
அஸ்ஸாமில் இஸ்லாமிய மதத்துக்குள் உள்ள சாதி ஏற்றத்தாழ்வு காரணமாக காதலர்கள் நிர்வாணமாக்கப்பட்டு அவமரியாதை செய்யப்பட்டதாக ஒரு தகவல் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Link I Archived Link 1 I Archived Link 2
ஒரு மரத்தில் ஒரு ஆண், பெண் நிர்வாண நிலையில் கட்டப்பட்டுள்ளனர். நிலைத் தகவலில், “அஸ்ஸாமில் உயர்சாதி அஹமதியா முஸ்லீம் பெண்ணை காதலித்த கீழ்சாதி லெப்பை முஸ்லீம் பையன். இருவரையும் நிர்வாணமாக்கி, சாட்டையால் அடித்த கொடூரம்! இஸ்லாத்தில் சாதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது…!” என்று குறிப்பிட்டுள்ளனர். ஆனால், இந்த சம்பவம் எப்போது நடந்தது என்று எந்த தகவலும் இல்லை.
இந்த பதிவை, Dhinesh Babu RV என்பவர் 2019 ஜூன் 21ம் தேதி வெளியிட்டுள்ளார். இது உண்மை என்று கருதி பலரும் இந்த பதிவைப் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் அஸ்ஸாமில் இந்த சம்பவம் நடந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர். ஆனால், படத்தில் இருப்பவர்கள் அனைவரும் இந்தியாவின் மத்திய, கிழக்குப் பகுதிகளைச் சேர்ந்தவர்களைப் போல இருந்தனர். அஸ்ஸாமில் நடந்தது, அஹமதியா –லெப்பை பிரிவினர் என்பதைத் தவிர வேறு எந்த தகவலும் இதில் இல்லை. இதனால், படத்தை yandex.com இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இது தொடர்பான இந்தி செய்தி ஒன்று கிடைத்தது.

அதை மொழியாக்கம் செய்தபோது ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் அருகே நடந்த சம்பவம் என்று குறிப்பிட்டிருந்தனர். உதய்பூரில் இதுபோன்று சம்பவம் நடந்ததா என்று தேடியபோது பல செய்திகள் நமக்குக் கிடைத்தன. இருப்பினும் இந்த படத்தை மட்டும் யாரும் பயன்படுத்தவில்லை. ஆனால் இவை அனைத்தும் 2018 ஜூலை 7, 8 ஆகிய தேதிகளில் வெளியாகி இருந்தன. இந்தியில் வெளியான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
இதனால், இந்தியில் வெளியான செய்தி மற்றும் ஆங்கிலத்தில் நமக்குக் கிடைத்த செய்திகளை நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ (https://www.factcrescendo.com/) இந்தி பிரிவுக்கு அனுப்பி இரண்டும் ஒன்றா என்று விசாரித்தோம். இரண்டையும் படித்துப் பார்த்துவிட்டு இரண்டும் ஒரே சம்பவம்தான் என்று அவர்கள் உறுதி செய்தனர்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி
தொடர்ந்து “உதய்பூரில் நிர்வாணமாக்கி தண்டனை” என்று டைப் செய்து கூகுளில் தேடினோம். அப்போது இது தொடர்பாக தமிழில் பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டதும் தெரிந்தது. ஒன் இந்தியா வெளியிட்ட செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
இவர்கள் இருவரும் இஸ்லாமியர்களா, சாதி பாகுபாடு காரணமாக இப்படி நிர்வாணமாக்கப்பட்டார்களா என்று செய்தியைப் படித்துப் பார்த்தோம். அப்படி எதுவும் இல்லை.
இந்த சம்பவர் 2018 ஜூலை மாதம் உதய்பூர் அருகே தனோகி பகால் என்ற கிராமத்தில் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் தரூகாம்தி என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. ஆனால், இந்த திருமணத்தில் அந்த பெண்ணுக்கு விருப்பமில்லை. இதனால் பஞ்சாயத்தைக் கூட்டி திருமண உறவை தரூகாம்தி முறித்துக்கொண்டார்.
இந்தநிலையில், அந்த பெண் அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்தவருடன் நெருங்கிப் பழகியிருக்கிறார். அவர்களுக்குள் திருமணம் நடக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
சம்பவத்தன்று அந்த பெண், தன்னுடைய காதலனின் வீட்டுக்கு சென்றுள்ளார். இதை அறிந்த அந்த பெண்ணின் முன்னாள் கணவன் தரூகாம்தி, அவனது சகோதரன் ஹரீஷ் மற்றும் அவரது மனைவி ஆகியோர் அங்கே சென்று இருவரையும் தாக்கியுள்ளனர். மேலும், இருவர் மீதும் பஞ்சாயத்தில் புகார் செய்துள்ளார்.
பஞ்சாயத்தார் இருவரையும் மரத்தில் கட்டிவைத்து அடிக்க உத்தரவிட்டதுடன், இருவரது ஆடையையும் அகற்றிவிட்டு கிராமம் முழுவதும் சுற்றிவரும்படி உத்தரவிட்டுள்ளனர். ஏற்கனவே பஞ்சாயத்தால் விவாகரத்து அளிக்கப்பட்டிருந்தாலும் கூட இந்த தண்டனை விதித்துள்ளனர். இந்த தீர்ப்புக்கு எதிராக, நிர்வாண ஊர்வலத்துக்கு எதிராக கிராம மக்கள் யாரும் குரல்கொடுக்கவில்லை. பலரும் இதை செல்போனில் வீடியோ வேறு எடுத்துள்ளனர்.
யாரோ ஒருவர் இது குறித்து போலீசில் புகார் தெரிவிக்கவே, அவர்கள் விரைந்துவந்து இருவரையும் மீட்டுள்ளனர். மேலும், தரூகாம்தி, அவனது சகோதரன், சகோதரன் மனைவி, பஞ்சாயத்தாரையும் கைது செய்தனர்.
நாம் மேற்கொண்ட ஆய்வில்,
1) இந்த சம்பவம் அஸ்ஸாமில் நடைபெறவில்லை, ராஜஸ்தானில் நடந்துள்ளது.
2) இவர்கள் இருவரும் இஸ்லாமியர்கள் இல்லை… பழங்குடி இன மக்கள்.
3) சாதிப் பிரிவினை காரணமாக இந்த சம்பவம் நடைபெறவில்லை.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில் மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு பொய்யானது, விஷமத்தனமானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:சாதி காரணமாக நிர்வாணமாக்கப்பட்ட இஸ்லாமிய காதலர்கள்! – ஃபேஸ்புக் தகவல் உண்மையா?
Fact Check By: Praveen KumarResult: False
