
120 கிலோ மீட்டர் வேகத்தில் மேற்கு வங்கத்தை தாக்கிய ஆம்பன் புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்பு என்று வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

1.16 நிமிடம் ஓடக்கூடிய வீடியோவை வெளியிட்டுள்ளனர். அதில் சாலை ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கண்டெய்னர் லாரிகள் சரிந்து கிடக்கின்றன. வீடியோவில், லாரி இயக்கப்படும் சப்தம் மட்டுமே கேட்கிறது. இது எங்கே எடுக்கப்பட்டது என்று குறிப்பிடவில்லை. நிலைத் தகவலில், “120 கிலோ மீட்டர் வேகத்தில் மேற்கு வங்கத்தை தாக்கிய ஆம்பன் புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்பு !!” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வீடியோவை Hello FM 106.4 என்ற ஃபேஸ்புக் பக்கம் 2020 மே 20ம் தேதி வெளியிட்டுள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
போராட்டம், இயற்கை பேரிடர் என மக்கள் கவனத்தை அதிகம் ஈர்க்கும் நிகழ்வு நடந்தால் அது தொடர்பான பழைய வீடியோவை எடுத்து தற்போது நடந்தது போல் வெளியிடுவது அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அந்த வகையில் ஆம்பன் புயல் பாதிப்பு தொடர்பாக பல பதிவுகள், வீடியோக்கள் சமூக ஊடகத்தை ஆக்கிரமிக்கத் தொடங்கியுள்ளன. சாலையில் விழுந்து கிடக்கும் கண்டெய்னர் லாரிகள் வீடியோ ஆம்பன் புயல் காரணமாக நிகழ்ந்தது என்று பலரும் சமூக ஊடகத்தில் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.
வீடியோவில் உள்ள காட்சிகளை புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். வெவ்வேறு படங்களை பதிவிட்டு தேடியபோது இந்த வீடியோ தொடர்பான தகவல் கிடைத்தது.

2018ம் ஆண்டு இந்த வீடியோ சமூக ஊடகங்கள், சில ஊடகங்களில் வெளியானதாக கூகுள் தேடல் முடிவுகள் காட்டின. அந்த இணைப்புகளைத் திறந்து பார்த்தபோது வீடியோ இருந்தது, இந்தியாவில் எடுக்கப்பட்டது என்ற குறிப்பு இருந்தது, ஆனால் எப்போது பதிவிடப்பட்டது என்ற தகவல் இல்லை.
எனவே, யூடியூபில், “புயல் பாதிப்பு காரணமாக சாலையில் சரிந்துகிடக்கும் லாரிகள்” என ஆங்கிலத்தில் டைப் செய்து தேடினோம். அப்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா உள்ளிட்ட பல ஊடகங்கள் இந்த வீடியோவை 2018ம் ஆண்டு வெளியிட்டிருப்பது தெரிந்தது.
2018ம் ஆண்டு அக்டோபர் 11ம் தேதி பதிவிடப்பட்ட டைம்ஸ் ஆஃப் இந்தியா வீடியோவைப் பார்த்தோம். அதில், ஆந்திர மாநிலம் ஶ்ரீகாகுளத்தில் புயல் ஏற்படுத்திய மிக மோசமான பாதிப்பு என்று குறிப்பிட்டிருந்தனர். இதன் மூலம் பழைய வீடியோவை எடுத்து “120 கிலோ மீட்டர் வேகத்தில் மேற்கு வங்கத்தை தாக்கிய ஆம்பன் புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்பு” என்று இப்போது நடந்த புயல் பாதிப்பு தொடர்பான தகவல் சேர்த்து பகிர்ந்திருப்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் இந்த பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை, எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049044263) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:சாலையில் வரிசையாக சரிந்து கிடக்கும் லாரிகள்; ஆம்பன் புயல் காரணமா?
Fact Check By: Chendur PandianResult: False
