ராஜராஜ சோழன் கட்டிய பதான் படிக்கிணறு- ஃபேஸ்புக் புரளி!

சமூக ஊடகம் | Social சமூகம்

குஜராத் மாநிலத்தில் உள்ள பதான் படிக்கிணற்றை ராஜராஜ சோழன் தன்னுடைய மனைவிக்குக் கட்டிக்கொடுத்தான் என்று ஒரு தகவல் ஃபேஸ்புக்கில் பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

RANI 2.png

Facebook Link I Archived Link

பிரம்மாண்ட வேலைப்பாடுகள் கொண்ட குஜராத் மாநிலம் பாதானில் உள்ள ராணி கி வாவ் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது.

நிலைத்தகவலில்,  “ராஜராஜ சோழன் தன் மனைவிக்காக கட்டிய கிணறு வடிவிலான பிரம்மாண்டமான அரண்மனை.. எத்தனை பேருக்கு தெரியும்?

தமிழன் திறமைக்கு இதுவே சான்று. தாஜ்மஹால் கட்டப்படுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னர் ராஜராஜ சோழன் தன் மனைவிக்காக கட்டிய கிணறு வடிவிலான பிரம்மாண்டமான ‘ அரண்மனை.. குஜராத்திலுள்ள சித்பூர் என்ற ஊருக்கு அருகிலுள்ள பதான் கிராமத்தில் உள்ளது.. இதனுள் 9 கி்மீ.நீள சுரங்கப்பாதை.!!! நினைக்க நினைக்க ஆச்சர்யம் மட்டுமே மிஞ்சுகிறது..!!! எந்த இஞ்ஐினிரிங் காலேஜ்ல படிச்சி கட்டினாங்க!!! !! தமிழனின் சிறப்பை உலகறியச்செய்வோம்….” என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்த தகவலை Vanakkam Chennai என்ற ஃபேஸ்புக் பக்கம் 2019 ஆகஸ்ட் 12ம் தேதி வெளியிட்டுள்ளது. பலரும் இதைப் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

காவிரி ஆறு கரைபுரண்டு ஓடும் செழுமையான தஞ்சையைத் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்தவர் ராஜராஜ சோழன். தஞ்சையின் பெரிய கோவிலை இவர் கட்டினார். தற்போதைய தென்னிந்தியா மற்றும் இலங்கையின் வடக்குப் பகுதிகளை ஆட்சி செய்துள்ளதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இவருடைய ஆட்சிக்காலம் கி.பி 985 முதல் 1014 என்று கூறப்படுகிறது. இன்றைய கர்நாடகா – மகாராஷ்டிரா எல்லைப் பகுதி வரை இவர் கட்டுப்பாட்டில் இருந்ததாக கூறப்படுகிறது. குஜராத் பகுதிக்கு படை எடுத்து சென்றதாக எந்த குறிப்பும் இல்லை.

ஆனால், ராணி கி வாவ் (ராணியின் கிணறு) குஜராத் மாநிலம் பதான் என்ற இடத்தில் சரஸ்வதி நதிக்கரை பகுதியில் உள்ளது. இதை கி.பி 1063ம் ஆண்டு தன்னுடைய கணவன் முதலாம் பீம்தேவின் நினைவாக ராணி உதயமதி கட்டியதாக கூறப்படுகிறது. 2014ம் ஆண்டு இதை உலக பாரம்பரிய நினைவுச் சின்னமாக யுனெஸ்கோ அங்கீகரித்தது. 

ராஜராஜ சோழன் காலத்துக்குப் பிறகு கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் கழித்து இந்த கிணறு அமைக்கும் பணி நடந்துள்ளது என்று தகவல் தெரிவிக்கின்றன. அப்படி இருக்கும்போது, கொஞ்சம் கூட தொடர்பே இல்லாமல் இந்த கிணற்றை தன்னுடைய மனைவிக்காக ராஜராஜ சோழன் கட்டினான் என்று தவறாகத் தெரிவித்துள்ளனர்.  உண்மையில் இந்த கிணற்றை தன்னுடைய கணவனின் நினைவாக ராணி உதயமதி கட்டினார். இதனல், இந்த கிணற்றுக்கு ராணியின் கிணறு என்று பெயர்.இந்த பதிவுக்கு பலரும் கமெண்ட் செய்திருந்தனர். அதில், இந்த தகவல் தவறானது என்று பலரும் தெரிவித்திருந்தனர். ஆனாலும் இந்த பதிவு அகற்றப்படவில்லை. இதன் மூலம், வேண்டுமென்றே தவறான தகவலைப் பரப்புவது தெரிந்தது.

RANI 3.png

நம்முடைய ஆய்வில், யுனெஸ்கோ, குஜராத் சுற்றுலாத்துறை வெளியிட்ட ராணி கி வாவ் பற்றிய தகவல் கிடைத்துள்ளது. ராஜராஜ சோழன் ஆட்சிக்காலம், அவன் ஆட்சி செய்த பகுதிகள் பற்றிய விவரம் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில், விஷமத்தனத்துடன் இந்த பதிவு வெளியிடப்பட்டது என்பது உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:ராஜராஜ சோழன் கட்டிய பதான் படிக்கிணறு- ஃபேஸ்புக் புரளி!

Fact Check By: Chendur Pandian 

Result: False