
அமெரிக்காவில் இந்திய முன்னாள் பிரதமர் ஒருவரின் மகன் போதை மருந்து, அளவுக்கு அதிகமான பணம் வைத்திருந்ததால் கைது செய்யப்பட்டதாக ஒரு நியூஸ் கிளிப் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link |
2001ம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி வெளியான தி பாஸ்டன் என்ற இதழின் செய்தி கிளிப் ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “இந்திய அரசியல்வாதி பாஸ்டன் விமானநிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார். அவரிடமிருந்து தடை செய்யப்பட்ட போதை மருந்து மற்றும் கணக்கில் வராத பணம் இருந்தது. நமக்கு கிடைத்த தகவலின் படி அவர் இந்தியாவின் முன்னாள் பிரதமரின் மகன் என்று கூறப்படுகிறது. இந்தியத் தூதர் தலையீட்டின் அடிப்படையில் அவர் விடுவிக்கப்பட்டார். -ஏ.எஃப்.பி” என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவை, மணி ஸ்ரீனிவாசன் என்பவர் 2019 டிசம்பர் 28ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
இந்த பதிவில் ராகுல் காந்தி என்று குறிப்பிட்டுச் சொல்லவில்லை. ஆனால், பதிலில் எல்லோரும் ராகுல் காந்தி என்றே குறிப்பிடுகின்றனர். பதிவிட்டவரும் இந்த செய்தியில் குறிப்பிடப்படும் நபர் ராகுல் காந்தி என்றே தெரிவிக்கின்றார்.

2001ம் ஆண்டு செப்டம்பர் மாதம் போதைப் பொருள் வைத்திருந்ததாக ராகுல் காந்தி கைது செய்யப்பட்டாரா என்று தேடினோம். தி பாஸ்டன் இதழில் வெளியான தலைப்பை வைத்தே கூகுளில் டைப் செய்து தேடியபோது, இந்த தகவல் தவறானது என்று வெளியான உண்மை கண்டறியும் ஆய்வு மற்றும் 2001ம் ஆண்டு உண்மையில் ராகுல் காந்தியை அமெரிக்காவின் எஃப்.பி.ஐ கைது செய்ததா என்று இந்து நாளிதழ் வெளியிட்ட செய்தி கிடைத்தது. இந்த நியூஸ் கிளிப்பை முதலில், ரிசர்வ் வங்கியின் இயக்குநர் குழுவில் உள்ள ஆடிட்டர் குருமூர்த்தி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு பின்னர் நீக்கினார் என்றும் செய்திகள் கிடைத்தன.

Search Link |
இந்துவில் வெளியான செய்தியைப் பார்த்தோம். அதில் கூறப்பட்டுள்ள விவரம் பின்வருமாறு:
“செப்டம்பர் 11 தாக்குதலைத் தொடர்ந்து அமெரிக்க விமான நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாஸ்டன் விமான நிலையத்தில் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் மகன் ராகுல் காந்தியை எஃப்.பி.ஐ அதிகாரிகள் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தடுப்புக் காவலில் வைத்திருந்தனர்.
பாஸ்டனில் இருந்து வாஷிங்டன் செல்வதற்காக ராகுல் காந்தி வந்தார். அவரை பரிசோதித்த பிறகு அவரை தொடர்ந்து பயணிக்க அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. தான் இந்தியாவின் முன்னாள் பிரதமரின் மகன் என்று கூறிய பிறகும் அனுமதிக்கவில்லை. இந்த தகவல் சோனியா காந்தியை அடைந்தது. அவர் அமெரிக்காவுக்கான இந்திய தூதுர் லலித் மான்சிங்கை தொடர்புகொண்டு உதவுமாறு கேட்டுக்கொண்டார். அதன்பிறகே ராகுல்காந்தி தொடர்ந்து பயணம் மேற்கொள்ள முடிந்தது. ஆனால் இது பற்றி அதிகாரிகள் தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்று செய்திகள் பரவி வருகின்றன.
இது குறித்து வாஷிங்டனில் உள்ள நம்முடைய நிருபர் ஶ்ரீதர் கிருஷ்ணஸ்வாமி தூதரக அதிகாரிகளை தொடர்புகொண்டு பேசினார். மான்சிங் தலையிட்ட பிறகே ராகுல் காந்தி தொடர்ந்து பயணிக்க அனுமதிக்கப்பட்டார் என்று பரவும் தகவல் துளியும் உண்மையில்லை. அமெரிக்காவில் ராகுல் காந்தி எந்த ஒரு பாதுகாப்பையும் கேட்டு பெறவில்லை. இதனால் அவர் தூதரகத்தில் தகவல் தெரிவிக்க வேண்டியது இல்லை. ராகுல் காந்தி அமெரிக்காவில் உள்ளார் என்ற தகவலே தூதரகத்தில் உள்ள பல அதிகாரிகளுக்குத் தெரியவில்லை. ராகுல் காந்தி தடுத்து வைக்கப்பட்டார் என்ற தகவல் தவறானது என்று தூதர் மற்றும் தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர்,’’.

thehindu.com | Archived Link |
இது பற்றி பாஸ்டன் இதழ் 2001ம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி செய்தி வெளியிட்டதா என்று தேடினோம். ஆனால், அதுபோல எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. அப்போது, ஆடிட்டர் குருமூர்த்தி இந்த நியூஸ் கிளிப் வெளியிட்டது தொடர்பான செய்தியைப் பார்த்தோம். அது தவறான தகவல் என்பதால் அதை அவரே அகற்றிவிட்டார் என்று குறிப்பிட்டிருந்தனர்.
அதே நேரத்தில் நம்முடைய Marathi Fact Crescendo பிரிவு இதுதொடர்பாக கட்டுரை ஏற்கனவே கட்டுரை வெளியிட்டுள்ளது. அதில், இந்த கிளிப் போலியானது என்றும், நாம் விரும்பும் குறிப்பிட்ட செய்தி நிறுவனங்கள் பெயரில், நாளில், நாமே செய்திகளை உருவாக்கிக்கொள்ளும் இணையதளம் ஒன்றை பயன்படுத்தி போலியாக உருவாக்கப்பட்டது என்றும் குறிப்பிட்டிருந்தனர்.
நாம் விரும்பும் தகவல் செய்தித்தாளில் இருப்பது போன்ற மாற்றித் தரும் fodey.com என்ற இணையதளம் பற்றிய தகவல் கிடைத்தது. அதில், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்ற ஒரு நியூஸ் கிளிப்புடன் உங்களுக்கான செய்தியை உருவாக்கிக்கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டிருந்தனர்.

நாமும் ஒரு செய்தி கிளிப்பை உருவாக்கினோம். செவ்வாய் கிரகவாசிகள் தாக்குதல் என்று அதில் தலைப்பிருந்ததால், நாமும் அது தொடர்பாக சிறு குறிப்பை டைப் செய்து, 2001 செப்டம்பர் 30ம் தேதி 13ம் பக்கத்தில் வெளியாவது போன்று அதை உருவாக்கினோம். இதன் மூலம் இந்த நியூஸ் கிளிப் போலியாக உருவாக்கப்பட்டது என்பது உறுதியானது.

இந்து வெளியிட்ட செய்தியைக் காணும்போது, 20 ஆண்டுகளாக இந்த வதந்தி இன்னும் சுற்றிக்கொண்டிருப்பது தெரிந்தது.
நம்முடைய ஆய்வில்,
முன்னாள் பிரதமரின் மகன் அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் கைது செய்யப்பட்டார் என்பதற்கு ஆதாரமாக எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை.
இந்த நியூஸ் கிளிப் போலியாக உருவாக்கப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியின் இயக்குநர் குழுவில் உள்ள குருமூர்த்தி இந்த நியூஸ் கிளிப்பை வெளியிட்டு நீக்கிவிட்டார் என்று சில மாதங்களுக்கு முன்பு வெளியான செய்திகள் கிடைத்துள்ளன.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், போதை மருந்து மற்றும் கணக்கில் வராத பணத்தை வைத்திருந்த இந்தியாவின் முன்னாள் பிரதமரின் மகன் கைது செய்யப்பட்டார் என்று பகிரப்படும் தகவல் போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதமரின் மகன்?- ஃபேஸ்புக் நியூஸ் கிளிப் உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False
