
கள்ள ஓட்டு போடுவதற்கு வசதியாக செயற்கை விரல்களை பா.ஜ.க வாங்கியிருப்பதாகவும், தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கைப் பார்ப்பதாகவும் ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில், தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் வைரல் ஆகி வருகிறது. எனவே, இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்ய முடிவு செய்தோம். முடிவு உங்கள் பார்வைக்கு.
செய்தியின் விவரம்:
தமிழகத்தில் தாமரையே மலர. வைக்க. பாசிச. பாஜக. ஆட்சியை மீண்டும் பிடிக்க வேண்டும் என்கிற காவி பயங்கறவாத வெறி,
ஓட்டு போட போலி விரல்கள் தயாரித்து வருகிறது
பாசிச. பாஜக. ஒழிக
தேர்தல் ஆணையமே ….
பாசிச தேர்தல் ஆணையமே இதற்கு துணை போகதே …..

தமிழகத்தில், நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற பா.ஜ.க தீவிரமாக முயன்று வருவதாகவும், இதனால் கள்ள ஓட்டுப் போட போலி விரல்களைத் தயாரித்து வருவதாகவும், இந்த பதிவில் தெரிவித்துள்ளனர். இதற்கு தேர்தல் ஆணையமும் உடந்தையாக இருப்பதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஆனால், இந்த போலி விரல்கள் எங்கே தயாரிக்கப்பட்டன, எப்படி இந்த தகவல் வெளியானது என்பத உள்ளிட்ட எந்த விவரமும் அளிக்கப்படவில்லை. காவி பயங்கரவாதம், பாசிசம், தேர்தல் ஆணையம் உடந்தை போன்ற சொல்லாடல்கள் இந்த பதிவை அதிகம் பகிரத் தூண்டியுள்ளது.
உண்மை அறிவோம்:
2017ம் ஆண்டிலேயே இதுபோன்ற செய்தி பரவியது நமக்கு நினைவில் இருந்தது. எனவே, கூகுளில் போலி விரல் என்று தேடினோம். அப்போது, 2017ம் ஆண்டு வெளியான செய்திகள் நமக்குக் கிடைத்தன.

இந்தியா டுடே வெளியிட்ட செய்தியில், இந்த தகவலில் உண்மை உள்ளது போலத் தெரிவித்திருந்தது. ஆனால், பா.ஜ.க அல்லது வேறு எந்த ஒரு கட்சியும் இதைப் பயன்படுத்தியதாக உறுதி செய்யவில்லை.
அந்த செய்தியில், உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தலில் பயன்படுத்த போலி விரல்கள் அதிக அளவில் ஆர்டர் செய்யப்பட்டதாக ஒரு வதந்தி பரவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இந்தியா டுடே இது தொடர்பாக விசாரணை நடத்தியுள்ளது.
உண்மை கண்டறியும் குழுவினர் டெல்லியில் உள்ள ஒரு பிரபல மருத்துவ உபகரணங்கள் விற்பனை நிலையத்துக்கு சென்று செயற்கை விரல் வேண்டும் என்று கேட்டுள்ளனர்.
அதற்கு அவர்கள், ‘’இப்போதுதான் லக்னோவில் 500 செயற்கை விரல்கள் விற்பனை செய்துள்ளோம். அதிக அளவில் ஆர்டர்கள் வந்த வண்ணம் உள்ளன”என்று கூறியுள்ளனர். ஆனால், எந்த கட்சி என்பதை அவர்கள் வெளிப்படையாக அறிவிக்கவில்லை.
10 விரல்கள் 1.1 லட்ச ரூபாய் என்ற விலைக்கு விற்பனை செய்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்ததாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது. இது அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
இந்த செய்தியில் பா.ஜ.க அல்லது வேறு எந்த ஒரு கட்சியோ கள்ள ஓட்டுப் போட செயற்கை விரல்களை வாங்கியது என்பதை நிரூபிக்கவில்லை. மேலும், செயற்கை விரல் பயன்படுத்தும் அபாயம் உள்ளது என்றுதான் சொல்லப்பட்டுள்ளது.
இந்த பதிவில் உள்ள படத்தைக் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றம் செய்து தேடினோம். நமக்கு இந்த கதையின் மூலம் கிடைத்தது.


இந்த படம் 2013ம் ஆண்டு ஜப்பானில் உள்ள பத்திரிகையில் வெளியாகியுள்ளது. ஜப்பானில் உள்ள ஒரு மாஃபியா கும்பல், தன்னிடம் தவறு செய்பவர்களின் விரல்களை கொஞ்சம் கொஞ்சமாக வெட்டி தண்டனை அளிக்கும் வழக்கத்தைக் கொண்டிருக்கிறது. இப்படி வெட்டப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில், செயற்கை விரல்கள் தயாரிக்கப்பட்டது தொடர்பான செய்தி நமக்குக் கிடைத்தது. அந்த செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
இந்த செய்தியிலேயே ஒரு வீடியோ பதிவு உள்ளது. அதில், இந்த பதிவில் இடம்பெற்ற படம் இருந்தது. சரியாக, 1.04வது நிமிடத்தில் இந்த பதிவில் இடம் பெற்ற காட்சி வருவதைக் காணலாம்.
(கள்ள ஓட்டு போட செயற்கை கை விரல்கள் பதிவில் இருந்த படம்…)

(ஜப்பான் செய்தியில் இடம்பெற்ற வீடியோவில் 1.04 நிமிட காட்சி)

இதன்படி, இவ்விரு புகைப்படங்களும் ஒன்றுதான் என்றும், இந்த வீடியோவில் இருந்துதான், மேற்கண்ட புகைப்படங்கள் எடிட் செய்யப்பட்டு பகிரப்பட்டு வருகின்றன என்றும் உறுதியாகிறது.
இதுதவிர, தமிழகத்தில் இதுபோன்று ஏதேனும் நடந்துள்ளதா, போலீசார் இப்படி செயற்கை விரல்களை கைப்பற்றினார்களா என்று கூகுளில் தேடினோம். அப்படி எந்த ஒரு செய்தியும் நமக்குக் கிடைக்கவில்லை. ஒரு இணையதளம் மட்டும் போலி விரல் பற்றிய செய்தியில் நம்பகத்தன்மை உள்ளதா என்று ஆய்வு செய்த பதிவு மட்டுமே கிடைத்தது.

2017ம் ஆண்டு ஃபேஸ்புக்கில் பரவிய வதந்தியைத் தேடினோம். அதிலும் கூட இதே படங்கள்தான் இடம்பெற்றிருந்தன. 2017ம் ஆண்டு முதல் இந்த வதந்தி பரவி வருவது இதன் மூலம் தெரிகிறது.

இதுவரை நமக்கு கிடைத்த ஆதாரங்களின்படி, தெரியவந்த உண்மையின் விவரம்,
1) பாஜக இத்தகைய செயற்கை விரல்கள் எதையும் இறக்குமதி செய்யவில்லை.
2) ஜப்பானில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில் இருந்து புகைப்படங்களை எடிட் செய்து இப்படி வதந்தி பரப்பி வருகிறார்கள்.
முடிவு:
நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் இது தவறான தகவல் என நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ என எதையும் உறுதிப்படுத்தாமல், மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். அப்படி, நீங்கள் பகிர்ந்தது பற்றி யாரேனும் புகார் கொடுத்தால், நீங்கள் சட்டப்படியான நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
