தமிழக பாஜக தலைவராக எச்.ராஜா தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று ஒரு சான்றிதழ் சமூகம் ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

தமிழக பாஜக தலைவர் பதவிக்கு ஜனவரி 17 2020 அன்று தேர்தல் நடந்ததாகவும் இதில் ராஜா வெற்றி பெற்றார் என்றும் சான்றிதழ் வெளியிடப்பட்டுள்ளது. இதனுடன் இந்த பதிவை வெளியிட்டவர் எச்.ராஜா உடன் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

இந்த பதிவை Chandrasekaran Ganessin என்பவர் 2020 ஜனவரி 18 அன்று வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர் .

உண்மை அறிவோம்:

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து தமிழக பா.ஜ.க-வுக்கு இதுவரை தலைவர் நியமிக்கப்படவில்லை. விரைவில் தமிழக பா.ஜ.க-வுக்கு தலைவர் நியமிக்கப்படுவார் என்று செய்திகள் மட்டும் வந்த வண்ணம் உள்ளன.

இந்த சூழ்நிலையில் கடந்த ஜனவரி 17,18ம் தேதிகளில் தமிழக பாஜக தலைவர் அறிவிக்கப்படுவார் என்று செய்திகள் பரபரப்பாக பேசப்பட்டன. குறிப்பாக எச் ராஜா தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்படுவார் என்று பேசப்பட்டது. ஆனாலும் அறிவிப்பு மட்டும் வெளியாகவில்லை.

அதே நேரத்தில், சமூக ஊடகங்களில் எச்.ராஜா தமிழக பா.ஜ.க தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டது போலவும், கட்சி நடத்திய தேர்தலில் அவர் வெற்றி பெற்றார் என்று அறிவிக்கப்பட்டது போலவும் பதிவுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. அந்த வகையில், எச் ராஜா வெற்றி பெற்றார் என்பதற்கான சான்றிதழ் ஒன்று பகிரப்பட்டு வருகிறது.

ஆனால், அந்த சான்றிதழ் உண்மையானது போல இல்லை. திருத்தப்பட்டது தெளிவாகத் தெரிந்தது. மேலும், எச்.ராஜாவின் பெயர் ஆங்கிலத்தில் H Raaja என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இவை எல்லாம் சந்தேகத்தைக் கிளப்பியது. முதலில் எச்.ராஜா தன்னுடைய பெயரை ஆங்கிலத்தில் எப்படி எழுதுகிறார் என்று பார்த்தோம்.

அவருடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் H Raja என்றே இருந்தது. கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அவர் தாக்கல் செய்த அஃபிடவிட்டை தேடி எடுத்தோம். அதில் கூட H Raja என்றே குறிப்பிட்டிருந்தார்.

elections.tn.gov.inArchived Link

ஏதோ ஒரு சான்றிதழை எடுத்துதான் போட்டோ மார்ஃபிங் செய்துள்ளனர். அசல் சான்றிதழ் கிடைக்கிறதா என்று தேடினோம். ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, பல மாநிலங்களில் நடந்த பா.ஜ.க மாநில தலைவர் தேர்தல் மற்றும் சான்றிதழ்கள் கிடைத்தன. அவற்றை ஒப்பிட்டுப் பார்த்தோம்.

Archived LinkSearch Link

2020 ஜனவரி 16ம் தேதி வெளியான கர்நாடக மாநில பா.ஜ.க தலைவர் தேர்தல் முடிவு சான்றிதழும், இதுவும் ஒன்றாக இருப்பது தெரிந்தது. இந்த சான்றிதழை கர்நாடக மாநில பா.ஜ.க தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட, தலைவராக தேர்வு செய்யப்பட்டவரே அதை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ரீட்வீட் செய்திருப்பதும் தெரிந்தது. கர்நாடக மாநில தலைவர் பெயரை நீக்கிவிட்டு, எச்.ராஜா பெயரை தவறாக சேர்த்து சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பது தெரிந்தது.

இது தொடர்பாக தமிழக பா.ஜ.க ஊடக பிரிவு மூத்த நிர்வாகி (எச்.ராஜாவுக்கு நெருக்கமானவரும் கூட) ஒருவரிடம் இந்த தகவலை காண்பித்தோம். அதற்கு அவர், "இது போன்ற பதிவுகள் எங்களுக்கே வந்துள்ளது. ஏன் இப்படி செய்கிறார்கள் என்று தெரியவில்லை. இது போலியாக உருவாக்கப்பட்டதுதான். தமிழக பா.ஜ.க-வுக்கு தற்போது தலைவர் நியமிக்கப்பட வாய்ப்பு குறைவுதான். டெல்லி சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகே தமிழகம் மற்றும் ஆந்திர மாநில பா.ஜ.க தலைவர்கள் நியமிக்கப்படுவார்கள்" என்றார்.

தமிழக பா.ஜ.க தலைவராக எச்.ராஜா நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. அவர் நியமிக்கப்பட்டாரா, இல்லையா என்ற ஆய்வுக்குள் நாம் செல்லவில்லை. தமிழக பா.ஜ.க தலைவர் பதவிக்கான தேர்தலில் எச்.ராஜா வெற்றி பெற்றதாக சான்றிதழ் வெளியாகி உள்ளது உண்மையா என்று மட்டுமே ஆய்வு மேற்கொண்டோம். அது போலியானது என்பது தெரியவந்துள்ளது.

நம்முடைய ஆய்வில்,

தமிழக பா.ஜ.க தலைவருக்கான தேர்தலில் எச் ராஜா பெற்றார் என்று வெளியான சான்றிதழ் எடிட் செய்யப்பட்டது என்பது உறுதியாகி உள்ளது.

இந்த சான்றிதழ் கர்நாடக பா.ஜ.க தலைவர் பதவிக்கு நடந்த தேர்தல் தொடர்பாக வெளியானது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த சான்றிதழ் போலியாக உருவாக்கப்பட்டது என்று தமிழக பா.ஜ.க மூத்த நிர்வாகி ஒருவர் உறுதி செய்துள்ளார்.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், தமிழக பா.ஜ.க தலைவராக எச்.ராஜா வெற்றி பெற்றார் என்று பகிரப்படும் சான்றிதழ் போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:தமிழக பா.ஜ.க தலைவராக எச்.ராஜா தேர்வு; சான்றிதழ் உண்மையா?

Fact Check By: Chendur Pandian

Result: False