வாக்குப் பதிவு பெட்டி இருந்த மையத்துக்கு சென்ற தாசில்தார் – எதிர்க்கட்சிகள் புகார் உண்மையா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social

மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் பதிவான வாக்குகள் வைக்கப்பட்டுள்ள மதுரை மருத்துவக் கல்லூரிக்கு தாசில்தார் சென்றது தொடர்பாகவும் இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தி.மு.க உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தமிழக தலைமைத் தேர்தல் அலுவலரை சந்தித்து புகார் மனு அளித்ததாகவும் கூறி ஃபேஸ்புக்கில் பதிவுகள் வைரலாகி வருகின்றன. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

மதுரை நாடாளுமன்றத் தொகுதி மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் வைத்திருக்கும் மையத்திற்குள் அத்துமீறி நுழைவு

Archived link

மதுரை நாடாளுமன்ற தொகுதியில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள மையத்துக்கு பெண் தாசில்தார் ஒருவர் சென்றுள்ளார். இதுதொடர்பாக, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி புகைப்படம் மற்றும் செய்தியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதில், அறிக்கை நகல் இணைக்கப்படாமல், அறிக்கையில் உள்ளவை வார்த்தையாக கொடுக்கப்பட்டிருந்தது. இதை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

மதுரை நாடாளுமன்ற தொகுதியில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு பெட்டிகள், மதுரை மருத்துவக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை, சம்பூரணம் என்ற தாசில்தார், வாக்குப்பெட்டி வைக்கப்பட்டுள்ள மையத்துக்கு வந்தார். அங்கு, வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு அருகில் உள்ள ஆவணங்கள் இருந்த அறைக்கு சென்றுள்ளார்.

உரிய அனுமதி இன்றி அவர் அங்கு சென்றதாகக் கூறப்படுகிறது. மேலும், உள்ளே இருந்த சில ஆவணங்களை வெளியே எடுத்துச் சென்று ஜெராக்ஸ் எடுத்ததாகவும் கூறப்படுகிறது. தாசில்தாருடன் 4 பேர் வந்துள்ளனர். இந்த நிலையில், வேட்பாளர்கள் முற்றுகை போராட்டம் நடத்தவே, இரவோடு இரவாக விசாரணை நடத்தி, அந்த பெண் தாசில்தார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதுபற்றிய செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

Archived link

உரிய அனுமதி பெறாமல், கவனக் குறைவாக செயல்பட்டதால் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதேநேரத்தில், ஏன் அங்கு வந்தார், அவருடன் வந்தவர்கள் யார், கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் அங்கு அவர்கள் என்ன செய்தார்கள் என்று பல கேள்விகளை எதிர்க்கட்சிகள் எழுப்பியுள்ளன. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட தி.மு.க கூட்டணி கட்சி நிர்வாகிகள், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள தலைமைத் தேர்தல் அதிகாரியை சந்தித்து புகார் மனு அளித்துள்ளனர். இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

Archived link

கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் புகார் அளித்தது தொடர்பாக வெளியான வீடியோ…

Archived link

இந்த புகார் மனு அளித்தது தொடர்பாக கே.பாலகிருஷ்ணன் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் படத்துடன் பதிவிட்டுள்ளார்.

MADURAI 2.png

இதை, தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ இணைய தள பக்கத்திலும் வெளியிட்டுள்ளனர். இந்த பதிவில், அறிக்கையானது காகிதத்தில் பிரிண்ட் செய்து வழங்கும் வகையில் இருந்தது.

Archived link

தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில், இந்த செய்தி உண்மைதான். இதை வெளியிட்டது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் நாடு -மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்தான் என்று உறுதியாகிறது.

முடிவு:

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் பதிவு தகவல் உண்மையானததான். தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பாலகிருஷ்ணன் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். வாக்குப் பெட்டி இருந்த பகுதிக்கு பெண் தாசில்தார் சென்ற சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன்காரணமாக, அவருடைய பதிவை பலரும் ஷேர் செய்து வைரலாக்கி உள்ளனர்.

Avatar

Title:வாக்குப் பதிவு பெட்டி இருந்த மையத்துக்கு சென்ற தாசில்தார் – எதிர்க்கட்சிகள் புகார் உண்மையா?

Fact Check By: Praveen Kumar 

Result: True