அமர் ஜவான் ஜோதி நினைவு சின்னத்தை தாக்கிய பங்களாதேஷ் முஸ்லீம்: உண்மை என்ன?

அரசியல் | Politics இந்தியா | India

‘’அமர் ஜவான் ஜோதி நினைவு சின்னத்தை தாக்கிய பங்களாதேஷ் முஸ்லீம்,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim LinkArchived Link

Siva Varman

என்பவர் கடந்த டிசம்பர் 14, 2019 அன்று இந்த பதிவை இந்து தமிழ்நாடு என்ற ஃபேஸ்புக் குரூப்பில் பகிர்ந்துள்ளார். இதில், அமர் ஜோதி நினைவு சின்னத்தை முஸ்லீம் ஒருவர் எட்டி உதைப்பதை போன்ற புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. இந்த பதிவின் கமெண்ட்டில் முஸ்லீம்கள் மீதான காழ்ப்புணர்வு கொண்ட கருத்துகள் பகிரப்பட்டிருப்பதையும் காண முடிந்தது. 

உண்மை அறிவோம்:
இந்தியா முழுக்க, Citizenship Amendment Act (CAB) மற்றும் National Register of Citizens (NRC) ஆகிய 2 சட்ட திருத்தங்களை எதிர்த்து பெரும் போராட்டம் வெடித்துள்ளது. குறிப்பாக, இந்த நடைமுறையால் முஸ்லீம்கள் பாதிக்கப்படுவதாகக் கூறி அசாம், மேற்கு வங்கம், டெல்லி, மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம் உள்பட இந்தியா முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டம், சில பகுதிகளில் வன்முறையாகவும் உருமாறியுள்ளது. 

மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து படிக்கவும்.

Read Here

இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில், முஸ்லீம்களை குறிவைத்தும், அதே போல, இந்துக்களை குறிவைத்தும் மாறி மாறி தவறான வதந்திகள் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன. அதில் ஒன்றுதான் நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஃபேஸ்புக் பதிவும். அதில் உள்ளதுபோலவே, தற்போது சிஏபிக்கு எதிரான போராட்டத்தை ஒட்டி வங்கதேச முஸ்லீம்கள் யாரும் அமர் ஜோதி நினைவு சின்னத்தை தாக்கினரா என்ற சந்தேகத்தில் ஆய்வு மேற்கொண்டோம்.

குறிப்பிட்ட புகைப்படத்தை கூகுளில் பதிவேற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தபோது, இது கடந்த 2012ம் ஆண்டு நிகழ்ந்த சம்பவம் தொடர்பான புகைப்படம் என விவரம் கிடைத்தது. 

இதன்படி, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் கூறியுள்ளது தவறான தகவல் என எடுத்த எடுப்பிலேயே தெளிவாக தெரியவருகிறது.

இருந்தாலும், அமர் ஜோதி நினைவு சின்னம் ஏன் தாக்கப்பட்டது என்ற விவரம் தேடினோம். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள ஆசாத் மைதானத்தில் 1857 இந்திய கிளர்ச்சியில் ஈடுபட்ட வீரர்கள் சயீத் ஹூசைன் மற்றும் மங்கள் காடியா ஆகியோர்களை கவுரவிக்கும் வகையில் இந்த நினைவு சின்னம் கடந்த 2009ம் ஆண்டு நிறுவப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இங்கு கடந்த 2012ம் ஆண்டு திடீர் வன்முறை வெடித்தது. அசாம் மாநிலத்தில் வசிக்கும் முஸ்லீம்களை, போடோ இனத்தவர் தாக்கியதாகக் கூறி தகவல் பரவியதே இதற்கு காரணமாகும். இந்த வன்முறையில் 2 பேர் உயிரிழந்தனர். போலீசார் உள்பட 54 பேர் படுகாயமடைந்தனர். மகாராஷ்டிர அரசுக்கு ரூ.2.74 கோடி சேதம் ஏற்பட்டது. இந்த வன்முறையின் ஒருபகுதியாகவே, ஆசாத் மைதானத்தில் அமைந்துள்ள அமர் ஜவான் ஜோதி நினைவிடமும் தாக்கப்பட்டது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களில் ஒன்றுதான் நாம் ஆய்வு செய்யும் ஃபேஸ்புக் பதிவில் இடம்பெற்றுள்ளது.

NDTV News Link TOI Link 

அதேசமயம், மும்பை சிஎஸ்டி, ஆசாத் மைதான் பகுதியில் உள்ள அமர் ஜோதி நினைவிடம் வேறு; டெல்லி இந்தியா கேட் பகுதியில் உள்ள அமர் ஜவான் ஜோதி நினைவு சின்னம் என்பது வேறு.

மும்பையில் உள்ள நினைவிடம், 1857ம் ஆண்டு நிகழ்ந்த பிரிட்டிஷ் படைக்கு எதிரான கிளர்ச்சியில் பங்கேற்ற சயீத் ஹூசைன் மற்றும் மங்கள் காடியா ஆகிய வீரர்களின் நினைவாக, 2009ம் ஆண்டில் திறக்கப்பட்டதாகும்.

ஆனால், டெல்லி இந்தியா கேட்டில் உள்ள அமர் ஜவான் ஜோதி நினைவு சின்னம், இந்தியா – பாகிஸ்தான் 1971 போரில் பங்கேற்று வீரமரணம் அடைந்த இந்திய வீரர்களை கவுரவிக்கும் வகையில் 1972ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் திறந்து வைக்கப்பட்டதாகும். இதுபற்றி மேலும் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

எனவே, டெல்லியில் உள்ள அமர் ஜவான் ஜோதி நினைவு சின்னத்தை, மும்பையில் உள்ள அமர் ஜோதி நினைவிடத்தின் புகைப்படத்துடன் ஒப்பிட்டு, 2012ல் நிகழ்ந்த சம்பவத்தின் பேரில் தவறான தகவல் பகிர்ந்துள்ளனர் என்பது தெளிவாகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவில் தவறான தகவல் உள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோ பதிவை பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். 

Avatar

Title:அமர் ஜவான் ஜோதி நினைவு சின்னத்தை தாக்கிய பங்களாதேஷ் முஸ்லீம்: உண்மை என்ன?

Fact Check By: Pankaj Iyer 

Result: False