தொப்புள் கொடி ரத்தம் குழந்தைக்கு செல்வது தடுக்கப்படுகிறதா?

சமூக ஊடகம் | Social சர்வ தேசம் மருத்துவம் I Medical

பிறந்த குழந்தைக்கு தொப்புள் கொடி ரத்தம் உடலுக்குள் செல்லாமல் தடுக்கப்படுவதாகவும் இதனால், குழந்தைகளுக்கு புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவதாகவும் ஒரு போட்டோ கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

ஹலோ ஆப்பில் பந்த பதிவை ஸ்கிரீன்ஷாட் எடுத்து ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளனர். அந்த ஸ்கிரீன் ஷாட்டில், “ஒரு குழந்தை பிறந்த ஒரு மணி நேரம் வரைக்கும் தொப்புள் கொடியை அறுக்காமல் அப்படியே விட்டுவிட்டால் கொடியினுள் இருக்கும் ஸ்டெம் செல் திரவம் மெல்ல மெல்லக் குழந்தையின் வயிற்றுக்குள் முழுவதுமாக இறங்கிவிடும். இது அக்குழந்தையின் வாழ்நாள் முழுவதுக்குமான நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. மேலும், அக்குழந்தைக்கு கேன்சர் என்ற நோயே வராது. ஒரு குழந்தை பிறந்த அதன் தொப்புள் கொடி தானாகவே உதிர்ந்து விழ வேண்டும். ஆனால் எந்த ஒரு ஆங்கில மகப்பேறு மருத்துவமனைகளிலும் குழந்தை பிறந்த அடுத்த சில வினாடிகளில் குழந்தையின் வற்றுக்கு அருகேயுள்ள தொப்புள் கொடியில் கிளிப் போட்டு அந்த திரவத்தை உடலினுள் இறங்காமல் தடுத்துவிடுகிறார்கள். ஏன்னு கேட்டா மேலிடத்து உத்தரவுங்குறான். யார் அந்த மேலிடம்னா அமெரிக்கான்னு சொல்றான்” என்று உள்ளது.

இந்த ஸ்கிரீன்ஷாட் பதிவை Lilly Arul Sheela என்பவர் 2020 பிப்ரவரி 9ம் தேதி தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

ஸ்டெம் செல் என்பது நம்முடைய உடலில் எந்த ஒரு உறுப்பு செல்லாகவும் வளர்ச்சியடையக் கூடிய செல்கள் ஆகும். அது இதயத்துக்கு சென்றால் இதய திசுவாக, நுரையீரலுக்கு சென்றால் நுரையீரல் செல்லாக வளர்ச்சிப் பெறும் தன்மை கொண்டது. அதாவது உடலின் எந்த ஒரு திசுவாகவும் மாறும் தன்மை கொண்டது. குறுத்து செல் என்றும் இதை சொல்வார்கள். இந்த ஸ்டெம் செல்லை சேகரித்து வைத்தால், எதிர்காலத்தில் புற்றுநோய் உள்ளிட்ட மிகக் கொடிய பாதிப்பு ஏற்பட்டால் அவர்களுக்கு இந்த ஸ்டெம் செல்களை பிரித்து எடுத்து சிகிச்சை அளித்து உயிரைக் காப்பாற்ற முடியும் என்று நவீன மருத்துவம் கூறுகிறது.

டாக்டர் விக்ரம் குமார்

தமிழக கிராமப்புற பழங்கால மருத்துவ முறைகளில் இதுபோன்றதொரு தகவல் உள்ளதா என்று சித்த மூலிகை ஆராய்ச்சியாளர் பெல்சினிடம் கேட்டபோது, இப்படி கேள்விப்பட்டது இல்லை. புதுத் தகவலாக உள்ளது என்றார். அரசு சித்த மருத்துவர் விக்ரமிடம் கேட்டபோது, “இந்த தகவல் உண்மை இல்லை. அந்த காலத்தில் கண் திருஷ்டிக்காக தாயத்தில் போட்டுவைத்தது உண்மை. ஏன் அப்படி செய்தார்கள், அதனால் நோய்கள் குணமானது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. தற்போது நோய்த் தொற்று ஏற்படாமல் தடுக்க தொப்புள்கொடி உடனடியாக வெட்டப்படுகிறது. மற்றபடி இந்த ஸ்டெம் செல் ரத்தம் குழந்தையின் உடலுக்குள் சென்றால் புற்றுநோய் உள்ளிட்டவை வராது, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்பது எல்லாம் ஆதாரமில்லாதது” என்றார்.

இது குறித்து ஈரோட்டைச் சேர்ந்த மூத்த மகப்பேறு மற்றும் குழந்தையின்மைக்கான சிகிச்சை நிபுணர் டாக்டர் நிர்மலா சதாசிவத்திடம் கேட்டோம்.

அப்போது அவர், “முழுக்க முழுக்க பொய்யான செய்தி. கர்ப்பப்பையில் கரு உருவாகும்போது கருவும் பிளாசண்டாவும் (இதை தமிழில் நச்சு) உருவாகும். நச்சு என்பது குழந்தைக்கு இணையான முக்கியமான விஷயம். ஒரு செல், இரண்டு செல் என்று பல நிலைகளில் கருவுக்கு இணையாக உருவாகும். கரு உருவாகி, கரு தனியாகவும் உருவாகும். பிளசண்டா போய் கர்ப்பப்பையில் ஒட்டிக்கொள்ளும். அது அப்படியே கோன் போல மாறி கொடி போல மாறி குழந்தையின் தொப்புளில் ஒட்டிக்கொள்ளும். அந்த தொப்புளிலிருந்துதான் குழந்தையின் முழு உடலுக்கும் ரத்த ஓட்டமும் நடக்கும். அதாவது, கர்ப்பப்பை சுற்றிலிருந்து ரத்த ஓட்டம் நச்சுக்கு வரும், அங்கிருந்து நச்சுக்கொடி மூலமாக தொப்புள் கொடிக்குள் வந்து உடல் முழுக்க பாயும்.

புகைப்படம்: டாக்டர் நிர்மலா சதாசிவம்

இப்போது முழு ரத்த பரிமாற்றம் நடக்கும். குழந்தையின் எடையில் 10 சதவிகித ரத்தம் அம்மாவிடம் இருந்து குழந்தைக்கு வரும். கர்ப்பப்பையிலிருந்து நச்சு பிரிந்துவிட்டால் அதற்கு வாழ்வு இல்லை. குழந்தை பிறக்கும்போது அது பிரிந்து வரும். அப்படி பிரிந்துவிட்டாலே அது இறந்துவிட்டது என்று அர்த்தம். அதனால் வேறு எந்த பயனும் இல்லை. அதை அகற்றாமல் விட்டால் இரண்டு மூன்று நாட்களில் அழுகி நாற்றம் எடுக்க ஆரம்பித்துவிடும்.

கர்ப்பப்பை என்பது நம்முடைய மூன்று விரலைச் சேர்த்தல் எவ்வளவு பெரியதாக இருக்குமோ அந்த அளவுக்குத்தான் இயல்பான நிலையில் இருக்கும். அந்த கர்ப்பப்பை குழந்தையின் 9வது மாதத்தில் பார்த்தால் அதைத் தாங்கும் அளவுக்கு பெரியதாக மாறியிருக்கும். டெலிவரி ஆனதும் கர்ப்பப்பை சுருங்க ஆரம்பிக்கும். பிளசண்டா (நஞ்சு) என்பது நம்முடைய உள்ளங்கை அளவுக்கு இரண்டு மடங்கு பெரியதாக இருக்கும். அது பிரிந்துவிட்டது என்றால் கர்ப்பப்பையில் அது ஒட்டியிருந்த இடம் புண்ணானது போல இருக்கும். அதனால்தான், குழந்தை பிறந்ததும் பெண்களக்கு தீட்டப்படுகிறது என்று சொல்வார்கள். இந்த நச்சு குழந்தை வந்த வழியிலேயே வெளியே வந்துவிடும். இதனால், எப்படியும் இந்த நஞ்சு வெளியே வரப்போகிறதே என்பதால் குழந்தை வெளியே வந்ததும் தொப்புளிலிருந்து ஒரு இன்ச் இடைவெளி விட்டு கிளிப் போட்டு அதை வெட்டிவிடுவோம். அதுகூட 5வது நாள் காய்ந்து விழுந்துவிடும்.

ஸ்டெம் செல் உள்ளது என்பது உண்மை. குழந்தைக்கு மென்மையாக அழுத்தும் போது இதில் உள்ள 10 – 20 எம்.எல் ரத்தம் உள்ளே சென்றுவிடும். ஏற்கனவே, குழந்தையின் எடைக்கு ஏற்ப குழந்தைக்கு ரத்தம் உருவாகியிருக்கும். அதனால் இந்த ரத்தம் குழந்தைக்கு கட்டாயம் தேவை என்று இல்லை. பச்சிளம் குழந்தையின் உடலில் ஏற்கனவே நிறைய ஸ்டெம் செல் இருக்கும். இதனால், இந்த ரத்தம் சென்றுதான் குழந்தைக்கு ஸ்டெம்செல் வர வேண்டும் என்று தேவையில்லை” என்றார்.

தமிழில் தொடர்ந்து மருத்துவம் தொடர்பான விழிப்புணர்வு கட்டுரைகளை எழுதிவரும் பொது மருத்துவர் கணேசனிடம் கேட்டோம் “இந்த தகவல் உண்மையில்லை, குழந்தையின் உடலில் குடல், ரத்தம், ரத்தக்குழாய், எலும்பு மஜ்ஜை, தோல், கல்லீரல் எனப் பல உறுப்புகளில் ஸ்டெம் செல்கள் இருக்கின்றன, தொப்புள் கொடி அறுப்பது வெளிப்புறச் சூழல் மாசு காரணமாக குழந்தைக்கு நோய்த்தொற்று ஏற்பட்டு குழந்தையின் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதைத் தடுப்பதற்காகவே!” என்றார்.

புகைப்படம்: டாக்டர் கணேசன்

இந்த ஆதாரங்களின் அடிப்படையில் குழந்தையின் ஆரோக்கியத்துக்காக, நோய்த் தொற்று ஏற்படாமல் தடுக்கவே தொப்புள்கொடி வெட்டப்படுகிறது. தொப்புள் கொடி ரத்தத்தை உடலுக்குள் அப்படி செலுத்துவதன் மூலம் புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்புகள் வராது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:தொப்புள் கொடி ரத்தம் குழந்தைக்கு செல்வது தடுக்கப்படுகிறதா?

Fact Check By: Chendur Pandian 

Result: False