சிட்ரால்கா என்ற சிரப் குடித்ததால் தன்னுடைய சிறுநீரக கட்டி மறைந்து விட்டதாக ஒருவர் ஃபேஸ்புக்கில் மிகப்பெரிய பதிவை வெளியிட்டுள்ளார். இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இத்தனை ஆண்டுகளில் நோயில் படுத்தவனில்லை. சிறு அறுவை சிகிச்சை கூட இல்லை. பதினைந்து நாட்களுக்கு முன் அடிவயிற்றில் கடும் வலி! பெங்களூரில் தவிர்க்க முடியாத திருமணங்கள். போய் விட்டேன் வலி அதிகமாயிற்று!

உடனே மருத்துவமனைக்கு சென்று காண்பிக்க ஸ்கேனில் சிறுநீரகக் கட்டி என்று வந்தது. என் மனைவி எத்தனை லட்சம் செலவானாலும் சரி என்று கதற ஆரம்பித்து விட்டாள்... கையமர்த்திய டாக்டர், "முதலில் பதினைந்து நாட்களுக்கு ஒரு மருந்து தருகிறேன் அதில் குணம் தெரியாவிட்டால் அறுவை சிகிச்சை செய்யலாம்" என்றார். அவர் கொடுத்த மருந்து நான்கு நாட்களில் வேலை செய்ய ஆரம்பித்தது. நேற்றோடு வலி போய்விட்டது...

டாக்டர் மீண்டும் ஸ்கேன் எடுத்துப் பார்க்க கட்டியும் போய்விட்டது... எனக்கு ஆச்சரியம்… "உங்களுக்கு குணமாகி விட்டது" என்றார். அவர் கொடுத்த மருந்து #Citralka என்ற 60 ரூபாய் ஸிரப்...

Archived link

சிட்ரால்கா என்ற சிரப் புகைப்படத்துடன் மேற்கண்ட பதிவு பகிரப்பட்டுள்ளது. இதில், டாக்டரின் பெயர், தொலைபேசி எண் அளிக்கப்பட்டு இருந்தது. அதில் அவர் இன்டர்னல் மெடிசின் நிபுணர் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த பதிவை, சேஷன் சேஷாங்கன் என்பவர் 2019 மே 12ம் தேதி வெளியிட்டுள்ளார். அதில், ஃபார்வர்டு மெசேஜ் என்று குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் வேறு யாரோ ஒருவர் வெளியிட்ட பதிவை இவர் புதிதாக பகிர்ந்திருப்பது தெரிந்தது. கார்ப்பரேட் மருத்துவமனைகளில் முறைகேடு நடக்கிறது என்ற வகையில் இந்த பதிவு இருந்ததால், பலரும் இதைப் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

சிட்ரால்கா மருந்தின் தன்மை பற்றி ஆய்வு செய்தோம். யூரிக் அமிலத்தால் ஏற்படக் கூடிய பாதிப்புகளை கட்டுப்படுத்த இந்த சிரப் பயன்படுகிறது. சிறுநீரில் உள்ள அமிலத்தன்மையை இது கட்டுப்படுத்துகிறது என்றும், சிறுநீரகப் பாதை, சிறுநீரக கல் உள்ளவர்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது என்றும் சொல்லப்படுகிறது.

சிட்ரால்கா மருந்து பற்றி சென்னை காவேரி மருத்துவமனையின் மருத்துவ அதிகாரியும் சர்க்கரை நோய் நிபுணருமான டாக்டர் பரணீதரனிடம் பேசினோம். “இந்த மருந்து சிறுநீரகப் பாதை நோய்த் தொற்று, சிறுநீரக கல் பாதிப்பு உள்ளவர்களுக்கு வலி நிவாரணியாக வழங்கப்படும். இது எந்த நோயையும் குணமாக்காது. இந்த மருந்து வெறும் சப்போர்டிவ் மெடிசின்தான்” என்றார்.

Dr Bharaneedharan.png

படம்: டாக்டர் பரணீதரன்

சிறுநீரக கட்டிகள் தொடர்பாக சென்னையின் மூத்த நெஃப்ராலஜி நிபுணர் டாக்டர் சந்திரசேகரனிடம் பேசினோம்.

சிறுநீரகத்தில் சிறு நீர்க்கட்டிகள் தோன்றுவதை ‘பாலிசிஸ்டிக் கிட்னி டிசீஸ்’ என்கின்றனர். இந்தக் கட்டிகள் அளவு ஒன்றுக்கொன்று வேறுபட்டு இருக்கும். நீர் கோத்துக்கொண்டே செல்லும்போது, அது மிகப்பெரிய கட்டியாக மாறவும் வாய்ப்பு உண்டு.

இதில் இரண்டு வகை உள்ளது. 'ஆட்டோசோமல் டாமினன்ட் பாலிசிஸ்டிக் கிட்னி டிசீஸ்’ (Autosomal dominant polycystic kidney disease (ADPKD)) என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். பொதுவாக, 30 முதல் 40 வயதினருக்கு இந்தப் பாதிப்பு ஏற்படுகிறது. பெற்றோரில் ஒருவருக்கு இந்தப் பாதிப்பு இருந்தால், பிறக்கும் குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் இந்த பாதிப்பு வர 50 சதவிகித வாய்ப்பு உள்ளது.

ஆட்டோசோமல் ரெசசிவ் பாலிசிஸ்டிக் கிட்னி டிசீஸ் (Autosomal recessive polycystic kidney disease (ARPKD)) வகையானது, கிட்டத்தட்ட ஏ.டி.பி.கே.டி போல இருந்தாலும், இது பிறந்த சில காலங்களிலேயே வெளிப்படும். சில சமயம் இது டீன் வயதில் வெளிப்படலாம். இதுவும் பெற்றோரிடமிருந்து குழந்தைகளுக்கு மரபணுக்கள் வழியாகக் கடத்தப்படுவதுதான். கட்டி வந்தால் உயர் ரத்த அழுத்தம், சிறுநீரகச் செயலிழப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம். இதுதவிர, சிறுநீரகத்தில் புற்றுநோய் கட்டிகள் கூட ஏற்படலாம். இதில் எந்த வகையான கட்டி இவருக்கு வந்தது என்று தெரியவில்லை.

Dr V Chandrasekaran.png

படம்: டாக்டர் சந்திரசேகரன்

இந்த பதிவு நம்பும்படியாக இல்லை. ஸ்கேன் ரிப்போர்ட் பார்த்தால்தான் எதையும் சொல்ல முடியும். அதேநேரத்தில், இந்த வயதில் பொதுவாக சிறுநீரக புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புதான் அதிகம். சிறுநீரகப் பாதை நோய்த் தொற்றைக் குறைக்கும் டானிக்கை குடித்ததால் நோய்த் தொற்று இருந்தால் அதன் அறிகுறிகள்தான் குறையும். சிறுநீரக கட்டி, சிறுநீரக புற்றுநோய் எல்லாம் கரையாது. அந்த டாக்டருக்கு செய்யும் விளம்பரம் போலவே இந்த பதிவு இருக்கிறது.

கார்ப்பரேட் மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், கிளீனிக்குகள் எல்லாமே தொழில் நிறுவனங்கள்தான். பணம் சம்பாதிக்கும் நோக்குடனே மருத்துவமனைகள் நடத்தப்படுகின்றன என்று டாக்டர்களை மையப்படுத்தியே தொடர்ந்து பல பதிவுகள் வந்துகொண்டே இருக்கின்றன. டாக்டர்களும் மனிதர்கள்தான். வெறும் பணத்துக்காக யாரும் எதையும் செய்வது இல்லை. ஒரு நாளைக்கு 24 மணி நேரமும் வாரத்தின் 7 நாளும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஓய்வு இன்றி பணியாற்றிக்கொண்டிருக்கிறோம். இது போன்று தவறான பதிவுகளைத் தவிர்ப்பது நல்லது” என்றார்.

இது குறித்து ஃபேஸ்புக் பதிவில் உள்ள எண்ணைத் தொடர்புகொண்டு விசாரித்தோம். இது போன்று எந்த ஒரு பதிவையும் நாங்கள் வெளியிடவில்லை. எங்களுக்கும் அந்த பதிவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றனர்.

நாம் மேற்கொண்ட ஆய்வில், சிட்ரால்கா சிரப் எந்த ஒரு சிறுநீரக கட்டியையோ, சிறுநீரக புற்றுநோயையோ கரைக்கும் என்று எந்த ஒரு மருத்துவ ஆய்விலும் கூறப்படவில்லை.

சிட்ரால்கா சிரப்பின் பயன்பாடு என்ன என்று மருத்துவர் விளக்கம் அளித்துள்ளார்.

இந்த பதிவு நம்பும்படி இல்லை என்று மூத்த நெஃப்ராலஜி நிபுணர் தெரிவித்துள்ளர்.

இந்த பதிவுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று டாக்டர் வி.மாதவன் கிளீனிக்கை தொடர்புகொண்டபோது அங்கிருந்தவர்கள் நம்மிடம் கூறினர்.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், சிட்ரால்கா சிரப்பை அருந்தினால் சிறுநீரக கட்டி கரையும் என்ற மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட செய்திகள் தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:சிட்ரால்கா குடித்ததால் சிறுநீரகக் கட்டி மறைந்துவிட்டது! – வைரல் ஃபேஸ்புக் பதிவு உண்மையா?

Fact Check By: Praveen Kumar

Result: False