
‘’பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா சற்று முன் வீரமரணம் அடைந்தார்,’’ என்ற தலைப்பில் ஒரு விஷமத்தனமான ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

நக்கல் மன்னன்-2.0 என்ற ஃபேஸ்புக் ஐடி, இந்த பதிவை, மே 23ம் தேதி வெளியிட்டுள்ளது. இது வேடிக்கையாக இருந்தாலும், அரசியல் விஷமத்தனம் நிறைந்ததாக உள்ளது. பலரும் இதனை உண்மை போல பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மே 23ம் தேதி இந்திய நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகின. இதில், நாடு முழுவதும் மெஜாரிட்டி இடங்களை வென்று, பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க உள்ளது. இதுபற்றிய செய்தியை படிக்க இங்கே கிளிச் செய்யவும்.

இந்நிலையில், தமிழகத்தில், பாஜக, அதிமுக கூட்டணி ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றிபெற்றது. எஞ்சியுள்ள 38 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்று, பாஜக ஆதரவாளர்களை அதிர்ச்சியடைய செய்தது. இதில், குறிப்பாக, பாஜக.,வைச் சேர்ந்த எச்.ராஜா, தமிழிசை சவுந்திரரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட வேட்பாளர்கள் தோல்வியடைந்தனர். இதுபற்றிய செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
தமிழக அளவில் பாஜக கூட்டணி மோசமான தோல்வியை சந்தித்தது முதலாக, பாஜக வேட்பாளர்களையும், அதன் தலைவர்கள் கேலி, கிண்டல் செய்து, சமூக ஊடகங்களில் பலரும் பதிவு வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில்தான், நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஃபேஸ்புக் பதிவு வெளியாகியுள்ளது.
இதில், கார் ஒன்றில் மைக்செட் கட்டி இரங்கல் செய்தியை படிப்பது போன்ற களவாணி சினிமா புகைப்பட காட்சியை பகிர்ந்து, அதன் கீழே ‘’பாஜக தேசிய செயலாளர் சிவகங்கை தொகுதி வேட்பாளருமான தென்னகத்து பால் தாக்கரே ஹெச்.ராஜா ஜீ சற்று முன் வீரமரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்,’’ என்று எழுதியுள்ளனர்.
இது அரசியல் ரீதியான உள்நோக்கத்துடன், பகிரப்பட்டதாக இருந்தாலும், பார்ப்போருக்கு இது ஒருவேளை உண்மையாக இருக்குமோ, தேர்தல் தோல்வி அதிர்ச்சி தாங்காமல் எச்.ராஜா இறந்துவிட்டாரோ என்று சிந்திக்கும் வகையில் உள்ளது.
‘’எச்.ராஜா முழு உடல்நலத்துடன்தான் உள்ளார். மே 23 அன்று நடைபெற்ற சிவகங்கை நாடாளுமன்ற தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கையை கூட எச்.ராஜா நேரில் சென்று பார்வையிட்டார். அப்படி இருக்கையில், தேர்தலில் அவர் தோற்றதை விமர்சிக்கும் வகையில் இவ்வாறு சமூக ஊடகங்களில் எதிர்க்கட்சியினர் தகவல் பரப்புவதாக,’’ தமிழக பாஜக வட்டாரங்களில் குறிப்பிடுகின்றனர்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், எச்.ராஜா வாங்கிய ஓட்டுகள் விவரமும், அவர் இன்னமும் உயிரோடுதான் உள்ளார் என்பதற்கான ஆதார புகைப்படமும் கீழே தரப்பட்டுள்ளது.

எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஃபேஸ்புக் பதிவு, அரசியல் உள்நோக்கத்துடன், விஷமத்தனமாக எச்.ராஜா பற்றி வதந்தி பரப்பும் வகையில் தயாரிக்கப்பட்ட ஒன்று, என உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் யாரும் இத்தகைய தவறான செய்தி, புகைப்பட மற்றும் வீடியோ பதிவுகளை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா உயிரிழந்தார்: விஷமத்தனமான ஃபேஸ்புக் பதிவு
Fact Check By: Parthiban SResult: False
