FACT CHECK: பாதிரியார் தப்பி ஓடும் வீடியோ இந்தோனேஷியா நிலநடுக்கத்தின் போது எடுத்ததா?

சமூக ஊடகம் | Social சமூகம் சர்வதேசம் | International

இந்தோனேஷியாவில் பூகம்பம் ஏற்பட்ட போது கிறிஸ்தவ ஆலயத்தில் இருந்த பாதிரியார் தப்பி ஓடியதாகவும், மசூதியில் இருந்த இமாம் தொடர்ந்து தொழுகை செய்ததாகவும் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link 1Archived Link 2

இரண்டு காணொளிகளைத் தொகுத்து பதிவிடப்பட்டுள்ளது. அதில், இந்தோனேஷியாவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம். இந்த நிலையில் கடந்த 4ம் தேதி இந்தோனேஷியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நில நடுக்க காட்சி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

கடந்த 4ம் தேதி இந்தோனேஷிய சுற்றுலாத் தலங்களில் ஏற்பட்ட நில நடுக்கம் காரணமாக அங்கு சுனாமி எச்சரிக்கையை அரசு வெளியிட்டது. நிலநடுக்கத்தின் போது இமாம் ஒருவர் பள்ளிவாசலில் தொழுகை நடத்திக் கொண்டிருந்தார். நிலநடுக்கம் ஏற்பட்ட போதும் அவர் தொழுகை நடத்தியது பார்ப்பவர் உள்ளங்களை உருக்கும் வகையில் அமைந்திருந்தது” என்று கூறப்படுகிறது. 

அதே நேரத்தில் மிகப்பெரிய அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்ட போது கிறிஸ்தவ பாதிரியார் ஓட்டம் பிடித்தார் என்று திரையில் காட்டப்படுகிறது. இதன்மூலமாக, இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட போது கிறிஸ்தவ பாதிரியார் தப்பி ஓடியதாகவும், இஸ்லாமிய இமாம் சுவரைப் பிடித்தபடி தொழுகை நடத்தியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விடியோ பதிவை Thameem adirai என்பவர் 2020 ஆகஸ்ட் 17ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

இந்த பதிவு இரு வேறு மதங்களைச் சேர்ந்தவர்களின் இயல்பு பற்றி விவரிக்கிறது. அதற்குள்ளாக நாம் செல்லவில்லை. இந்த இரண்டு வீடியோக்களும் எப்போது எடுக்கப்பட்டது என்று மட்டுமே ஆய்வு மேற்கொண்டோம்.

இந்த பதிவு ஆகஸ்ட் 2020ல் பதிவிடப்பட்டுள்ளது. கடந்த 4ம் தேதி நிலநடுக்கம் ஏற்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், ஆகஸ்ட் 4ம் தேதி இந்தோனேஷியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டதா, அது தொடர்பாக செய்தி ஏதும் உள்ளதா என்று பார்த்தோம்.

அங்கு அடிக்கடி நிலநடுக்கம் வருவது வாடிக்கையான ஒன்று என்பதால் ஒவ்வொரு நிலநடுக்கம் பற்றிய குறிப்பும் இருந்தது. ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி இந்தோனேஷியாவில் நிலநடுக்கம் வந்தது தொடர்பாக எந்த செய்தியும் நமக்குக் கிடைக்கவில்லை.

Archived Link

அடுத்தது அந்த இமாம் வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்று தேடினோம். வீடியோ காட்சியைப் புகைப்படமா மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அந்த வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதை காண முடிந்தது.

Archived Link

 Karachista என்ற ட்விட்டர் ஐடி கொண்ட நபர் 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி வெளியான ட்வீட் ஒன்றில், இந்தோனேஷியாவில் நிலநடுக்கம் ஏற்பட்ட போது இமாம் தொழுகையைத் தொடர்ந்த காட்சி என்று குறிப்பிட்டிருந்தார். 

2018 ஆகஸ்ட் 7ம் தேதி பிபிசி வெளியிட்டிருந்த செய்தியிலும் இந்த வீடியோ இருந்தது. இதன் மூலம் 2 ஆண்டுகளுக்கு முந்தைய வீடியோ இது என்பது உறுதியானது.

bbc.comArchived Link

கிறிஸ்தவ பாதிரியார் தப்பிச் செல்லும் காட்சி லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் கடந்த ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி நடந்த அமோனியம் நைட்ரேட் வெடி விபத்தின் போது எடுக்கப்பட்டதாகும். அதற்கான ஆதாரத்தைத் தேடினோம். அது தொடர்பான செய்தி மற்றும் யூடியூப் வீடியோக்கள் நமக்கு கிடைத்தன.

லெபனான் சம்பவம் என்பது 2750 டன் அமோனியம் நைட்ரேட் வெடித்ததால் ஏற்பட்ட மிகப் பயங்கரமான வெடி விபத்தாகும். இதில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 6500-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். 

timesofindia.indiatimes.comArchived Link

நம்முடைய ஆய்வில்,

இமாம் வீடியோ இந்தோனேஷியாவில் எடுக்கப்பட்டது என்பது மட்டும் உண்மை.

மற்றபடி இமாம் வீடியோ 2020 ஆகஸ்ட் 4ம் தேதி எடுக்கப்பட்டது இல்லை. அது, 2018ம் ஆண்டு எடுக்கப்பட்டது என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

கிறிஸ்தவ பாதிரியார் வீடியோ இந்தோனேஷியாவில் எடுக்கப்பட்டது இல்லை. அது நிலநடுக்கத்தின் போதும் எடுக்கப்பட்டது. இல்லை.

2020 ஆகஸ்ட் 4ம் தேதி லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நடந்த வெடிவிபத்தின் போது எடுக்கப்பட்டது என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. 

இருவேறு நாடுகளில் இரண்டு ஆண்டுகள் இடைவெளியில் நடந்த இரு வேறு நிகழ்வுகளின் வீடியோக்களை தொகுத்து தவறான தகவல் சேர்த்து சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பது உறுதியாகி உள்ளது. 

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஃபேஸ்புக் பதிவில் இடம் பெற்ற தகவல் தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:பாதிரியார் தப்பி ஓடும் வீடியோ இந்தோனேஷியா நிலநடுக்கத்தின் போது எடுத்ததா?

Fact Check By: Chendur Pandian 

Result: False