கூட உத்தரவிட்டதாக அவர் கூறவில்லை.
2) போராட்டக்காரர்களைச் சுட உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்ததாக எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை.
3) போராட்டக்காரர்களை சுட உத்தரவிட்டதாக உள்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இல்லை.
இதன் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு பொய்யானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:“காஷ்மீரில் ராணுவத்தினர் மீது கல்வீசி தாக்குவோரை சுட்டுத்தள்ள உத்தரவிட்ட அமித்ஷா?” – பகீர் ஃபேஸ்புக் பதிவு!
Fact Check By: Praveen KumarResult: False
