வங்கிகளில் ரூ.1000-க்கு மேல் பணம் எடுக்க முடியாது- குழப்பம் தந்த செய்தி தலைப்பு!

சமூக ஊடகம் | Social பொருளாதாரம் I Economy

இனி இந்த வங்கிகளில் ரூ.1000க்கு மேல் பணம் எடுக்க முடியாது என்று குறிப்பிட்டு அறிவிக்கப்படாத பண மதிப்பு இழப்பு நடவடிக்கையா என்று கேள்வியை எழுப்பு ஒரு செய்தியை கலைஞர் செய்திகள் வெளியிட்டிருந்தது. அப்படி எந்த எந்த வங்கிகளில் இனி பணம் எடுக்க முடியாது என்று குறிப்பிடுகிறார்கள், அது உண்மையா என்று ஆய்வு மேற்கொண்டோம்.

தகவலின் விவரம்:

RBI 2.png
Facebook LinkArchived Link 1Article Link Archived Link 2

“இனி இந்த வங்கிகளில் ரூ.1000 க்கு மேல் பணம் எடுக்கமுடியாது” – அறிவிக்கப்படாத பணமதிப்பிழப்பு நடவடிக்கையா? என்று நிலைத்தகவலுடன் செய்தி ஒன்று பகிரப்பட்டுள்ளது. இந்த செய்தியை Kalaignar Seithigal ஃபேஸ்புக் பக்கம் 2019 செப்டம்பர் 25ம் தேதி வெளியிட்டுள்ளது. இதை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

சில தினங்களுக்கு முன்பு பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி அதன் செயல்பாடுகளுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்தது ரிசர்வ் வங்கி. இந்த கட்டுப்பாடுகள் ஆறு மாதங்கள் இருக்கும் என்று கூறப்பட்டது. இதன் மூலம் வங்கியில் டெபாசிட் செய்தவர்கள், ரூ.1000 மட்டுமே எடுக்க முடியும் என்று கூறப்பட்டது.

இந்த உத்தரவு மூலம் பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா வங்கியால் புதிய கடன் கொடுக்க முடியாது. பழைய கடனை புதுப்பிக்க முடியாது. அப்படி செய்ய வேண்டும் என்றால் ரிசர்வ் வங்கியின் அனுமதியைப் பெற வேண்டும். ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் வருகிற 28ம் தேதி நடைபெறுவதாக இருந்த வங்கியின் வருடாந்திர கூட்டத்தை ரத்து செய்வதாக வங்கியின் நிர்வாக இயக்குநர் ஜாய் தாமஸ் கூறியுள்ளார்.

Economic TimesArchived Link 1
Money ControlArchived Link 2

இந்த தகவல் உண்மையா என்று ஆய்வு மேற்கொண்டோம். ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையை, அதன் இணையதளத்தில் இருந்து எடுத்தோம். அதில், “வங்கிகள் ஒழுங்குமுறை சட்டம் 1949 பிரிவு 35ஏ-வின் கீழ் பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டு இருந்தனர்.  அந்த ஒரு வங்கியைத் தவிர இந்த உத்தரவின் கீழ் வேறு எந்த ஒரு வங்கிக்கும் இந்த கட்டுப்பாடு பிறப்பிக்கப்படவில்லை என்பது தெரிந்தது.

தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டபோது, ரிசர்வ் வங்கியின் இந்த நடைமுறை புதிது இல்லை, ஏற்கனவே பல கூட்டுறவு வங்கிகளுக்கு இதுபோன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பிரச்னைகள் சரி செய்த பிறகு தடை விலக்கிக்கொள்ளப்படும் என்று செய்திகள் தெரிவித்தன.

RBI Press ReleaseArchived Link

இதன் அடிப்படையில் கலைஞர் செய்திகளில் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று பார்த்தோம். கலைஞர் செய்திகளில், “இனி இந்த வங்களிகளில் ரூ.1000க்கு மேல் பணம் எடுக்க முடியாது என்று குறிப்பிட்டு இருந்தாலும், லீடிலேயே அதற்கு மாறான தகவலை தெரிவித்திருந்தனர். லீடில், “பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியின் மீது இந்திய ரிசர்வ் வங்கி சில கடுமையான கட்டுப்பாடு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது” என்று சரியான தகவலை குறிப்பிட்டு இருந்தனர்.

அறிவிக்கப்படாத பண மதிப்பு இழப்பு நடவடிக்கை பற்றி ஏதேனும் சந்தேகம் கிளப்புகிறார்களா என்று பார்த்தோம். தொடர்ந்து படித்தபோது, “வங்கியில் அடுத்த ஆறு மாதங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி விதித்துள்ளது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கியின் தலைமைப் பொது மேலாளர் யோகேஷ் தயாள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

RBI 3.png

வங்கியின் நலனுக்காகவும், வாடிக்கையாளர்களின் நலனுக்காகவுமே இந்த நடவடிக்கையை ரிசர்வ் வங்கி எடுத்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்” என்று குறிப்பிட்டு இருந்தனர்.

தொடர்ந்து படிக்கும்போது, வாடிக்கையாளர் ஒருவர் “இது அறிவிக்கப்படாத பண மதிப்பிழப்பு நடவடிக்கை போல உள்ளது” என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார் என்று இருந்தது. வங்கியில் இருந்து ரூ.1000 மட்டுமே எடுக்க முடியும் என்ற அறிவிப்பு அவருக்கு பண மதிப்பு இழப்பு நடவடிக்கை போல உள்ளது என்று கருத்து தெரிவித்திருந்தார்.

RBI 4.png

இதன் மூலம் செய்தியின் தலைப்பில் தவறு நடந்திருப்பது தெரிந்தது. தலைப்பில், “இந்த வங்கிகளில்” என்று பன்மையில் குறிப்பிட்டு உள்ளனர். ஆனால், செய்தியின் உள்ளே ஒரே ஒரு வங்கிக்குத்தான் இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது என்று சரியாக எழுதியுள்ளனர்.

மேலும், தலைப்பில் அறிவிக்கப்படாத பண மதிப்பிழப்பு நடவடிக்கையா என்று சந்தேகத்தை எழுப்பியிருந்தனர். செய்தியின் உள்ளே ரிசர்வ் வங்கியின் நடவடிக்கை அறிவிக்கப்படாத பண மதிப்பிழப்பு நடவடிக்கை போல உள்ளது என்று எங்கும் குறிப்பிடவில்லை. வாடிக்கையாளர் ஒருவர் “அறிவிக்கப்படாத பண மதிப்பிழப்பு நடவடிக்கை போல உள்ளது” என்று வேதனை தெரிவித்துள்ளார். அது அவருடைய கருத்து… தலைப்பில், அறிவிக்கப்படாத பண மதிப்பு இழப்பு நடவடிக்கை என வாடிக்கையாளர்கள் வேதனை என்று குறிப்பிட்டிருந்தால் தவறு இருந்திருக்காது. ஆனால், பல வங்கிகளில் பணம் எடுக்கத் தடை, அறிவிக்கப்படாத பண மதிப்பிழப்பா என்ற சந்தேகம் போன்றவை வாசகர்கள் தவறாக புரிந்துகொள்ளும் வகையில் உள்ளது.

அதேபோல், குட் ரிட்டர்ன்ஸ் தலைப்பில், “இனி வங்கி கணக்கிலிருந்து 1000 ரூபாய் மட்டுமே எடுக்க முடிமா? யாருக்கு இந்த ஆப்பு?” என்று குறிப்பிட்டுள்ளனர். இதன் மூலம் இது அனைவருக்குமான விஷயம் போலவே பதற்றம் ஏற்படுகிறது. செய்தியின் உள்ளே வந்தால், தலைப்பில் நீங்கள் படித்தது சரி, இனி வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.1000 மட்டுமே எடுக்க முடியும் என்று அதிர்ச்சியூட்டுகின்றனர். அடுத்த வரியில்தான், இந்த சட்டம் பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கு பொருந்தும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

RBI 5.png
Article LinkArchived Link

நம்முடைய ஆய்வில், பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா வங்கிக்கு மட்டுமே கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

வங்கியில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

கட்டுரையின் உள்ளே சரியான கருத்தைத் தெரிவித்துவிட்டு, தவறான புரிதலை ஏற்படுத்தும் வகையில் வாசகர்களை ஈர்க்கும் வகையில் தவறாக தலைப்பிடப்பட்டுள்ளது தெரிகிறது. இதன் அடிப்படையில் தலைப்பு தவறான புரிதலை ஏற்படுத்துகிறது என்பது உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு மற்றும் கட்டுரை தலைப்பில் தவறாக உள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:வங்கிகளில் ரூ.1000-க்கு மேல் பணம் எடுக்க முடியாது- குழப்பம் தந்த செய்தி தலைப்பு!

Fact Check By: Chendur Pandian 

Result: False