
படேல் சிலையை அமைக்க ரூ.3000 கோடியை பிரதமர் மோடி சீனாவுக்கு வழங்கியதாகவும், அந்த பணத்தைக் கொண்டு சீனா கடலில் மிகநீண்ட மேம்பாலம் கட்டிவிட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link |
குஜராத்தில் அமைக்கப்பட்டுள்ள படேல் சிலை, இந்திய பிரதமர் மோடி, சீன அதிபர் மற்றும் பாலம் ஒன்றின் புகைப்படம் கொலாஜ் செய்து பகிரப்பட்டுள்ளது. Tp Jayaraman என்பவர் வெளியிட்டிருந்த பதிவை ஸ்கிரீன்ஷாட் எடுத்து வெளியிட்டுள்ளனர்.
அதில், “உலகத்திலேயே உயரமான சிலையை நரேந்திர மோடி சீனாக்காரனை வச்சு கட்டினார். இந்த சிலைக்கு விலையாக சீனா பிரதமர் கிட்டே நரேந்திர மோடி 3000 கோடி கொடுத்தாரு. சீன பிரதம மந்திரி அந்த பணத்தை வச்சி தன்னுடைய நாட்டில உலகத்திலேயே நீளமான பாலத்தை கட்டிட்டாரு.மோடி அரசு இது போல செய்துவரும் உருப்படி இல்லாத செலவுகளால் இந்திய பொருளாதாரம் சரிந்து கொண்டே போகிறது. பயனுள்ள மக்கள் திட்டங்களை நிறைவேற்றும் சீனாவின் பொருளாதாரம் வளர்ந்து கொண்டே போகிறது இந்திய மக்களே இந்த ரெண்டு பேரில் உங்களுக்கு எந்த மாதிரி பிரதமர் வேணும்னு இதை வச்சு நீங்கதான் முடிவு செய்யணும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நிலைத் தகவலில், “அறிவுள்ள புத்திசாலிக்கும், அறிவில்லாத முட்டாளுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை, Ramu Raj என்பவர் 2019 நவம்பர் 2ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
குஜராத் மாநிலம் நர்மதை ஆற்றின் சர்தார் சரோவர் அணைப் பகுதியில் ஒற்றுமையின் சிலை என்று அழைக்கப்படும் சர்தார் படேல் சிலை அமைக்கப்பட்டுள்ளது. மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது இதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. அவர் பிரதமரான பிறகு இந்த சிலை திறக்கப்பட்டது.
இந்த சிலையை இந்தியாவின் எல் அண்ட் டி மற்றும் சர்தார் சரோவர் நர்மதா நிகாம் லிமிடெட் கட்டின. அதேசமயம், அமெரிக்காவைச் சேர்ந்த Turner Construction , Michael Graves and Associates மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த Meinhardt ஆகிய நிறுவனங்களின் கூட்டமைப்பு இந்த சிலை நிறுவும் பணிகளை மேற்பார்வையிட்டது. சீனாவைச் சேர்ந்த Jiangxi Toqine Metal Crafts Corporation LTD நிறுவனம் சர்தார் படேல் சிலைக்கான தாமிர தகடுகளை நிறுத்தும் பணிகளை செய்தது. இது தொடர்பாக நம்முடைய FactCrescendo Tamil பிரிவில் வெளியான கட்டுரையைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.
இப்படி இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், சீனா என்று பலநாட்டு நிறுவனங்கள் இணைந்து இந்த சிலை உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வெளிப்புற தகடு அமைக்கும் பணியை சீனா நிறுவனம் செய்துள்ளது. அப்படி இருக்கும்போது, முழுக்க முழுக்க இந்த நிறுவனத்தை சீனா கட்டிக்கொடுத்தது போல பதிவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக தேடியபோது, கட்டுமானத்தை மேற்கொண்ட நிறுவனங்களின் பட்டியல் நமக்கு கிடைத்தன. மேலும், ரூ.3000 கோடி செலவில் இந்த பணிகள் நடந்துள்ளது என்று தெரிந்தது. இதன் அடிப்படையில், 3000 கோடி ரூபாயும் சீனாவுக்கு அளிக்கப்பட்டது என்ற தகவல் தவறானது என்று உறுதியானது.

statueofunity.guide | Archived Link |
இரண்டாவதாக, சீனாவில் கட்டப்பட்ட பாலம் என்று குறிப்பிடப்பட்டுள்ள படத்தைப் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். படத்தை மட்டும் தனியாக காப்பி செய்து, கூகுள் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, சீனாவில் உள்ள உலகின் மிக நீளமான பாலம் என்று கூறப்படும் ஜியாசூ விரிகுடா பாலம் என்று காட்டியது.

Search Link |
இந்த பாலத்தை எப்போது கட்டினார்கள் என்று ஆய்வு மேற்கொண்டோம். 2007ம் ஆண்டு கட்டுமானப் பணிகள் தொடங்கியது என்றும் 2011ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி இதில் வாகனப் போக்குவரத்து தொடங்கியது என்றும் தெரிந்தது. அதாவது, சர்தார் படேல் சிலை கட்ட அடிக்கல் நாட்டப்படுவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே பணிகள் முடிந்து வாகன போக்குவரத்து தொடங்கியது தெரிந்தது.

வேறு ஏதாவது மிகப் பெரிய பாலங்கள் கட்டப்பட்டுள்ளதா என்று தேடினோம். அப்போது, ஹாங்காய் – சீனா இடையேயான பாலம் ஒன்று பற்றித் தெரிந்தது. ஆனால், இதுவும் 1980களில் ஆரம்பித்து பின்னர் தடைப்பட்டு நின்றதும் பின்னர், 2009ல் தொடங்கி 2018ல் முடிக்கப்பட்டது தெரிந்தது. அதாவது கட்டுமானம் சிலை அமைக்க திட்டமிடப்படுவதற்கு முன்பே தொடங்கிவிட்டது. இவற்றின் பட்ஜெட் எல்லாம் மலைக்க வைக்கும் வகையில் இருந்தன.
ஒவ்வொன்றும் 10 ஆயிரம், 12 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டது தெரிந்தது. சர்தார் படேல் சிலைக்கு ஆன செலவை முழுவதும் கொடுத்திருந்தாலும் கூட இந்த சீன பாலங்களின் கால்வாசி வேலையைக் கூட முடித்திருக்க முடியாது என்பது தெரிந்தது. இதன் மூலம், இந்த தகவல் தவறானது என்று தெரிந்தது.
நம்முடைய ஆய்வில்,
சர்தார் படேல் சிலையை இந்திய நிறுவனம் கட்டியதும். சீனா, அமெரிக்கா உள்ளிட்ட பல வெளிநாட்டு நிறுவனங்களும் இதில் ஈடுபட்டதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம், படேல் சிலை அமைக்க ஆன செலவு ரூ.3000 கோடி சீனாவுக்கு அளிக்கப்பட்டது என்ற தகவல் தவறானது என்று உறுதியாகியுள்ளது.
சீனாவில் கட்டப்பட்ட பாலங்கள், படேல் சிலை கட்டப்படுவதற்கு முன்பே கட்டப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீன பாலங்கள் கட்ட ஆன செலவு என்பது, படேல் சிலை செலவைக் காட்டிலும் பல மடங்கு அதிகம் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், சர்தார் படேல் சிலையை அமைக்க சீனாவுக்கு மோடி ரூ.3000 கோடி கொடுத்தார் என்பதும், அந்த பணத்தைக் கொண்டு சீனாவில் பாலம் கட்டப்பட்டது என்ற தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:இந்தியா கொடுத்த ரூ.3000 கோடியில் சீனா கட்டிய பாலம்: ஃபேஸ்புக் பதிவு உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False
