
‘’கொரோனாவை கண்காணிக்க கேரள அரசு நெதர்லாந்தில் இருந்து சிசிடிவி கேமிரா வாங்கியுள்ளது,’’ எனும் தலைப்பில் பகிரப்படும் ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

இந்த பதிவில், திரைப்பட காட்சி ஒன்றில் சமுத்திரக்கனியும், மோடியும் பேசிக் கொள்வது போல மீம் பகிர்ந்துள்ளனர். அதன் மேலே, புதிய தலைமுறை தொலைக்காட்சி பெயரில் ஒரு பிரேக்கிங் நியூஸ் கார்டு இணைத்துள்ளனர். அதில், ‘’கொரோனா தொற்றை கண்காணிக்க கேரளா அரசு, நெதர்லாந்தில் இருந்து சிசிடிவி கேமிராக்கள் வாங்கியுள்ளது. அவை ஒவ்வொன்றின் விலை 7 லட்சம். விரைவில் பேருந்து நிலையங்களில் பொருத்தப்படும்,’’ எனக் குறிப்பிட்டுள்ளனர்.
அதற்கு கீழே, மோடியை பார்த்து சமுத்திரக்கனி, ‘’ஒரு மாநிலத்தோட முதல்வர் எவ்ளோ அறிவா வேலை பார்த்துட்டு இருக்காரு. நீ என்னடான்னா கை தட்டுங்க, வௌக்கு புடிங்கனு சொல்லிட்டு திரியற,’’ என்று கேட்பது போல எழுதியுள்ளனர்.
உண்மை அறிவோம்:
மேற்குறிப்பிட்ட விசயம் சற்று வேடிக்கையாக இருந்தாலும், ஏதேனும் செய்தி ஊடகங்களில் வெளியாகியுள்ளதா, என தகவல் தேடினோம். அப்படி எதுவும் விவரம் கிடைக்கவில்லை. கொலை, திருட்டு போன்ற குற்ற சம்பவங்களை வேண்டுமானால் சிசிடிவி வைத்து கண்காணிக்கலாம். ஆனால், கொரோனாவை எப்படி கண்காணிப்பார்கள் என்றுதான் கேள்வி எழுகிறது.
இதன்பேரில், சிசிடிவி நிறுவும் திட்டம் எதையும் கேரளா மேற்கொண்டுள்ளதா, என தகவல் தேடினோம். அப்போது, குற்ற சம்பவங்களை தடுக்க, கேரளாவில் சிசிடிவி கேமிரா நிறுவி, பிரத்யேக கண்காணிப்பு பணி மேற்கொள்ள கேரள போலீசார் முயற்சி மேற்கொண்ட விசயம் தெரியவந்தது. ஆனால், இது மிகவும் பழைய செய்தி.

இதற்கடுத்தப்படியாக, கொரோனா தொற்றை கண்காணிக்க சிசிடிவி எதுவும் நெதர்லாந்தில் இருந்து வாங்கியதா அல்லது மாநிலம் முழுக்க நிறுவியதா என தேடியபோது எந்த தகவலும் கிடைக்கவில்லை.
மாறாக, கொரோனாவை கண்காணிக்க, கால் சென்டர் போன்ற பிரத்யேக கட்டுப்பாட்டு மையம் ஒன்றை ஏற்படுத்தி, அதன் வழியே பாதிக்கப்பட்டவர்களின் தகவலை பெற்று, அவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை வழங்கி, கொரோனா தொற்றை கேரள அரசு வெகுவாகக் குறைத்துள்ளது என்ற விசயம் மட்டுமே கிடைத்தது. இது மற்ற இந்திய மாநிலங்களுக்கே முன்னோடியான விசயம்தான்.
குறிப்பிட்ட நியூஸ் கார்டை உற்று கவனித்தாலே, அது தெளிவின்றி இருப்பதையும், அதில் உள்ள ஃபாண்ட், வடிவமைப்பு உள்ளிட்டவை வழக்கத்தை விட மாறாக இருப்பதையும் எளிதில் உணரலாம்.

அதுவும், இவர்கள் பயன்படுத்தியுள்ள டெம்ப்ளேட் அச்சு அசலாக புதிய தலைமுறை ஊடகம் பயன்படுத்தக்கூடியதாகும். எனவே, புதிய தலைமுறையின் ஆன்லைன் பிரிவு நிர்வாகியை தொடர்புகொண்டு இந்த நியூஸ் கார்டு பற்றி விசாரித்தோம். இது ‘’போலியான நியூஸ் கார்டு; இப்படி எந்த செய்தியும் நாங்கள் வெளியிடவில்லை,’’ என்று அவர் தெரிவித்தார்.
இந்த டெம்ப்ளேட்டில் புதிய தலைமுறை வெளியிட்ட நியூஸ் கார்டு ஒன்றை உதாரணத்திற்காக கீழே இணைத்துள்ளோம்.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, புதிய தலைமுறை ஊடகத்தின் டெம்ப்ளேட் பயன்படுத்தி தவறான தகவலை பரப்பியுள்ளனர் என்று நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை காண நேரிட்டால், எங்களது வாட்ஸ்ஆப் (+91 9049044263) எண்ணிற்கு தகவல் தெரிவியுங்கள்.

Title:கொரோனாவை கண்காணிக்க கேரள அரசு சிசிடிவி கேமிரா வாங்கியதா?
Fact Check By: Pankaj IyerResult: False
