FactCheck: நிஜாமாபாத்தில் ஆக்சிஜன் இணைப்பை துண்டித்த ஆம்புலன்ஸ் டிரைவரை போலீசார் அடித்தனரா?- உண்மை இதோ!
‘’நிஜாமாபாத்தில் மருத்துவமனை ஒன்றில் ஆக்சிஜன் சப்ளை துண்டித்த ஆம்புலன்ஸ் டிரைவரை அடித்த போலீசார்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
இந்த வீடியோ செய்தியை, வாசகர் ஒருவர் 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி உண்மையா என்று கேட்டிருந்தார்.
மருத்துவமனை ஒன்றில், ஒருவரை போலீசார் சூழ்ந்துகொண்டு, அடிக்கும் காட்சிகளை இந்த வீடியோவில் நாம் காண முடிகிறது. இதன் தலைப்பில், ‘’தெலுங்கானா மாநிலம், நிஜாமாபாத்தில், வருமானம் இல்லை என்பதற்காக, வேண்டுமென்றே மருத்துவமனை ஒன்றின் ஆக்சிஜன் இணைப்பை துண்டித்த ஆம்புலன்ஸ் டிரைவரை அடித்து உதைத்த போலீசார்,’’ எனக் குறிப்பிட்டுள்ளனர்.
இதனை பலரும் ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப் உள்ளிட்டவற்றில் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.
FB screenshot: various posts with similar caption
உண்மை அறிவோம்:
சமீபத்தில், தெலுங்கானா மாநிலம், நிஜாமாபாத்தில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றின் அவசர சிகிச்சைப் பிரிவில், ஆக்சிஜன் விநியோகத்தை துண்டித்த ஆம்புலன்ஸ் டிரைவர் பிடிபட்டார் என்று கூறி ஊடகங்களில் செய்தி வெளியானது.
ஆனால், இந்த வீடியோவிற்கும், நாம் ஆய்விற்கு எடுத்துக் கொண்ட வீடியோவிற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.
எனவே, குறிப்பிட்ட வீடியோ காட்சிகளை ஃபிரேம் முறையில் பிரித்தெடுத்து, கூகுளில் ரிவர்ஸ் இமேஜ் முறையில் தேடல் செய்தோம். அப்போது, இந்த சம்பவம் பற்றி வெளியான பல்வேறு செய்திகளின் லிங்க் நமக்கு கிடைத்தது.
இதன்படி, ஏஎன்ஐ வெளியிட்ட செய்தியில், ‘’மகாராஷ்டிரா மாநிலம், ஜல்னா பகுதியில் செயல்படும் மருத்துவமனை ஒன்றில், சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நோயாளி உயிரிழந்த நிலையில், அவரது உறவினர்கள், மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தினர். இதன்பேரில், அவர்களில் ஒருவரை போலீசார் பிடித்து, தாக்கியுள்ளனர். அந்த நபர், அப்பகுதியில் பாஜக இளைஞர் அணி நிர்வாகியாக உள்ளார்,’’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அடி வாங்கும் நபரின் புகைப்படமும், தெளிவாக வெளியிடப்பட்டுள்ளது. நாம் ஆய்வு செய்யும் வீடியோவில் உள்ள நபரும் இவரேதான்.
இந்த சம்பவம் ஜல்னா பகுதியில் உள்ள தீபக் மருத்துவமனையில் நிகழ்ந்தது என்றும், உரிய விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸ் கண்காணிப்பாளர் விநாயக் தேஷ்முக் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோ காட்சிகள் இணையதளத்தில் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கடந்த வாரம் இதுபற்றி துறைரீதியான விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட போலீசார் 4 பேரை சஸ்பெண்ட் செய்தும் உள்ளனர்.
குறிப்பிட்ட தீபக் மருத்துவமனையை தொடர்புகொண்டு, நாம் இந்த சம்பவம் உண்மையில் அங்கு நிகழ்ந்ததுதானா என்றும் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசி, உறுதிப்படுத்தியுள்ளோம்.
இறுதியாக, குறிப்பிட்ட வீடியோ காட்சிகளுக்கும், நிஜாமாபாத்தில் நிகழ்ந்த சம்பவத்திற்கும் தொடர்பில்லை என்று கூறி, நிஜாமாபாத் போலீசாரே விளக்கம் அளித்து ட்வீட் பகிர்ந்துள்ளனர். அதனையும் கீழே ஆதாரத்திற்காக இணைத்துள்ளோம்.
இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் நிகழ்ந்த வேறொரு சம்பவம் தொடர்பான வீடியோவை எடுத்து, தெலுங்கானா மாநிலத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர் செய்த அட்டூழியம் என்று கூறி சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்பி வருகின்றனர் என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
Title:நிஜாமாபாத்தில் ஆக்சிஜன் இணைப்பை துண்டித்த ஆம்புலன்ஸ் டிரைவரை போலீசார் அடித்தனரா?- உண்மை இதோ!
Fact Check By: Pankaj IyerResult: False