
உடல் முழுவதும் தங்க நகை, அசைவ உணவு என்று மேல் மருவத்தூர் பங்காரு அடிகளார் இல்ல திருமண புகைப்படம் என்று சில படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

மேல் மருவத்தூர் பங்காரு அடிகளார் இல்லத் திருமண புகைப்படங்கள் என்று ஏழு புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளன. அதில், நகைகளால் அலங்கரிக்கப்பட்ட மணமகள், அசைவ உணவு விருந்து, தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து என்று படங்கள் உள்ளன. நிலைத் தகவலில், “ஏழை பக்தர்களின் காணிக்கையால் எளிமையாக நடைபெற்ற மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி இல்ல திருமண விழா…” என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த பதிவை உலகத் தமிழர் ஒருங்கிணைந்த முகநூல் தளம் என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் Anbarasu Ilangovan என்பவர் பகிர்ந்துள்ளார். இதே போன்ற பதிவைப் பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் பங்காரு அடிகளாரின் மூத்த மகன் அன்பழகன் இல்ல திருமணம் சமீபத்தில் நடந்தது. திருமண வரவேற்பில், தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்.
இந்த நிலையில், மிகவும் ஆடம்பரமான முறையில் திருமணம் நடந்தது என்றும், மண மகள் உடல் முழுக்க தங்க நகையால் அலங்கரிக்கப்பட்டு இருந்தார் என்றும், திருமண விருந்தில் அசைவ உணவு பரிமாறப்பட்டது என்றும் சமூக ஊடகங்களில் படங்கள் பகிரப்பட்டு வருகின்றன. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
மணமக்கள் புகைப்படம் என்று இரண்டு வித புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். பச்சை நிற உடையில் மண மகள் இருக்கும் புகைப்படத்தைப் பார்த்தால் அது பங்காரு அடிகளார் இல்ல திருமணம் போல இல்லை.

இஸ்லாமிய பெண் போல இருக்கிறார், சுற்றிலும் பர்தா உள்ளிட்ட இஸ்லாமிய உடை அணிந்த பெண்கள் பலர் உள்ளனர். இதே பதிவில் உள்ள மண மக்கள் புகைப்படத்துடன் இந்த படம் ஒத்துப்போகவே இல்லை. இந்த புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடியபோது அது கேரளாவில் நடந்த ஒரு திருமணம் என்று தெரிந்தது.

அசைவ உணவு புகைப்படம் உண்மையா என்று ஆய்வு செய்ய, அதை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது அந்த புகைப்படம் பல ஆண்டுகளாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவது தெரிந்தது. பிலிப்பைன்ஸ் உணவுப் போட்டி ஒன்றில் எடுக்கப்பட்ட படம் என்று தெரிந்தது.

மற்றொரு அசைவ புகைப்படம் 2018ம் ஆண்டு மார்ச் மாதம் பெங்களூருவில் உள்ள ஒரு உணவகம் சார்பில் ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டது தெரிந்தது.
மற்ற புகைப்படங்கள் திருமண வரவேற்பின்போது எடுக்கப்பட்டது என்று தெரிந்தது. அதைப் பல ஊடகங்களும் பகிர்ந்திருந்தன. திருமண விருந்தில் அசைவ உணவு பரிமாறுவது சரியா தவறா, அசைவ உணவு பரிமாறினால் அது மிகப்பெரிய குற்றமா என்ற ஆய்வுக்குள் எல்லாம் நாம் செல்லவில்லை. பங்காரு அடிகளார் இல்ல திருமண விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் என்று சமூக ஊடகங்களில் பகிரப்படும் படங்கள் உண்மையில் அங்குதான் எடுக்கப்பட்டதா என்றே ஆய்வு மேற்கொண்டோம்.
நம்முடைய ஆய்வில்,
மண மகள் என்று பதிவிடப்பட்டுள்ள முதல் புகைப்படம் சமூக ஊடகங்களில் பல ஆண்டுகளாக பகிரப்பட்டு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அசைவ உணவு என்று பகிரப்பட்டுள்ள ஒரு படம் பிலிப்பைன்ஸ் நாட்டில் எடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மற்றொரு அசைவ புகைப்படம் 2018ம் ஆண்டு பெங்களூருவைச் சேர்ந்த ஒரு உணவகம் பதிவேற்றம் செய்திருந்தது தெரியவந்துள்ளது.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேல் மருவத்தூர் பங்காரு அடிகளார் பேத்தி திருமண வரவேற்பு புகைப்படம் என்று உண்மையான புகைப்படங்களுடன் பொய்யான புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளது உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:சமூக ஊடகங்களில் பரபரப்பை கிளப்பிய பங்காரு அடிகளார் பேத்தி திருமண புகைப்படம்!
Fact Check By: Chendur PandianResult: False
