
டெல்லியில் மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 36 தொகுதிகளில் 2000-ம் வாக்குகளுக்கு குறைவான வித்தியாசத்திலேயே பா.ஜ.க தோல்வியை தழுவியது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link |
அமித்ஷா, மோடி, அத்வானி படத்துடன் கூடிய பதிவு வெளியிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இலவசங்களைத் தவிர்த்து, பா.ஜ.கவுக்கு வாக்களித்த டெல்லியின் 40% வாக்காளர்களுக்கு மிக்க நன்றி.
தில்லி: பிஜேபி தோல்வியடைந்த ஓட்டு வித்தியாசம்..
100 ஓட்டு 8 தொகுதிகள்.
1000 ஓட்டு 19 தொகுதிகள்.
2000 ஓட்டு 9 தொகுதிகள்” என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த பதிவை, இந்தியாவே என் சுவாசம் என்ற ஃபேஸ்புக் பக்கம் 2020 பிப்ரவரி 12ம் தேதி வெளியிட்டுள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
இந்த பதிவில் இரண்டு விஷயங்களைக் குறிப்பிட்டுள்ளனர். டெல்லி பா.ஜ.க இலவசத் திட்டங்களை அறிவிக்கவில்லை என்பது முதலாவது, இரண்டாவது 36 இடங்களில் அதாவது கிட்டத்தட்டப் பெரும்பான்மைக்குத் தேவையான அளவுக்கு தொகுதிகளில் பா.ஜ.க 2000ம் வாக்குகளுக்கு குறைவான வாக்கு வித்தியாசத்திலேயே தோல்வி அடைந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர்.
இலவச திட்டங்களால் தமிழகம் சீரழிந்துவிட்டது என்று தொடர்ந்து பிரசாரம் செய்துவரும் பா.ஜ.க, டெல்லியில் பல இலவச திட்டங்களை செயல்படுத்த உள்ளதாக தேர்தல் அறிக்கையில் வெளியிட்டதாக செய்திகள் வெளியாகி இருந்தது. அந்த செய்தியைத் தேடி எடுத்தோம்.

dailythanthi.com | Archived Link |
2020 ஜனவரி 31ம் தேதி வெளியான தினத்தந்தி செய்தியில், “டெல்லியில் பா.ஜனதா ஆட்சியைப் பிடித்தால், ஏழைகளுக்கு கிலோ 2 ரூபாய்க்கு நல்ல தரமான கோதுமை மாவு வழங்கப்படும்.
கல்லூரி மாணவிகளுக்கு மின்சார ஸ்கூட்டர்கள், 9-ம் வகுப்பு மாணவிகளுக்கு சைக்கிள்கள் வழங்கப்படும். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 58 வயதுவரை வேலை உத்தரவாதம் அளிக்கப்படும்.
மத்திய அரசின் ‘ஜல ஜீவன் மிஷன்’திட்டத்தை போன்று, டெல்லியில் ஒவ்வொரு வீட்டுக்கும் சுத்தமான குடிநீர் வினியோகம் செய்யப்படும்.
டெல்லியில், ஆயுஷ்மான் பாரத் எனப்படும் மருத்துவ காப்பீட்டு திட்டம், விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் ‘கிசான் சம்மான் நிதி’திட்டம் ஆகியவை செயல்படுத்தப்படும். வேலையில்லாத 10 ஆயிரம் பேருக்கு வேலை வழங்கப்படும். காலி பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்படும்.
10 புதிய கல்லூரிகளும், 200 புதிய பள்ளிகளும் தொடங்கப்படும். டெல்லி மாநில அரசின் இலவச திட்டங்கள் நீடிக்கும். அவற்றில் கூடுதல் தரத்தை சேர்ப்போம் என்று அதில் கூறப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டிருந்தனர். இதன் மூலம் இலவச திட்டங்கள் எதையும் பா.ஜ.க அறிவிக்கவில்லை என்ற தகவல் தவறானது என்று உறுதியானது.
அடுத்து 36 தொகுதிகளில் பா.ஜ.க 2000-க்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததா என்று ஆய்வு செய்தோம். இதற்காக தேர்தல் ஆணையம் வெளியிட்ட முடிவுகளை ஆய்வு செய்தோம். மொத்தம் உள்ள 70 தொகுதிகளுக்கு மொத்தம் 7 பக்கங்களில் முடிவுகள் வெளியாகி இருந்தது. அவற்றில் மூன்றே மூன்று தொகுதிகளில்தான் வாக்கு வித்தியாசம் 2000-க்கும் கீழ் இருந்தது.

results.eci.gov.in | Archived Link 1 | Archived Link 2 |
ஆதர்ஷ் நகர் தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளர் பா.ஜ.க வேட்பாளரை 1589 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தார். பிஜ்வாசான் தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளர் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளரை 753 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தார். லக்ஷ்மி நகர் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் ஆம் ஆத்மி வேட்பாளரை 880 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தார். மற்றபடி பல தொகுதிகளில் 10 ஆயிரம், 20 ஆயிரம், 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் கூட ஆம் ஆத்மி வேட்பாளர்கள் வெற்றி பெற்றிருந்தது தெரிந்தது.

இந்த பதிவில், பா.ஜ.க 40 சதவிகித வாக்குகளை பெற்றிருந்தது என்று குறிப்பிட்டிருந்தனர். அது உண்மையா என்று தேர்தல் ஆணைய பக்கத்தில் பார்த்தோம். அப்போது பா.ஜ.க 38.5 சதவிகித வாக்குகளை வாங்கியிருப்பது தெரிந்தது.

நம்முடைய ஆய்வில்,
டெல்லி சட்டமன்ற தேர்தலில் இலவச திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று பா.ஜ.க அறிவிப்பு வெளியிட்டது தெரியவந்துள்ளது.
மூன்று தொகுதிகளில் மட்டுமே வாக்கு எண்ணிக்கை வித்தியாசம் 2000-க்கு கீழ் இருந்தது தெரியவந்துள்ளது.
அதிலும், இரண்டு தொகுதிகளில் மட்டுமே பா.ஜ.க 2000ம் வாக்குகளுக்கு கீழ் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியுள்ளது தெரியவந்துள்ளது.
டெல்லி சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க 40 சதவிகித வாக்குகள் இல்லை, 38.5 சதவிகித வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், டெல்லி சட்டமன்ற தேர்தலில் 36 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி 2000-க்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது என்று வெளியான பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:டெல்லியில் 36 இடங்களில் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க தோல்வியைத் தழுவியதா?
Fact Check By: Chendur PandianResult: False
