சர்தார் படேல் சிலையை நிறுவியது சீன நிறுவனமா?

சமூக வலைதளம்

‘’சீனா காரனுக்கு 3000 கோடி கொடுத்து படேல் சிலை செய்வோம்,’’ என தலைப்பிடப்பட்ட ஒரு செய்தியை ஃபேஸ்புக்கில் காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை நடத்த தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Link I Archived Link

தமிழ் பசங்க 3.0 என்ற ஃபேஸ்புக் ஐடி, இந்த பதிவை ஆகஸ்ட் 26, 2019 அன்று வெளியிட்டுள்ளது. இதில், சீனப் பொருட்களை புறக்கணிப்போம் என்று நாராயணன் (பாஜக) சொன்னதாகவும், ஆனால், சீனாகாரனுக்கு 3000 கோடி குடுத்து சிலை செய்வோம் எனவும் கூறி பதிவிட்டுள்ளனர். இதனை பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

பாஜக உறுப்பினராக உள்ள நாராயணன், அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவிப்பது வழக்கம். இதன்படி சமீபத்தில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களை தவிர்ப்போம் எனக் கூறியிருந்தார்.

இதையடுத்தே மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு வெளியிடப்பட்டுள்ளது. உண்மையில், இவர்கள் சொல்வது போல, குஜராத்தில் பிரமாண்டமாக நிறுவப்பட்ட சர்தார் படேல் சிலையை செய்தது சீன நிறுவனமா என்ற சந்தேகத்தில் தகவல் ஆதாரம் தேடினோம்.

அப்போது இதில் முழு உண்மை இல்லை என தெரியவந்தது. ஆம். Statue Of Unity என்றழைக்கப்படும் சர்தார் படேல் சிலை, குஜராத் மாநிலம் கேவடியாவில் உள்ள சர்தார் சரோவர் அணையை ஒட்டி நிறுவப்பட்டுள்ளது. உலகிலேயே மிகப்பெரிய சிலை என கருதப்படும் இதனை நிறுவும் பணிகள் சிற்ப வடிவமைப்பாளர் ராம் வி சுதர் தலைமையில் கடந்த 2013ம் ஆண்டில் தொடங்கியது.

இந்த பணியில், இந்தியா, அமெரிக்கா, சீனா மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த நிறுவனங்கள் ஈடுபட்டன. இதன்படி, சிலையில் வடிவமைப்பு, கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பணிகளை இந்தியாவை சேர்ந்த லார்சண் அண்ட் ட்யூப்ரோ (எல் அண்ட் டி) பெற்றது. அதேசமயம், அமெரிக்காவைச் சேர்ந்த Turner Construction , Michael Graves and Associates மற்றும் இங்கிலாந்தை சேர்ந்த Meinhardt ஆகிய நிறுவனங்களின் கூட்டமைப்பு இந்த சிலை நிறுவும் பணிகளை மேற்பார்வையிட்டது.

இறுதியாக, சீனாவைச் சேர்ந்த Jiangxi Toqine Metal Crafts Corporation LTD நிறுவனம் சர்தார் படேல் சிலைக்கான தாமிர தகடுகளை நிறுத்தும் பணிகளை செய்தது.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் பார்த்தால், சர்தார் படேல் சிலையை நிறுவியதற்கான உரிமை எல் அண்ட் டி நிறுவனத்திற்கே பொருந்தும். சீன நிறுவனம் இதில் தாமிர தகடுகள் பொருத்துவதற்கான உரிமம் மட்டுமே பெற்றிருந்துள்ளது.

எனவே, மேற்கண்ட ஃபேஸ்புக் செய்தியில் பாதி உண்மை, பாதி தவறான தகவல் உள்ளதாக, உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:
இதுவரை கிடைத்த ஆதாரங்களின்படி, நாம் ஆய்வு மேற்கொண்ட செய்தி தவறானது என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோ ஆகியவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:சர்தார் படேல் சிலையை நிறுவியது சீன நிறுவனமா?

Fact Check By: Pankaj Iyer 

Result: Mixture

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •