மின்னணு வாக்குப் பதிவு முறையை கைவிட வேண்டும்: சர்ச்சையை கிளப்பும் ஃபேஸ்புக் பதிவு

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social

‘’மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் புறக்கணித்துவிட்டன, இந்தியாவும் கைவிட வேண்டும்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மையை பரிசோதிக்க முடிவு செய்தோம்.

தகவலின் விவரம்:

Archived Link

ஏப்ரல் 21ம் தேதியன்று இந்த பதிவு வெளியிடப்பட்டுள்ளது. இதில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்திற்கும், வாக்குச் சீட்டு முறைக்கும் உள்ள வித்தியாசங்கள் பற்றியும், வட இந்தியாவில் ஒருவர் கள்ள ஓட்டு போட்டது பற்றியும் பல்வேறு விசயங்களை குறிப்பிட்டுள்ளனர். இது தவிர, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தை வேண்டாம் என நிராகரிப்பு செய்ததாகவும் கூறி, டிரம்ப் புகைப்படத்தை பகிர்ந்து அதன் மேலே எழுதியுள்ளனர்.

உண்மை அறிவோம்:
இந்த பதிவில் கூறப்பட்டுள்ள விசயங்கள் அனைத்தும் உண்மையா என ஒவ்வொன்றாக ஆய்வு செய்ய தீர்மானித்தோம். இதன்படி, முதலில், ‘’அமெரிக்கா போன்ற வல்லாதிக்க நாடுகள் பலவும் எலக்ட்ரானிக் வாக்குப் பதிவு இயந்திரங்களை பயன்படுத்துவது இல்லை,’’ என, பதிவில் கூறப்பட்டுள்ளது.

இந்தியா தவிர, பிரிட்டன், ஆஸ்திரேலியா, ஃபிரான்ஸ், ஜெர்மனி, கனடா, நார்வே, தென்கொரியா உள்ளிட்ட பல வல்லரசு நாடுகளும் எலக்ட்ரானிக் வாக்குப் பதிவு இயந்திர முறையிலேயே தேர்தல் நடத்துகின்றன. இதில் எந்த தவறும் ஏற்பட்டதாக, அந்த நாடுகள் குறிப்பிடவில்லை. குறிப்பாக, இந்தியாவில் மக்கள் தொகை அதிகம் என்பதால், நிலப்பரப்பு அதிகம் என்பதால், எலக்ட்ரானிக் ஓட்டுப் பதிவு முறை எளிதாக உள்ளது. எனவேதான், இந்த முறை பின்பற்றப்பட்டு வருகிறது. இதுபற்றிய செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.     

எலக்ட்ரானிக் ஓட்டு இயந்திரங்களில் முறைகேடுகள் செய்வது எளிது என பலரும் குற்றச்சாட்டு கூறுவது வழக்கம்தான். ஆனால், எங்கேயும் அது ஆதாரத்துடன் நிரூபிக்கப்படவில்லை. அப்படி தவறு நடப்பதாக இருந்திருந்தால், இந்தியா தவிர்த்து எலக்ட்ரானிக் ஓட்டுப் பதிவு இயந்திரங்களை பயன்படுத்தும் மற்ற நாடுகள், அந்த குறையை சுட்டிக்காட்டியிருக்கும்.

இதுதவிர, இந்த பதிவில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து, இந்தியர்களைப் போல, அமெரிக்கர்கள் ஒன்றும் ஏமாளிகள் இல்லை என்றும், அவர்களை எலக்ட்ரானிக் ஓட்டு இயந்திரங்களை வைத்து ஏமாற்ற முடியாது என்றும் அவர் சொன்னது போல பகிர்ந்துள்ளனர். உண்மையில் டொனால்டு டிரம்ப் எங்கேயும் அப்படி சொன்னதாக தெரியவில்லை. நாம் தேடியவரை அப்படியான தகவல் எதிலும் கிடைக்கவில்லை.

அமெரிக்காவில் எலக்ட்ரானிக் வாக்குப் பதிவு இயந்திரம் தேவைக்கேற்ப பயன்படுத்தப்பட்டு வருகிறது. அமெரிக்கர்கள், இமெயில் மூலமாகக் கூட வாக்குப் பதிவு நடத்துவது உண்டு. எனவே, அவர்களின் தேசிய பாதுகாப்புக்கு உகந்த முறையில், வாக்குச் சீட்டு அல்லது பகுதி வாக்குச் சீட்டு, பகுதி எலக்ட்ரானிக் ஓட்டுப் பதிவு இயந்திரம் அல்லது இமெயில் ஓட்டுப் பதிவு உள்ளிட்ட பல முறைகளை அமெரிக்காவில் கையாளுகின்றனர். அவர்கள், முற்றிலுமாக எலக்ட்ரானிக் ஓட்டுப் பதிவு இயந்திரங்களை புறக்கணிக்கவில்லை. அத்துடன், எலக்ட்ரானிக் ஓட்டுப் பதிவு இயந்திரங்களை தயாரிப்பதில், அமெரிக்க நிறுவனங்களே முன்னிலையில் உள்ளன. இதுபற்றி விரிவான செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

அதேபோல, வட இந்திய மாநிலம் ஒன்றில், யாரோ ஒருவர் ஒரே நேரத்தில் 6 ஓட்டுகளை ஒரே நேரத்தில் போட்டதாகவும், அவரை சாதாரணமாக வீடியோ எடுத்து வெளியிட்டதாகவும் இந்த பதிவில் குறிப்பிடப்படுகிறது. இந்த சம்பவம் நாகாலாந்து மாநிலத்தில் நடந்ததாகக் கூறப்படுகிறது.

நாகாலாந்து மாநில துணை முதல்வர் யாந்துங்கோ பட்டோன் கடந்த ஏப்ரல் 12ம் தேதியன்று, 3 ஓட்டுகளுக்கும் மேலாக போட்டதாகக் கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

இதுபற்றி காங்கிரஸ் கட்சி சார்பாக, போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. ஆனால், இதனை ஆய்வு செய்த தேர்தல் நடத்தும் அதிகாரி எம்.பட்டோன், ‘’குறிப்பிட்ட மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோரின் ஆய்வறிக்கையின்படி, நாகாலாந்து துணை முதல்வர் எந்த தேர்தல் முறைகேட்டிலும் ஈடுபட்டதாக உறுதி செய்யப்படவில்லை,’’ எனக் கூறியுள்ளார்.

இந்த செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும். எனவே, இந்த வீடியோவும், உண்மையா அல்லது சித்தரிக்கப்பட்டதா எனத் தெரியவில்லை.

இப்படி முன்னுக்குப் பின் முரணான தகவல்களை ஒன்று சேர்த்து ஒரு கட்டுரையாக, ஃபேஸ்புக்கில் குறிப்பிட்ட நபர் பகிர்ந்துள்ளார். வரிக்கு வரி அவர், வாக்குச்சீட்டு முறைக்கு இந்தியா மாற வேண்டும என்றே வலியுறுத்துகிறார். எனினும், அவரது கருத்துகள் ஒன்றுகூட உரிய ஆதாரத்துடன் நம்பும்படியாக நிரூபிக்கப்படவில்லை.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின்படி, பார்க்கும்போது, இந்த பதிவில் நம்பகத்தன்மை இல்லை. முன்னுக்குப் பின் முரணான தகவல்களே நிறைந்துள்ளதாக உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின் அடிப்படையில், நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஃபேஸ்புக் பதிவு உண்மை, பொய் கலந்த நம்பகத்தன்மையற்ற ஒன்று என உறுதி செய்யப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் யாரும் இத்தகைய நம்பகத்தன்மை இல்லாத செய்தி, புகைப்படம், வீடியோ போன்றவற்றை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். அவ்வாறு நீங்கள் பகிர்ந்தது பற்றி யாரேனும் புகார் அளித்தால் உரிய சட்ட நடவடிக்கையை நீங்கள் சந்திக்க நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Avatar

Title:மின்னணு வாக்குப் பதிவு முறையை கைவிட வேண்டும்: சர்ச்சையை கிளப்பும் ஃபேஸ்புக் பதிவு

Fact Check By: Parthiban S 

Result: Mixture