FactCheck: காயமடைந்தது போல மேக்அப்; பாலஸ்தீனியர்கள் உலக நாடுகளை ஏமாற்றுகிறார்களா?

அரசியல் இந்தியா சமூக ஊடகம்

‘’மேக்அப் போட்டு உலகை ஏமாற்றும் பாலஸ்தீனியர்கள்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வரும் வீடியோ ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்: 

Twitter Claim LinkArchived Link

இந்த வீடியோ லிங்கை வாசகர்கள், +91 9049053770 என்ற நமது வாட்ஸ்ஆப் சாட்போட் எண்ணிற்கு அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டு வருகின்றனர்.

இதன்பேரில், நாமும் ஆய்வு செய்ய தொடங்கினோம்.

உண்மை அறிவோம்:
குறிப்பிட்ட வீடியோவை முழுமையாக நாம் பார்வையிட்டபோது, ரத்தக்காயங்கள் ஏற்படுவது போல, குண்டுவெடிப்பு நிகழ்வதைப் போல, நிறைய பேருக்கு (சிறுவர் முதல் பெரியவர்கள் வரை) மேக்அப் செய்கிறார்கள். அவர்கள் அனைவரும் தொழில் முறை கலைஞர்கள் போல பார்க்க இருக்கிறார்கள். ஆனால், இவர்கள் இப்படி மேக்அப் போட்டு, இஸ்ரேல் குண்டுவீசி தாக்கியதால் காயம் ஏற்பட்டதாகக் கூறி உலகை ஏமாற்ற , இந்த நாடகம் ஆடுவதாக, வீடியோவை பகிர்ந்தவர் கூறியிருக்கிறார்.

வீடியோவின் பின்னணியில், ஒரு ஊடக லோகோ போன்ற ஒன்றை காண முடிகிறது. அது என்னவென்று பார்த்தபோது, Gaza Post என தெரியவந்தது.

எனவே, Gaza Post ஊடகத்தின் யூடியுப் பக்கம் சென்று வித விதமான கீவேர்ட் பயன்படுத்தி தகவல் தேடினோம். அப்போது, கடந்த 2017ம் ஆண்டில் , அவர்கள் வெளியிட்ட ஒரு வீடியோ லிங்க் காணக் கிடைத்தது.

இந்த வீடியோவில், நாம் ஆய்வு செய்யும் கிளெய்ம் வீடியோவில் இருக்கும் காட்சிகள் அப்படியே உள்ளதைக் காண முடிந்தது. வீடியோவின் தலைப்பில், காஸா பகுதியில் சினிமா கலை பயன்படுத்தப்படும் விதம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இது சினிமா படப்பிடிப்புத் தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோ என்றும், அதனைச் சிலர் எடிட் செய்து, தற்போதைய இஸ்ரேல் – காஸா மோதலுடன் தொடர்புபடுத்தி தகவல் பகிர்கின்றனர் என்றும் தெளிவாகிறது.

இதேபோல, மற்றொரு வீடியோவும் பகிரப்பட்டு வருகிறது. அதுவும், 2017ல் வெளியிடப்பட்ட, பாலஸ்தீன சினிமா உலகம் மற்றும் மேக்அப் தொடர்பான செய்தித்தொகுப்பாகும். அந்த லிங்கையும் கீழே இணைத்துள்ளோம்.

எனவே, பாலஸ்தீன சினிமா உலகம் தொடர்பான செய்தித் தொகுப்பு வீடியோக்களை எடுத்து, தற்போது நடைபெறும் இஸ்ரேல் – காஸா மோதலுடன் தொடர்புபடுத்தி, வதந்தி பரப்பி வருகிறார்கள் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:காயமடைந்தது போல மேக்அப்; பாலஸ்தீனியர்கள் உலக நாடுகளை ஏமாற்றுகிறார்களா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •