நெதர்லாந்தில் 5ஜி சோதனையால் 297 குருவிகள் உயிரிழந்தனவா?

சமூக ஊடகம் சர்வதேசம் தொழில்நுட்பம்

நெதர்லாந்தில் 5ஜி நெட்வொர்க் சோதனையில் 297 குருவிகள் உயிரிழந்ததாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

5ஜி சேவை என்பதன் மாதிரி படம், குருவிகள் இறந்து கிடக்கும் படங்களை ஒன்று சேர்த்து பதிவை உருவாக்கியுள்ளனர். அதில், 5ஜி நெட்வொர்க் சோதனையில் நெதர்தலாந்தில் 297 குருவிகள் அதிவேக அலையால் உயிர்விட்டன. நமக்கு தேவை இல்லை 5ஜி. இதன் ரேடியேஷன் மோசமானது. பறவைகளை பாதுகாப்போம். விவசாயிகள் உயிர் நாடி பறவைகள்” என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்த பதிவை, தமிழ் தகவல் தேனீ என்ற ஃபேஸ்புக் பக்கம் 2020 பிப்ரவரி 10ம் தேதி வெளியிட்டுள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

உலகம் முழுக்க 5ஜி சேவை பற்றி எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. 5ஜி சேவையில் இயங்கும் மொபைல்கள் வரத் தொடங்கிவிட்டன. அதனுடன், 5ஜி ஆபத்து பற்றிய வதந்திகளும் வேகமாக பரவுகின்றன. நெதர்லாந்தில் 5ஜி சோதனையின்போது பறவைகள் உயிரிழந்தது என்று குறிப்பிட்டுள்ளனர். இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

நெதர்லாந்தில் 5ஜி நெட்வோர்க் சோதனையில் பறவைகள் உயிரிழந்ததா என்று கண்டறிய, கூகுளில் டைப் செய்து தேடினோம். அப்போது, இது தொடர்பான பல உண்மை கண்டறியும் ஆய்வுகள் வெளியாகி இருப்பதை காண முடிந்தது. அவற்றை ஒதுக்கிவிட்டு தேடியபோது, நியூஸ் 18 தமிழ் கூட இது போன்ற செய்தியை வெளியிட்டிருந்தது தெரிந்தது. அந்த செய்தியைப் பார்த்தோம்.

அதில் எரின் எலிசபெத் என்பவர் தன்னுடைய இணையதள பக்கத்தில், நெதர்தலாந்தின் ஹாக் நகரில் பறவைகள் கொத்துக் கொத்தாக இறந்தது என்றும், பறவைகள் இறந்த நேரத்தில் அங்கு 5ஜி அலைவரிசை பரிசோதனை நடந்தது என்றும் செய்தியை வெளியிட்டுள்ளார் என குறிப்பிட்டிருந்தனர். 

News18 TamilArchived Link

எரின் எலிசபெத்தின் இணையதளத்தைத் தேடி எடுத்துப் பார்த்தோம். அதில், ஹாக் நகரில் பறவைகள் இறந்தது பற்றி அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த கட்டுரை 2018 நவம்பர் 5ம் தேதி வெளியாகி இருந்தது. பறவைகள் இறந்தது தொடர்பான வீடியோ ஒன்றையும் அந்த கட்டுரையில் கொடுத்திருந்தார். ஆனால், அந்த வீடியோ எரின் எலிசபெத் எடுத்தது இல்லை. வேறு ஒரு ஊடகம் வெளியிட்ட பறவைகள் மரணம் தொடர்பான வீடியோவை அவர் ஆதாரமாகக் காட்டியிருந்தார். 

healthnutnews.comArchived Link

அந்த வீடியோ 2018 அக்டோபர் 26ம் தேதி வெளியாகி இருந்தது. அந்த வீடியோ ஆங்கிலத்தில் இல்லை. அந்த வீடியோ பற்றிய சிறுகுறிப்பை வெளியிட்டிருந்தனர். அதை மொழிமாற்றம் செய்து பார்த்தபோது, 5ஜி சேவையால் பறவைகள் இறந்தது என்று இல்லை. மேலும், 150க்கும் மேற்பட்ட பறவைகள் இறந்தது என்றே குறிப்பிட்டிருந்தனர். அந்த வீடியோவைப் பார்த்தபோது ஒரு வகையான பறவை இறந்து கிடப்பதை காண முடிந்தது. 

தொடர்ந்து இது தொடர்பாக தேடியபோது ஒன்று உண்மை கண்டறியும் ஆய்வுக் கட்டுரைகள் கிடைத்தன… இல்லை என்றால் எரின் எலிசபெத் வெளியிட்ட செய்தியை அடிப்படையாகக் கொண்ட செய்திகள்தான் நமக்கு கிடைத்தன. இதனால், அமெரிக்க ஃபேக்ட் செக் ஊடகமான snopes.com வெளியிட்ட கட்டுரையைப் பார்த்தோம். 

snopes.comArchived Link

அந்த கட்டுரையில் பறவைகள் மரணத்தில் மர்மம் நீடிப்பது உண்மைதான். இது குறித்து நகராட்சி நிர்வாகம் ஆய்வு மேற்கொண்டுள்ளது. 2019 அக்டோபர் 19 முதல் நவம்பர் 3 வரையிலான காலகட்டத்தில் மொத்தம் 337 ஸ்டார்லிங்ஸ் (starlings)பறவைகளும் இரண்டு மரங்கொத்திகளும் உயிரிழந்துள்ளன. இவை வைரஸ் தாக்கி இறந்ததாகவோ, விஷம் வைத்து கொல்லப்பட்டதாகவோ தெரியவில்லை. எதனால் மரணம் அடைந்தது என்பதை ஆய்வு செய்ய பல்வேறு ஆய்வகங்களுக்கு இறந்த பறவைகள் அனுப்பப்பட்டுள்ளன. பறவைகள் கொத்துக்குத்தாக மரணிப்பது அவ்வப்போது நடப்பதுதான். அந்த நேரத்தில் எல்லாம் இயற்கை, தொழில்நுட்பம், கடவுளின் கோபம் என்று பல வதந்திகள் பரவுவதாகவும் அதில் குறிப்பிட்டிருந்தனர். 

மேலும், குறிப்பிட்ட அந்த காலத்தில் அந்த நகரத்தில் 5ஜி பரிசோதனை நடத்தப்பட்டதா என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், அந்த நகரத்தில் 2019 ஜுன் மாதம் 5ஜி ஆய்வு நடத்தப்பட்டது என்றும் ஹவாய் நிறுவனம் இந்த சோதனையை நடத்தியது என்றும் குறிப்பிட்டிருந்தனர். மேலும், சோதனை நடத்தப்பட்ட காலத்தில் பறவைகள் உயிரிழப்பு ஏதும் நடைபெறவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தனர்.

மேலும் அந்த கட்டுரையில் மொபைல் போன் நெட்வொர்க் பேண்ட் வித் பற்றி குறிப்பிட்டிருந்தனர். பாதிப்பு ஏற்படுத்தாத கதிர்வீச்சு என்பது 100 கிலோ ஹெர்ட்ஸ் முதல் 300 ஜிகா ஹெர்ட்ஸ் வரை அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த ரேஜ்க்குள்ளான மொபைல் நெட்வொர்க் கதிர்வீச்சால் பாதிப்பு இல்லை என்று சர்வதேச நிறுவனமான ஐசிஎன்ஐஆர்பி (International Commission on Non-Ionizing Radiation Protection) தெரிவிக்கிறது. 5ஜி சேவையானது மூன்று ஃப்ரீக்குவன்சிகளில் வழங்கப்பட உள்ளது. குறைந்த ஃப்ரீக்குவன்சி என்பது 700 மெகாஹெர்ட்ஸ், கவரேஜ் லேயர் என்பது 3.4 முதல் 3.8 ஜிகா ஹெர்ட்ஸ் இருக்கும். இதுவே முதன்மையான பேண்ட் வித்தாக இருக்கும். சூப்பர் டேடா லேயர் என்பது 24.25 முதல் 27.5 ஜிகா ஹெர்ட்ஸ் வரை இருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது ஐ.சி.என்.ஐ.ஆர்.பி கொடுத்த வழிகாட்டுதலைவிட குறைவுதான் என்று குறிப்பிட்டிருந்தனர். 

செல்போன் கதிர்வீச்சால் உடல்நலத்துக்கு பாதிப்பு என்று பல்வேறு செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால், அறிவியல் பூர்வமாக எதுவும் நிரூபிக்கப்படவில்லை. அதே நேரத்தில் அதில் ஆபத்து இல்லை என்று முற்றிலுமாக ஒதுக்கிவிடவும் முடியாது.

நம்முடைய ஆய்வில்,

பறவைகள் இறப்பு மற்றும் 5ஜி சோதனையை தொடர்புப்படுத்தி எரின் எலிசபெத் என்பவர் முதன் முதலில் செய்தி வெளியிட்டது தெரியவந்துள்ளது.

அவர் ஆதாரமாக வெளியிட்ட வீடியோவில் பறவைகள் இறப்புக்கு 5ஜி சோதனை காரணம் என்று குறிப்பிடவில்லை.

நெதர்லாந்தில் 5ஜி பரிசோதனை 2018 ஜூன் மாதம் நடந்துள்ளது. பறவைகள் இறப்பு அக்டோபர் மாதம் நடந்துள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

297 இல்லை 339 பறவைகள் இறந்ததாக ஹாக் நகர உள்ளாட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பறவைகள் மரணத்துக்கு காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. 

300 ஜிகா ஹெர்ட்ஸ் வரை செல்போன் நெட்வொர்க் பாதிப்பு ஏற்படுத்தாது என்று சர்வதேச அமைப்புகள் கூறியுள்ள நிலையில் 5ஜி சேவையில் அதிகபட்சமாக 27.5 ஜிகா ஹெர்ட்ஸ் வரை மட்டுமே ஃப்ரீக்குவன்ஸி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில் பறவைகள் மர்ம மரணம் என்ற உண்மை நிகழ்வுடன் 5ஜி பரிசோதனை என்ற தவறான தகவலை சேர்த்து செய்தி உருவாக்கப்பட்டுள்ளது என்பது உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:நெதர்லாந்தில் 5ஜி சோதனையால் 297 குருவிகள் உயிரிழந்தனவா?

Fact Check By: Chendur Pandian 

Result: Partly False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •