தமிழ் மொழியில் கனடா தேசிய கீதம்: ஃபேஸ்புக் பதிவு உண்மையா?

சமூக ஊடகம் | Social சர்வதேசம் | International

“ஜூன் 1ம் தேதி கனடாவின் 150வது சுதந்திரதினத்தையொட்டி தமிழில் கனடா தேசிய கீதம் பாடப்பட்டுள்ளது” என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இன்று (june 1 st) தமிழுக்கு பெருமை.

கனடாவிற்கு நன்றி

CANADA 2.png

Archived link

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ படத்துடன் ஒரு பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில், “கனடாவின் 150வது சுதந்திர தினத்தையொட்டி முதன் முறையாக கனடாவின் தேசியகீதம் தமிழ் மொழியில் பாடப்பட்டுள்ளது. 4 லட்சம் தமிழர்கள் மட்டுமே வாழுமிடம். தயவு செய்து எல்லோருக்கும் பகிருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளனர்.

நிலைத் தகவலில், “இன்று ஜூன் 1, தமிழுக்கு பெருமை. கனடாவுக்கு நன்றி” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த தகவலை, Chitra Chitra என்பவர் சிரிப்பு மழை என்ற ஃபேஸ்புக் குழு பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதை ஏராளமானோர் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

கனடாவில் அதிகம் பேசப்படும் மொழிகளில் ஒன்றாக தமிழ் உள்ளது. தமிழர்களை கவுரவிக்கும் பொங்கல் பண்டிகையை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கொண்டாடினார். அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் தமிழ் பாரம்பரிய மாதமாக கொண்டாடப்படும் என்று அவர் அறிவித்தார். இதனால், ஜஸ்டின் ட்ரூடோவை உலகத் தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் படத்தை வைத்துப் பல உண்மை, பொய்யான தகவல் பரவி வருகிறது. இதனால், இந்த செய்தியில் உண்மை உள்ளதா என்று ஆய்வு மேற்கொண்டோம்.

மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு, 2019 ஜூன் 1ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. அதில், இன்று (ஜூன் 1) கனடாவின் 150வது சுதந்திர தினம் என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவுக்கு பலரும் ஆதாரம் கேட்டிருந்தனர். அதற்கு Chitra Chitra மிக நீண்ட விளக்கம் கொடுத்துள்ளார். அதில், வருகிற ஜூலை 1ம் தேதி என்று குறிப்பிட்டுள்ளார். இணையத்தில் வெளியான செய்தியை காப்பி செய்து கொடுத்ததுபோல உள்ளது. தன்னுடைய நிலைத் தகவலில், ஜூன் 1ம் தேதி என்று குறிப்பிட்டுள்ளார், கமெண்ட் பகுதியில் ஜூலை 1 என்று குறிப்பிட்டுள்ளார்.

முதலில் இந்த ஆண்டு ஜூன் 1ம் தேதி கனடாவின் சுதந்திர தினமா என்று ஆய்வு செய்தோம். அப்போது, கனடாவின் சுதந்திர தினம் ஜூன் 1 இல்லை, ஜூலை 1 என்பது தெரிந்தது. மேலும், கனடா தனது 150வது சுதந்திர தினத்தை 2017ம் ஆண்டு கொண்டாடியுள்ளது. இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

அடுத்ததாக, கனடாவின் 150வது சுதந்திர தினத்தையொட்டி தமிழில் கனடா தேசியகீதம் பாடப்பட்டதா என்று கூகுளில் தேடினோம். அப்போது, அது தொடர்பான பல தகவல் நமக்கு கிடைத்தன.

CANADA 3.png

கனடாவில் ஆங்கிலம், பிரெஞ்சு மொழிகளில் மட்டும் தேசிய கீதம் இசைக்கப்பட்டு வந்தது. 150வது ஆண்டு சுதந்திர தினத்தையொட்டி ஆங்கிலம், பிரெஞ்சு, தமிழ், பஞ்சாபி, சைகை மொழி உள்பட 12 மொழிகளில் கனடா தேசிய கீதம் வெளியிடப்பட்டுள்ளது. இதை சுதந்திர தினத்துக்கு முன்பு வெளியிட்டது.

இது தொடர்பான தினத்தந்தி செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

ஐ.இ தமிழில் வெளியான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

நாம் மேற்கொண்ட ஆய்வில், கனடாவின் 150வது சுதந்திரதினத்தையொட்டி தமிழ் உள்ளிட்ட 12 மொழிகளில் கனடா தேசிய கீதம் பாடப்பட்டது உண்மை என்பது உறுதியாகிறது. அதே நேரத்தில், கனடாவின் 150வது சுதந்திர தினம் 2017ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி கொண்டாடப்பட்டது. மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் 2019 ஜூன் 1ம் தேதி என்று குறிப்பிட்டுள்ளது தவறான தகவல். இதன் மூலம் உண்மையும் தவறான தகவலும் இணைத்து இந்த பதிவிடப்பட்டுள்ளது உறுதியாகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு உண்மையுடன் தவறான தகவலும் சேர்த்து வழங்கப்பட்டுள்ளது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:தமிழ் மொழியில் கனடா தேசிய கீதம்: ஃபேஸ்புக் பதிவு உண்மையா?

Fact Check By: Praveen Kumar 

Result: Mixture