
முழுக்க முழுக்க ஆரஞ்சு நிற ஜெர்ஸியில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் இருக்கும் படத்தை ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ள, செய்தி இணைய தளம் ஒன்று, இதுதான் இந்தியாவின் புது ஆரஞ்சு ஜெர்ஸி என்று குறிப்பிட்டுள்ளது. இது உண்மையா என்று ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:

Facebook Link I Archived Link 1 I Archived Link 2
2019 ஜூன் 29ம் தேதி, Cinemapettai என்ற ஃபேஸ்புக் பக்கத்தில், “இது தான் இந்தியாவின் புதிய ஆரஞ்சு ஜெர்சி. ஐசிசி விதித்த புதிய சட்டம் தான் மாற்றத்தின் காரணமா ? மழுப்பும் பிசிசிஐ” என்று ஒரு புகைப்படத்தை ஷேர் செய்துள்ளனர். அந்த படத்தில், இந்திய கிரிக்கெட் அணியினர் முழு ஆரஞ்சு நிறத்திலான ஜெர்ஸியை அணிந்துள்ளனர். இந்த படத்தில் உள்ள படி இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்ஸி முழு ஆரஞ்சு நிறத்துக்கு மாற்றப்பட்டுள்ளதா என்று ஆய்வு மேற்கொண்டோம்.
உண்மை அறிவோம்:
கால்பந்தாட்டத்தில் உள்ளது போன்று ஒவ்வொரு அணியும் தங்களுக்கு என்று ஹோம், அவே என்று இரண்டு ஜெர்ஸியை உருவாக்கிக்கொள்ள வேண்டும், வெளிநாட்டுக்குச் சென்று விளையாடும்போது ஒரு ஆட்டத்திலாவது அவே ஜெர்ஸியை பயன்படுத்த வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் வாரியம் புதிய விதிமுறையை அறிமுகப்படுத்தியது. இதைத் தொடர்ந்து ஒவ்வொரு நாடும் தங்களுக்கென இரண்டாவது புது ஜெர்ஸியை உருவாக்கியுள்ளன. இந்திய அணி நீலத்துடன் ஆரஞ்சு நிறத்தைச் சேர்த்து ஜெர்ஸியை உருவாக்கியுள்ளது.
மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் இதுதான் இந்தியாவின் புது ஆரஞ்சு நிற ஜெர்ஸி என்று ஒரு படத்தை பகிர்ந்திருந்தனர். அந்த படத்தில், இந்திய அணி ஜெர்ஸியில் நீல நிறத்தையே காணவில்லை. முழுவதும் ஆரஞ்சு நிறமாகவே இருந்தது. அந்த படத்தை yandex.com இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம்.

அப்போது, ஹிந்துஸ்தான் டைம்ஸ் இணையத்தில் வெளியான படம் ஒன்று கிடைத்தது. அதில், இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் நீல நிற வழக்கமான ஜெர்ஸியில் இருந்தனர். அந்த படத்தை எடுத்து, ஜெர்ஸி நிறத்தை மாற்றி வெளியிட்டுள்ளது தெரிந்தது.

இந்த பதிவில், “இது தான் இந்தியாவின் புதிய ஆரஞ்சு ஜெர்சி… ஐசிசி விதித்த புதிய சட்டம்தான் மாற்றத்தின் காரணமா? மழுப்பும் பிசிசிஐ…” என்று தலைப்பிட்ட ஒரு செய்திக்கான இணைப்பைக் கொடுத்திருந்தனர். அந்த செய்தியைப் படித்தோம்.

அதில், ஐ.சி.சி விதிமுறைகளை விளக்கி எழுதியிருந்தார்கள். ஆனால், தலைப்பில் உள்ளது போன்று ஐ.சி.சி விதிமுறைப்படித்தான் இந்த ஜெர்ஸி மாற்றம் நிகழ்ந்துள்ளதா என்று இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் கேள்வி கேட்டதாகவோ, அதற்கு அவர்கள் பதில் அளிக்காமல் நழுவியதாகவே செய்தி இல்லை.

அதே நேரத்தில், ஜூன் 30ம் தேதி நடைபெற உள்ள இந்தியா – இங்கிலாந்து போட்டியில் இந்திய அணி வீரர்கள் அணிய உள்ள புது ஜெர்ஸி என்று இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட ட்வீட்டையும் செய்தியில் இணைத்துள்ளனர். அதில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு மற்றும் செய்தியில் இடம் பெற்றது போன்று முழு ஆரஞ்சு நிற ஜெர்ஸி இல்லை. முன்பக்கம் கிட்டத்தட்ட 90 சதவிகிதம் நீல நிறத்துடனும், பின்புறம் முழுவதும் ஆரஞ்சு நிறத்தில் இருக்கும் வகையிலும் அந்த ஜெர்ஸி இருந்தது.
இதை உறுதி செய்ய, புதிய ஜெர்ஸியில் இந்திய வீரர்கள் உள்ளார்களா என்று தேடினோம். அப்போது உலகக் கோப்பை கிரிக்கெட் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம், விராட் கோலி இன்ஸ்டாகிராம் பக்கம் உள்பட இந்திய கிரிக்கெட் வீரர்களின் சமூக ஊடக பக்கங்களில் புதிய ஜெர்ஸியில் பல படங்கள் வெளியானது நமக்கு கிடைத்து. இது தொடர்பாக என்டிடிவி வெளியிட்ட செய்தியைப் படிக்க, படங்களைப் பார்க்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் இடம் பெற்ற படம் தவறானது, எடிட் செய்யப்பட்டது, வாசகர்களைக் குழப்பும் வகையில் தவறான படம், தலைப்பு வைத்து செய்தி வெளியிடப்பட்டுள்ளது என்பது உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:“இந்திய கிரிக்கெட் அணியின் ‘அவே’ஜெர்ஸி எது?” – குழப்பும் ஃபேஸ்புக் பதிவு!
Fact Check By: Praveen KumarResult: False
