தேர்தலில் வெற்றிபெற்ற பிரதமர் மோடி, வாக்குப்பதிவு இயந்திரத்துக்கு மலர் தூவி வணக்கம் செலுத்தியதாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மை குறித்து ஆய்வு செய்தோம்.

தவலின் விவரம்:

நீ இருக்கும் வரை நானே பிரதமர்

Archived link

வாக்குப்பதிவு இயந்திரத்துக்கு பிரதமர் மோடி வணக்கம் செலுத்துவது போன்று படம் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “நீ இருக்கும் வரை நானே பிரதமர்” என்று கூறுவது போல, எழுதப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் வந்துள்ள சூழலில், இந்த படத்தை ஆ. பகலவன் என்பவர் 2019 மே 23ம் தேதி வெளியிட்டுள்ளார். ஏராளமானோர் இந்த படத்தை பகிர்ந்து வருகின்றர்.

உண்மை அறிவோம்:

பார்க்கும்போதே இந்த படம் போலியானது என்று தெரிகிறது. ஆனால், பதிவு கிண்டலுக்கு வெளியிட்டது போன்று இல்லை. ஏராளமானோர் இதை பகிர்ந்து வருகின்றனர். இதனால், இந்த பதிவின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்தோம்.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வினர் அதிக அளவில் வாக்குப் பதிவு இயந்திரங்களை மாற்றி முறைகேடு செய்வதாக செய்திகள் வெளியாகின. ஆனால், இந்த செய்திகள், புகைப்படங்கள் போலியானவை என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது. இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

இந்த நிலையில், இந்த புகைப்படம் பரவி வருவது பரபரப்பை ஏற்படுத்தியது. படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, சாவர்க்கர் படத்துக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தும் படம் ஒன்று கிடைத்தது.

MODI EVM FAKE PIC 2.png

2014ம் ஆண்டு சாவர்க்கரின் பிறந்த தினத்தையொட்டி நாடாளுமன்றத்தில் அலங்கரித்து வைக்கப்பட்ட அவரது படத்துக்கு மரியாதை செலுத்தியுள்ளார். அப்போது இது தொடர்பான செய்தி, புகைப்படம் வெளியாகி உள்ளது. இது தொடர்பான செய்தியைப் பார்க்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

MODI EVM FAKE PIC 3.png

நாடாளுமன்றத்தில், மோடி அஞ்சலி செலுத்திய படத்தில், சாவர்க்கர் படத்தை எடுத்துவிட்டு, அந்த இடத்தில் வாக்குப்பதிவு இயந்திரத்தை வைத்து மார்ஃபிங் செய்துள்ளது தெரிந்தது.

நாம் மேற்கொண்ட ஆய்வில், வாக்குப்பதிவு இயந்திரத்துக்கு மோடி அஞ்சலி செலுத்தியதாக சமூக ஊடகங்களில் பரவும் படம் போலியானது என்று தெரிந்தது. இதன் மூலம், மேற்கண்ட பதிவு பொய்யானது, தவறான விஷமப் பிரசாரம் என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:வாக்குப்பதிவு இயந்திரத்துக்கு மரியாதை செலுத்தும் மோடி: புகைப்படம் உண்மையா?

Fact Check By: Praveen Kumar

Result: False