
பகத் சிங் தூக்கிலிடப்பட்ட நாள் பிப்ரவரி 14, 1931 என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link |
பகத் சிங் படத்துடன் பதிவு தயாரிக்கப்பட்டுள்ளது. அதில், “பிப்ரவரி 14 என்றதும் எல்லோருக்கும் முதலில் நினைவுக்கு வருவது காதலர் தினம் மட்டுமே… நம்முள் எத்தனை பேருக்கு நினைவிருக்கிறது, மாவீரன் பகத்சிங் தூக்கிலிடப்பட்ட நாள் என்று. பிப்ரவரி 14, 1931” என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த பதிவை, Kumar Milk என்பவர் 2020 பிப்ரவரி 14ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
சமீப காலமாக வரலாற்றைத் திருத்தும் செயல் சமூக ஊடகங்களில் நடந்து வருகிறது. அவரவருக்குத் தோன்றிய கருத்துக்களை வரலாறு என்று எழுதி பதிவிடுகின்றனர். அது வைரலாக பகிரப்பட்டு வருகிறது. குறிப்பாக சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட வீரர்களைப் பற்றிய தவறான பதிவுகள் அதிக அளவில் பரப்பப்படுகிறது. காந்தியடிகள் பெண்ணுடன் நடனமாடினார், இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரலாக இருந்த மவுட்பேட்டன் மனைவியுடன் நேரு நெருக்கமாக இருந்த படம் என்று பல்வேறு வதந்திகள் சமூக ஊடகங்களை ஆக்கிரமிக்கத் தொடங்கியுள்ளன.
அந்த வகையில், காதலர் தினத்துக்கு எதிராக உணர்வை ஏற்படுத்த பகத் சிங்கின் மரணத்தை திரித்து எழுதியுள்ளனர். உண்மையில் பகத்சிங் 1931ம் ஆண்டு மார்ச் 23ம் தேதி தூக்கிலிடப்பட்டனர். ஆனால் சமீப காலமாக பகத் சிங் தூக்கிலிடப்பட்டது பிப்ரவரி 14 என்று பல வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது. இதை நம்பி அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகளும் நடக்கின்றன.
பகத் சிங் 1931ம் ஆண்டு மார்ச் 23ம் தேதி தூக்கிலிடப்பட்டார் என்பதற்கான ஆதாரங்களைத் தேடினோம். அனைவராலும் திருத்தக்கூடியது என்றாலும் விக்கிப்பீடியாவில் பகத் சிங் தூக்கிலிடப்பட்ட நாள் தொடர்பாக ஏதாவது ஆதாரம் உள்ளதா என்று பார்த்தோம். அதில், பகத் சிங் தூக்கிலிடப்பட்டது தொடர்பாக 1931 மார்ச் 25ம் தேதி வெளியான டிரிபியூன் இதழின் புகைப்படத்தை வெளியிட்டிருந்தனர்.

en.wikipedia.org | prasarbharati |
வேறு ஆதாரங்கள் இருக்கிறதா என்று தேடினோம். அப்போது இந்தியா டுடே வெளியிட்ட பகத் சிங் உள்ளிட்டவர்களின் மரண தண்டனை அறிக்கை தொடர்பான செய்தி கிடைத்தது. அதில், பகத் சிங்குக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறைவேற்றுவதற்கான வாரண்ட் ஆவணத்தை வெளியிட்டிருந்தனர். தொடர்ந்து அந்த செய்தியில் பகத் சிங் 1931ம் ஆண்டு மார்ச் 23ம் தேதி தூக்கிலிடப்பட்டார் என்று குறிப்பிட்டிருந்தனர்.

indiatoday.in | Archived Link |
என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா வெளியிட்ட பகத்சிங் வாழ்க்கை வரலாறு பதிவில் அவர் மார்ச் 23, 1931ம் தேதி லாகூர் மத்திய சிறையில் தூக்கிலிடப்பட்டார் என்று குறிப்பிட்டிருந்தனர். தொடர்ந்து பல செய்திகள் பகத் சிங் 1931 மார்ச் 23ம் தேதி தூக்கிலிடப்பட்டார் என்பதை உறுதி செய்தன.

britannica.com | Archived Link |
இந்த ஆதாரங்கள் அடிப்படையில் பகத் சிங் பிப்ரவரி 14, 1931 அன்று தூக்கிலிடப்பட்டார் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:பகத் சிங் தூக்கிலிடப்பட்ட தினம் பிப்ரவரி 14, 1931 என்று ஃபேஸ்புக்கில் பரவும் வதந்தி!
Fact Check By: Chendur PandianResult: False
