தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் கட்டிய கழிப்பறை இதுவா?

அரசியல் பாஜக

‘’தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் பிரதமர் மோடி கட்டிய கழிப்பறை,’’ எனும் தலைப்பில் வைரலாக பகிரப்படும் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொள்ள தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Claim LinkArchived Link

Selvakumar Adithiyan

என்பவர் இந்த பதிவை பிப்ரவரி 16, 2020 அன்று பகிர்ந்துள்ளார். இதில், டாய்லெட் பீங்கான்கள் திறந்தவெளியில் பதித்திருப்பதை போன்ற ஒரு புகைப்படத்தை இணைத்து, அதன் மேலே, ‘’ திரு பாரத பிரதமர் மோடியால் ரூபாய் 540 கோடி செலவில் கட்டப்பட்ட 4.5 இலட்சம் கழிப்பறை வாழ்க மோடி வாழ்க தூய்மை இந்தியா வாழ்க சங்கிகள் .. டிஜிடல் இந்தியா மேக்கின் இந்தியா தூய்மை இந்தியா மொத்தமா டீக்கடைகாரனிடம் யாமாந்தியா..,’’ என்று எழுதியுள்ளார்.

இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
மேற்கண்ட புகைப்படத்தை நன்கு கவனித்தால் அது இந்தியாவை சேர்ந்தது அல்ல என்று தெரியவருகிறது. ஆம், அதில் நிற்கும் மனிதர்கள் மத்திய கிழக்காசியா அல்லது ஆப்ரிக்க நாட்டினர் போலவும், இந்த இடம் எதோ ஒரு முகாமில் தற்காலிக ஏற்பாடாக நிறுவப்பட்ட பொது கழிப்பிடம் போலவும் தோன்றுகிறது.  

இருந்தாலும் நமது சந்தேகத்தை மேலும் உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த புகைப்படம் பற்றி விரிவான தகவல்களை தேடினோம். நீண்ட நேரம் தேடியும் எந்த விவரம் கிடைக்கவில்லை. இதையடுத்து, Yandex இணையதளத்தில் இந்த புகைப்படத்தை பதிவேற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். அப்போது இது ஏமன் நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் என தெரியவந்தது. 

Twitter LinkArchived Link

இதன்படி, அக்டோபர் 22, 2019 அன்று மேற்கண்ட ட்விட்டர் பதிவு வெளியிடப்பட்டுள்ளது. இதனை பகிர்ந்தவர் மத்திய கிழக்காசிய நாடுகளில் ஒளிபரப்பாகும் @eha_medya ஊடகத்தில் பணிபுரிபவர் ஆவார். ஊடகத்தில் பணிபுரிபவர் என்பதால் அவர் கண்டிப்பாக, அந்த பிராந்தியத்தில் நடைபெறும் செய்தியைத்தான் பகிர்ந்திருப்பார் என தெளிவாகிறது.

இந்த ட்விட்டர் பதிவில் உள்ள தகவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து பார்த்தோம். அப்போது, ‘’செஞ்சிலுவை சங்கத்துடன் இணைந்து, அரபு நாடுகளில் சமூக தொண்டுப் பணிகளை ஐக்கிய அரபு அமீரகத்திற்குச் சொந்தமான UAE Red Crescent மேற்கொண்டு வருகிறது. இந்த அமைப்பு ஏமன் நாட்டிற்கு செய்துவந்த மனிதாபிமான உதவிகளை நிறுத்திக் கொள்வதுடன், அங்கு நிறுவியிருந்த பொது கழிப்பிடங்கள் உள்ளிட்டவற்றை திருப்பி எடுத்துச் செல்வதாக,’’ அர்த்தம் கிடைத்தது.  

ஐக்கிய அரபு அமீரக அரசின் இந்த செயலுக்கு ஏமனும் வருத்தம் தெரிவித்துள்ளது. சர்வதேச அளவில் மனிதாபிமான உதவியை எதிர்பார்ப்பதாக ஏமன் தரப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதுபற்றி 2018ம் ஆண்டில் வெளியான செய்தி ஒன்றை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நமக்கு தெரியவந்த உண்மையின் விவரம்,

1) கடந்த 2018, 2019 ஆண்டுகளில் ஏமன் நாட்டில் நிறுவியிருந்த பொது கழிப்பிடங்கள் உள்ளிட்ட தொண்டுப் பணிகளை ஐக்கிய அரபு அமீரகம் திரும்பப் பெற்றுள்ளது. இதுபற்றிய அதிகாரப்பூர்வ செய்தி அறிவிக்கையை ஊடகவியலாளர் ஒருவர் ட்விட்டரில் பகிர்ந்திருக்கிறார்.
2) மேற்கண்ட நடவடிக்கைகளின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை, இந்திய அரசியலுடன் இணைத்து தவறான வதந்தியை பரப்பியுள்ளனர்.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவில் தவறான தகவல் உள்ளதாக நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். 

Avatar

Title:தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் கட்டிய கழிப்பறை இதுவா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False