எனக்கு மானம் இருக்கிறது விலகிவிட்டேன் குஷ்பு? – விஷம செய்தி வெளியிட்ட இணையதளம்!

அரசியல் சமூக ஊடகம்

‘’பின்னால் கை வைத்த விவகாரம் எனக்கு மானம் இருக்கிறது விலகிவிட்டேன் குஷ்பு?,’’ என்ற தலைப்பில் செய்தி ஒன்று சமூக ஊடகத்தில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்தால், குஷ்பு காங்கிரஸ் கட்சியை விட்டு விலகிவிட்டது போன்று தலைப்பு இருந்தது. எனவே, இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டோம்.

தகவலின் விவரம்:

பின்னால் கைவைத்த விவகாரம் எனக்கு மானம் இருக்கிறது விலகிவிட்டேன் குஷ்பு?

Archived link

குஷ்பு சுந்தர் ஒருவர் கன்னத்தில் அறையும் படம் மற்றும் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி சிவசேனாவில் இணைந்த பிரியங்கா சதுர்வேதி படத்தை வைத்து http://tnnews24.com கடந்த ஏப்ரல் 19ம் தேதி செய்தி வெளியிட்டு உள்ளது. அதில், “பின்னால் கைவைத்த விவகாரம் எனக்கு மானம் இருக்கிறது விலகிவிட்டேன் குஷ்பு?” என்று கூறப்பட்டுள்ளது.

Archived Link

இந்த செய்தியின் தலைப்பைப் பார்க்கையில், குஷ்பு காங்கிரஸ் கட்சியை விலகிவிட்டதுபோல இருந்தது. இதை ஏராளமானோர் ஷேர் செய்திருந்தனர்.

உண்மை அறிவோம்:

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளராக குஷ்பு சுந்தர் உள்ளார். சமீபத்தில், கர்நாடகத்தில் தேர்தல் பிரசாரம் செய்தபோது, கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி தன்னை தவறாக தொட்டதாகக் கூறி, ஒருவரின் கன்னத்தில் அறைந்தார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில், சமீபத்தில் பிரியங்கா சதுர்வேதி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். இருவர் படத்தையும் வைத்து செய்தி வெளியிட்டுள்ளனர்.

தலைப்பு மற்றும் லீட், குஷ்பு கட்சியைவிட்டு விலகிவிட்டதுபோன்றே சொல்லப்பட்டிருந்தது. உள்ளே படித்தபோது, தவறான தலைப்பை டிஎன்நியூஸ்24 வைத்திருந்தது தெரிந்தது. தலைப்பிலும் சரி, செய்தியின் முன்பகுதியிலும் இதை சொன்னது பிரியங்கா சதுர்வேதி என்பதைக் குறிப்பிடவே இல்லை.

KHUSHBOO 2.png

குஷ்புவைப் போல், மும்பையைச் சேர்ந்த பிரியங்கா சதுர்வேதி என்பவரும் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக இருந்தார். இவர், கடந்த ஏப்ரல் 19ம் தேதி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அன்றைக்கே, சிவசேனா கட்சியில் தன்னை அவர் இணைத்துக்கொண்டார். இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

Archived link

கடந்த ஆண்டு மதுராவில் நடந்த காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சி ஒன்றில், அக்கட்சியைச் சேர்ந்த சிலர் தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாக பிரியங்கா சதுர்வேதி குற்றம்சாட்டியிருந்தார். அதைத் தொடர்ந்து குற்றச்சாட்டுக்கு ஆளான நிர்வாகிகள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். பின்னர், மகாராஷ்டிர மாநில நிர்வாகிகள் அழுத்தம் காரணமாக அவர்கள் மீண்டும் கட்சியில் இணைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக பிரியங்கா சதுர்வேதி தெரிவித்திருந்தார். இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

Archived link

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியை விட்டு விலகிய பிரியங்கா சதுர்வேதி, நிருபர்களுக்குப் பேட்டி அளித்தாராம். அப்போது, ஆங்கில பத்திரிகை நிருபர் ஒருவர், “சமீபத்தில் குஷ்புவுக்கு கூட இதுபோன்ற சூழல் ஏற்பட்டது. அவர் என்ன விலகினாரா” என்று கேட்டாராம். அதற்கு பிரியங்கா சதுர்வேதி, “எனக்கு மானம் இருக்கிறது விலகிவிட்டேன்” என்றாராம். இதனால், குஷ்புவுக்கு மானம் இல்லையா என்று சமூக ஊடகங்களில் பலரும் கேள்வி எழுப்பி வருவதாக டிஎன்நியூஸ்24 சொல்லியுள்ளது.

KHUSHBOO 3.png

இப்படி ஏதேனும் செய்தி வெளியாகி உள்ளதா என்று கூகுளில் தேடினோம். ஆனால், இந்த இணையதளம் வெளியிட்ட செய்தியைத் தவிர்த்து வேறு எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை.

KHUSHBOO 4.png

பிரியங்கா சதுர்வேதி ஏதேனும் பேட்டி அளித்தாரா என்று தேடியபோது 19ம் தேதி அவர் அளித்த பேட்டி கிடைத்தது. அதாவது, ஏப்ரல் 19ம் தேதி பிரியங்கா சதுர்வேதி சிவசேனாவில் இணைந்தபோது நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அந்த வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.

Archived link

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியது பற்றியும், சிவசேனாவில் இணைந்தது தொடர்பாகவும் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு பிரத்தியேக பேட்டி அளித்துள்ளார் பிரியங்கா சதுர்வேதி. அந்த வீடியோ ஆதாரம் கீழே தரப்பட்டுள்ளது.

Archived link

இந்த 2 வீடியோக்களிலும், டிஎன்நியூஸ்24 இணையதளம் வெளியிட்டதுபோன்று எந்த ஒரு கேள்வியும் பிரியங்காவிடம் யாருமே எழுப்பவில்லை. குஷ்பு என்ற வார்த்தையே இதில் வரவில்லை என்பது உறுதியானது. உண்மை இப்படி இருக்க டிஎன்நியூஸ்24-க்கு மட்டும் எப்படி பிரத்யேகமாக இந்த செய்தி கிடைத்தது என்று தெரியவில்லை.

இந்த செய்தியில் குறிப்பிட்டதுபோன்று குஷ்புவை விமர்சித்து பிரியங்கா சதுர்வேதி பேட்டி அளித்து இருந்தால், அது பரபரப்பான செய்தியாக மாறியிருக்கும். குறைந்தபட்சம் தமிழ் ஊடகங்களிலாவது செய்தி வந்திருக்கும். ஆனால், டிஎன்நியூஸ்24 தவிர்த்து வேறு எந்த ஊடகமும் இந்த செய்தியை வெளியிடவில்லை. தினமலரில் பிரியங்கா சதுர்வேதியின் ராஜினாமா செய்தி வெளியாகி உள்ளது. அதில் கூட குஷ்பு பேட்டி விவகாரம் இல்லை.

இந்த செய்தியை வெளியிட்ட இணைய தளத்தின் நம்பகத் தன்மையை ஆய்வு செய்தோம். டிஎன்நியூஸ்24 தன்னை தேசிய நடுநிலை செய்தி இணைய தளம் என்று சொல்லிக்கொள்கிறது. ஆனால், இதில் வெளியாகும் செய்திகள் எல்லாம் ஒரு பக்க சார்புடையதாகவே இருக்கிறது. அதிலும், வன்முறையைத் தூண்டக் கூடிய வகையில், வெறுப்பை உண்டாக்கும் வகையில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.

KHUSHBOO 5.png

இறுதிக்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு முடியும் வரை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பை வெளியிட தடை உள்ளது. ஆனால், இந்த இணையதளம் எதைப் பற்றியும் கவலைப்படாமல் கருத்துக் கணிப்பை வெளியிட்டு வருகிறது.

KHUSHBOO 6.png

இந்த இணைய தளத்தின் சார்பு தன்மையைப் பார்க்கையில், காங்கிரஸ் கட்சியை, குஷ்புவை அநாகரீகமாக விமர்சிக்கும் நோக்கில் இந்த கட்டுரை எழுதப்பட்டுள்ளது தெரிந்தது. உண்மையிலேயே பிரியங்கா சதுர்வேதி அப்படி ஒரு பேட்டியை அளித்திருந்தால் கூட, “எனக்கு மானம் இருக்கிறது விலகிவிட்டேன் – பிரியங்கா சதுர்வேதி” என்று தலைப்பு வைத்திருக்க வேண்டும். அதைத் தொடர்ந்து விலகுவாரா குஷ்பு என்று கேள்வி எழுப்பியிருக்கலாம். அதைவிடுத்து, படிப்பவர்களே செய்தியை படித்த பிறகு, தலைப்பை புரிந்துகொள்ளட்டும் என்ற வகையில், “பின்னால் கைவைத்த விவகாரம் எனக்கு மானம் இருக்கிறது விலகிவிட்டேன் குஷ்பு?” என்று வைத்துள்ளனர்.

இதன் மூலம் தவறான, விஷமத்தனமான செய்தியை டிஎன்நியூஸ்24 இணையதளம் வெளியிட்டுள்ளது உறுதியாகிறது.

முடிவு:

நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட செய்தி தவறான ஒன்று என உரிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ என எதையும் உறுதிப்படுத்தாமல், மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். அப்படி, நீங்கள் பகிர்ந்தது பற்றி யாரேனும் புகார் கொடுத்தால், நீங்கள் சட்டப்படியான நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Avatar

Title:எனக்கு மானம் இருக்கிறது விலகிவிட்டேன் குஷ்பு? – விஷம செய்தி வெளியிட்ட இணையதளம்!

Fact Check By: Praveen Kumar 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •