பள்ளி மாணவிகளின் முடியை வெட்டிய பாதிரியர்கள்: ஃபேஸ்புக் வீடியோ உண்மையா?

அரசியல் சமூக ஊடகம்

பள்ளி மாணவிகளின் தலைமுடியை பாதிரியர்கள் வெட்டுவதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Hair cut 2.png
Facebook LinkArchived Link 1Archived Link 2

38 விநாடிகள் ஓடக்கூடிய வீடியோ ஒன்றைப் பதிவேற்றம் செய்துள்ளனர். அதில், கிறிஸ்தவ பாதிரியார் உள்ளிட்டவர்கள் மேடையில் நிற்பது போல உள்ளது. அப்போது பள்ளி மாணவி ஒருவர் அவர்கள் முன்பு வந்து நிற்கிறார். அவரது தலைமுடியை ஒருவர் வெட்டுகிறார். அந்த மாணவி உள்பட எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். மிக நீளமான கூந்தல் பாதியாக கத்தரிக்கப்பட்டதும் எல்லோரும் கைத்தட்டி வாழ்த்துகின்றனர். வெட்டப்பட்ட முடியடன் அந்த மாணவி போஸ் கொடுக்கிறார். பிறகு, மற்றொரு மாணவி முடி வெட்டிக்கொள்ள வருகிறார். 

இந்த வீடியோ எங்கே, எப்போது, எதற்காக எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை. நிலைத் தகவலில், “குதிக்கின்றவர்கள், குரல் கொடுக்கின்றவர்கள் எல்லாம் எங்கே போனீர்கள்? இது ஒரு பாதிரியார் செய்கின்ற வேலையா இது?

பள்ளிக்கு சென்ற பெண் பிள்ளைகளின் தலை முடியை வெட்டுவதற்கு இந்த *** யார் உரிமை கொடுத்தது? மாணவியின் முடியை வெட்டிவிட்டு கைத்தட்டி ரசிக்கும் இந்த காட்டுமிராண்டிகளை *** அடிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்த பதிவை, Thiru Brahmma என்பவர் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் 2019 அக்டோபர் 1ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

வீடியோவில் மாணவிகளை கட்டாயப்படுத்தியோ, மிரட்டியோ கூந்தல் வெட்டப்படுவதாக காட்டப்படவில்லை. புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கீமோதெரப்பி சிகிச்சை அளிக்கப்படும். அப்போது, அதிக ஆற்றல்கொண்ட மருந்து காரணமாக உடலில் உள்ள முடி கொட்டிவிடும். இதனால், சிகிச்சை எடுத்துக்கொள்ளும் பெண்கள் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர்.

புற்றுநோய்க்கு சிகிச்சை பெறும் பெண்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் முடிதானம் என்பது பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. பெண்கள் தங்களின் முடியை தானமாக வழங்கினால், அதைக் கொண்டு விக் தயாரித்து புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வழங்கப்படும். அந்த வகையில் தமிழகத்தில் பல கல்லூரிகளில் மாணவிகள் தங்கள் கூந்தலை தானமாக வழங்கி வருகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை பெண்கள் கிறிஸ்தவ கல்லூரியில் மாணவிகள் இப்படி தானம் வழங்கினர். அதைத் தொடர்ந்து தமிழகத்தில் பல இடங்களில் தலைமுடி தானம் நடந்துவருகிறது.

Archived Link

இந்த வீடியோவும் கூட தலைமுடி தானம் போலவே உள்ளது. அதை உறுதி செய்ய, இந்த வீடியோவின் காட்சிகளை புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். ஆனால், நமக்கு இந்த வீடியோ பற்றிய தகவல் கிடைக்கவில்லை. அதேநேரத்தில், சென்னை, கோவையில் கல்லூரி மாணவிகள் தங்கள் கூந்தலை தானமாக வழங்கியது தொடர்பான செய்திகள், வீடியோக்கள் கிடைத்தன.

Hair cut 3.png

இந்த வீடியோவில் டிக்டாக் சமூக ஊடகத்தின் லோகோ இருந்தது. மேலும் இந்த வீடியோவை வெளியிட்ட ஐ.டி-யின் பெயரும் இருந்தது. @aneenag என்று டிக்டாக்கில் டைப் செய்து தேடினோம். அந்த ஐ.டி நமக்குக் கிடைத்தது. அதை கிளிக் செய்து பார்த்தபோது, “எங்கள் பள்ளியின் 39 மாணவர்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக தங்கள் கூந்தலை தானம் செய்தனர்” என்று ஒரு வீடியோவுடன் கூடிய பதிவு நமக்கு கிடைத்தது. ஆனால், எந்த பள்ளி என்று தெரியவில்லை. 30 லட்சம் பேர் இந்த வீடியோவைப் பார்த்திருப்பது நமக்குத் தெரிந்தது.

Hair cut 5.png

இந்த வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா என்று தேடினோம். அப்போது, டிக்டாக்கில் இருந்து ஒருவர் ஷேர் செய்திருந்தார். அதில், 39 மாணவிகள் தங்கள் தலைமுடியை தானம் செய்தனர் என்பது மிகவும் தெளிவாக இருந்தது.

Hair cut 4.png
Facebook LinkArchived Link

நம்முடைய ஆய்வில்,

வீடியோவில் வலுக்கட்டாயமாகவோ, மிரட்டியோ முடி வெட்டுவது போல இல்லை. தானம் அளிப்பது போல் உள்ளது தெளிவாகிறது.

aneenag என்ற டிக்டாக் ஐடி-யில் வெளியான அசல் வீடியோ கிடைத்துள்ளது. 

அந்த ஒரிஜினல் வீடியோவில், புற்றுநோயாளிகளுக்காக முடியை தானம் செய்த மாணவிகள் என்று மிகவும் தெளிவாக குறிப்பிட்டுள்ளனர்.

புற்றுநோயாளிகளுக்கு தொடர்ந்து கூந்தல் தானம் நடந்து வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

புற்றுநோயாளிகளுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் பள்ளி மாணவிகள் செய்த தியாகத்தை வேண்டுமென்றே மறைத்து, ஃபேஸ்புக்கில் தவறான தகவலுடன் வீடியோவை வெளியிட்டிருப்பது தெளிவாகிறது. இதன் அடிப்படையில் இந்த ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:பள்ளி மாணவிகளின் முடியை வெட்டிய பாதிரியர்கள்: ஃபேஸ்புக் வீடியோ உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •